You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
20 ஆண்டுகளாக ராணுவம் இல்லாத நாடு: புதிய படை தயாராகிறது 500 பேருடன்!
கரீபியன் கடல் பகுதியில் அமைந்திருக்கும் நாடான ஹைத்தி நாட்டிற்கு 20 ஆண்டுகளாக ராணுவம் கிடையாது. ராணுவத்தை உருவாக்க இப்போது ஹைத்தி திட்டமிடுகிறது.
இயற்கைப் பேரிடர்களை சமாளிக்கவும், எல்லை பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இந்த லத்தீன் அமெரிக்க நாடு ஆண்களும் பெண்களுமாக 500 வீரர்கள் கொண்ட ராணுவத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
இடைநிலைக் கல்வி பயின்ற 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களும், இளம் பெண்களும் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது படைகளை ஹைத்தியில் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஏப்ரல் மாதம் ஐ.நா அறிவித்ததை அடுத்து, ராணுவத்தை உருவாக்கும் முயற்சியை ஹைத்தி அரசு தொடங்கியுள்ளது. ஐ.நா படைகள் வெளியேறிவிட்டாலும், ஹைத்தியின் காவல்துறைக்கு உதவி செய்வதற்காக ஐ.நா படையைச் சேர்ந்த சிலர் மட்டும் தங்கிவிடுவார்கள்.
ஐ.நா படைகள் வெளியேறுவதாக அறிவித்ததும், ஹைத்தி தனக்கான ராணுவத்தை உருவாக்கவேண்டும் என்ற சர்ச்சைகள் சூடுபிடித்தன. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், இளைஞர்கள் பயனடைவார்கள் என்பதால் பல்வேறு கட்சிகளும், அரசியல்வாதிகளும் இந்த கருத்துக்கு அமோக ஆதரவு அளித்தனர்.
மற்றொரு புறத்தில், இந்த நடவடிக்கையால் அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிபரோ, பிரதமரோ ராணுவத்தை தங்கள் விருப்பப்படி கைப்பொம்மையாக ஆட்டிவைக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
வரலாற்றில் பதிவாகியிருக்கும் ராணுவத்தின் அராஜகம்
ஹைத்தியின் சரித்திரத்தில் ராணுவத்தின் அராஜக செயல்கள் அழுத்தமாக பதிவாகியிருக்கின்றன. ஃப்ரான்சியோஸ் 'பாபா டாக்' டுவேலியர் மூலமாக 1950இல் தொடங்கிய பரம்பரை ஆட்சி 29 ஆண்டுகள் தொடர்ந்தது. அப்போது, அரச குடும்பத்தினர் 'டோண்டோன் மெகோட்ஸ்' தனியார் ராணுவத்தின் உதவியுடன் ஆட்சி புரிந்தார்கள். இந்த தனியார் ராணுவத்தின் கொடூரங்களும், அராஜகங்களும் பரவலாக அறியப்பட்டவை.
1986 - ஆம் ஆண்டு டுவேலியரின் மகன் ஜீன் க்ளாவுட், பிரான்சுக்கு சென்றுவிட்டார். அப்போது ராணுவத்தின் உயர் தலைமை ஆட்சியை கைப்பற்றியது.
1991-இல் ஹைத்தியின் குடியரசுத் தலைவர் ஜீன் பர்டாண்ட் எரிஸ்டீட், ஒரு ராணுவ புரட்சியை சந்தித்தார். அதற்கு பிறகு ராணுவமும், துணை ராணுவப்படைகளும் சுமார் மூன்று ஆண்டுகள் வரை மக்களுக்கு பல்வேறு கொடுமைகளை செய்துவந்தன. இதில் 4000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பல சர்வதேச உதவி வழங்கும் நாடுகள், ஹைத்தியில் தேசிய காவல் துறையை உருவாக்குவதற்காக பல பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளன என்பது சுவராஸ்யமான தகவல். இந்த உதவியால், பயிற்சியளிக்கப்பட்ட 15 ஆயிரம் காவல்துறையினர் தற்போது ஹைத்தியில் பணிபுரிகின்றனர். இந்தக் காவல்துறையை மேலும் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
இயற்கைப் பேரிடர்களை சிறப்பாக நிர்வகிக்கவும், கடத்தலை தடுப்பதற்கும் ராணுவம் உதவியாக இருக்கும் என்று ஹைத்தியின் தலைவர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்