You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபேஸ்புக்கின் ஆளில்லா விமான சோதனை ஓட்டம் வெற்றி
தொலைதூரத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கும் இணைய சேவையை அளிப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தியால் இயங்கக் கூடிய ஆளில்லா விமானத்தின் இரண்டாவது சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது.
'அக்யூலா' என பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த ஆளில்லா விமானம் அரிசோனாவில் ஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் பறந்தது.
கடந்த கோடை காலத்தில் இந்த ஆளில்லா விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் நடைபெற்ற போது, கடுமையான காற்று காரணமாக தானியங்கி ஓட்டுநர் அமைப்பு குழப்பத்திற்கு உள்ளாகி, தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது.
இந்த முறை, ஆளில்லா விமானம் 3000 அடி உயரத்தில் பறந்தது. இது ஃபேஸ்புக் நிறுவனத்தின் நோக்கமான 60,000 அடி உயரத்தை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.
தனது ஆளில்லா விமானங்களை ஒரே நேரத்தில் பல மாதங்களுக்கு வானில் நிலை நிறுத்த வேண்டும் மற்றும் லேசர் மூலமாக அவற்றுக்கிடையே தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தனது ஆளில்லா விமானப்படைக்கு அந்த சமூக வலைத்தளம் பல தீவிரமான திட்டங்களை கொண்டிருக்கிறது.
கடந்த மே மாதம் நடந்து முடிந்துவிட்ட இந்த சோதனை ஓட்டம், வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக தற்போதுதான் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள வலைப்பதிவு ஒன்று மூலம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
2016-ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது போல் அந்நிறுவனம் தம்பட்டம் அடித்துக் கொண்டு வந்தாலும், தன்னுடைய ஆளில்லா விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதாக பின்னர் ஒப்புக் கொண்டது.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பினால் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, இந்த விபத்து குறித்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த முறை பொறியியல் குழுவினர், ஆளில்லா விமானத்தின் இறக்கைகளில் இழுவைத்திறனை அதிகரிக்கவும், தரையிறங்கும் போது மேல் எழும்பும் திறனை குறைக்கவும் 'ஸ்பாய்லர்கள்'- களை இணைத்துள்ளனர். மேலும், தானியங்கி ஓட்டுநர் அமைப்பின் மென்பொருளில் சில மாற்றங்களையும், விமானத்திற்கு சற்று மேம்பட்ட நுட்பமான இறுதி வடிவையும் தந்துள்ளனர் .
அந்த அணியினர் ஆளில்லா விமானம் தரையிறங்கும் காட்சிகள் உள்ளடக்கிய வீடியோ ஒன்றை எடுத்துள்ளதோடு, அதனை தங்கள் வலைப்பதிவிலும் இணைத்துள்ளனர்.
வானூர்தி தளங்கள் துறையின் இயக்குநரான மார்ட்டின் லூயிஸ் கோமெஸ் கூறும்போது, ''சில சிறிய மற்றும் எளிதில் பழுது நீக்கக் கூடிய பிரச்சனைகளினால் ஆளில்லா விமானம் பாதிக்கப்பட்டிருந்தது.'' என தெரிவித்துள்ளார்.
போயிங் 737 விமானத்தின் இறக்கைகளின் நீளத்தை கொண்டுள்ள 'அக்யூலா' ஆளில்லா விமானம், உலகம் முழுவதும் இணைய சேவை அளிக்க வேண்டும் என்ற ஃபேஸ்புக் நிறுவனத்தின் தீவிரமான திட்டங்களில் ஒன்றாகும்.
இந்த வாரம், தனது நிறுவனம் உலக மக்கள் தொகையில் கால் பங்குக்கு அதிகமாக, இரண்டு பில்லியன் பயனாளர்களை கொண்டிருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்திருந்தது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்