You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி எங்கே?
இராக்கின் மொசூல் நகரில் உள்ள அல்-நூரி என்னும் பெரிய மசூதி ஒன்றில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி உரையாற்றுவதைப் போன்ற வீடியோ ஒன்று மூன்று ஆண்டுகள் முன்பு வெளியானது.
ஐ.எஸ். ஜிகாதிக் குழு அப்போதுதான் அந்த இராக்கிய நகரத்தைக் கைப்பற்றி அதைத் தங்களது கலீஃபகமாக பிரகடனம் செய்திருந்தது.
அப்போது பிரிட்டன் அளவுள்ள நிலப்பரப்பு ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆனால், ஜிகாதிகளுக்கு எதிரான சர்வதேசப் போரினால் அதன் பிறகு அவர்கள் பின்வாங்க நேரிட்டது.
தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் விலை அறிவிக்கப்பட்ட பாக்தாதி எங்கே இருக்கிறார் என்பதும் அதன் பிறகு மர்மமாகவே இருந்து வருகிறது.
பாக்தாதி முதல்முறை (ஒரே ஒருமுறையும்கூட) பொது வெளியில் தோன்றி மூன்றாண்டுகள் முடிந்துள்ள நிலையில் அவரது குழு முன்பு கட்டுப்படுத்திய நிலப்பரப்பில் பெரும்பாலானவற்றை இழந்துள்ளது.
மொசூல் நகரில் இருந்து ஐ.எஸ். குழுவை விரட்டுவதற்கான யுத்தம் தொடங்கிய பிறகு, பாக்தாதியின் பேச்சு பதிவு செய்யப்பட்ட குரலோசை கடந்த நவம்பர் மாதம் வெளியானது. அதன் பிறகு அவரது குரல் கேட்கப்படவே இல்லை.
மர்மமான இந்த அமைதிக்கு நடுவில் பாக்தாதியின் மரணம் குறித்த உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாயின.
ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா நகரின் மீது ரஷிய விமானப்படை கடந்த மே 28-ம் தேதி நடத்திய தாக்குதலில் பாக்தாதி கொல்லப்பட்டிருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக ரஷியாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் ஒலெக் சைரோமொலோட்டோவ் தெரிவித்தார்.
அவர் நிச்சயம் இறந்துவிட்டதாக கடந்த வாரம் ஓர் இரானிய அதிகாரி தெரிவித்தார்.
ஆனால் இந்த இரண்டு தகவல்களின் உறுதித் தன்மை குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ரஷிய அமைச்சரின் கருத்து வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையில், ரக்கா நகரில் இருந்து வெளியிட்ட வீடியோ ஒன்றில் பாக்தாதியின் பெயரைச் சொல்லாமல் "நமது ஷேக்" என்றே ஐ.எஸ். அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், பாக்தாதி உயிரோடு இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தாலிபான்களும், அல் கயிதாவும், தாலிபான் நிறுவனர் முல்லா முகமது ஒமார் இறந்த செய்தியை இரண்டாண்டுகளுக்கு மறைத்து வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொசூல் நகரம் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இல்லை.
சிரியாவின் ரக்காவிலும் அவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இந் நிலையில் சிரிய-இராக்கிய எல்லையை ஒட்டிய ஒரு பகுதியில் பாக்தாதி ஒளிந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
ஆள்வதற்கு ஒரு நிலப்பரப்பு இருக்கும் எவரும் தம்மை கலீஃபா என அழைத்துக்கொள்ளலாம் என்கிறது ஒரு சர்ச்சைக்குரிய சமய விதிமுறை.
ஐ.எஸ். "ஆளும்" நிலப்பரப்பு சுருங்கிவரும் இத் தருணத்தில் தம்மை கலீஃபாவாக அறிவித்துக்கொண்ட பாக்தாதி தென்படாமலே இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கும், எதிரிகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் அதிகமாக தேடப்படுபவர்
மற்ற ஜிஹாதித் தலைவர்களைப் போலல்லாமல் பக்தாதி, மிக அதிகத் தேவை இருந்தால் மட்டுமே பொதுவெளியில் தோன்றவோ அல்லது பேசவோ செய்திருக்கிறார். கலிஃபகம் அமைந்த அறிவிப்பை வெளியிடும்போது மற்றும் மோசுல் நகரைக் காக்க தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தபோது போன்ற சந்தர்ப்பங்கள் ஒரு உதாரணம்.
இஸ்லாமிய அரசு குழுவின் தலைமை வரிசையில் , உயர செல்லச் செல்ல, மேலிருப்பவர்களுடன் தொடர்பு என்பது அவர்களுக்கு விசுவாசமான சொற்ப எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
எனவே, பக்தாதி எங்கிருக்கிறார் என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
இதுதான், அவரை வலைவீசித் தேட சிறப்புப் படைகளை உருவாக்கியிருக்கும் அமெரிக்காவுக்கு, அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிவதை கடினமாக்குகிறது.
சிரியாவுக்கும் இராக்குக்கும் இடையே உள்ள எல்லைப்புறப் பகுதி, பக்தாதிக்கு சற்றுப் பாதுகாப்பான மற்றும் பழக்கமான நிலப்பரப்பைத் தருகிறது. அங்கு அவர் ஒளிந்து கொண்டு அவரைப் பிடிக்கவோ அல்லது கொல்லவோ எடுக்கப்படும் முயற்சிகளைத் தோற்கடிக்கலாம்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்