You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உக்கிரமடையும் மொசூலுக்கான மோதல்: தற்கொலை தாக்குதல்களில் ஐ.எஸ் தீவிரம்
இஸ்லாமிய அரசு என்று அழைத்துக் கொள்ளும் அமைப்பிடமிருந்து மொசூல் நகரை திரும்பக் கைப்பற்ற இராக் படைகள் முயற்சித்து வருவதால் அங்கு கடுமையான மோதல்களும், தற்கொலை தாக்குதல்களும் அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.எஸ் அமைப்பினரின் பிடியில் இருக்கும் கடைசி பகுதியான மொசூல் நகரின் பழைய நகர பகுதியில் வான்வழி தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உள்ளூர் தளபதிகள் நகரின் முழுக் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் சண்டையின் இறுதிக் கட்டத்தில், அதிகமான தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர். தற்கொலை குண்டு தாக்குதல்களில் பெண்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிரான முக்கிய தாக்குதல் அக்டோபர் 2016ஆம் ஆண்டு தொடங்கியது.
ஆயிரக்கணக்கான இராக்கிய பாதுகாப்பு படைகள், குர்திய பெஷ்மெர்கா போராளிகள், சுன்னி அரபு பழங்குடியினர் மற்றும் ஷியா போராளிகள் ஆகியோர் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி்ப் படையின் போர் விமானங்களின் தாக்குதல் உதவியுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்..
ராணுவ ஆலோசகர்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மொசூலின் கிழக்கு பகுதிக்கு முழு சுதந்திரத்தை அரசாங்கம் அறிவித்தது.
ஆனால் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள தெருக்கள் குறுகலாகவும், அதிக வளைவுகளும் இருப்பதால், அரசு அங்கு கடும் சவாலை சந்தித்து வருகிறது.
"மொசூலின் பழைய நகரின் தன்மையால் இந்த சண்டை நாளுக்கு நாள் கடுமையாகிக் கொண்டு வருகிறது" என இராக்கின் உயர் பயங்கரவாத தடுப்பு சேவையின் தளபதி லெஃப்டினென் ஜெனிரல் அப்துல்கனி அல் அசாதி ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் அமைப்பினருக்கு எந்த நிலைகள் உதவியதோ அதே நிலை ஸ்னைப்பர்களில் இருந்து இராக் படைகளை பாதுகாப்பதற்கும் உதவியது என அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்:
கடந்த மூன்று நாட்களாக சில அண்மை பகுதிகளில் எதிரிகள் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்துவதாகவும் குறிப்பாக பெண்களை அதில் பயன்படுத்துவதாகவும் அதற்கு முன்பு அவர்கள் ஸ்னைப்பர் தாக்குதல்களையும் குண்டு தாக்குதல்களையும் நடத்தியதாகவும், மற்றொரு பயங்கரவாத தடுப்பு சேவையின் லெஃப்டினெண்ட் ஜெனரல் சமி அல் அரிதி ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
தற்கொலை குண்டு தாக்குதல்தாரிகளில் சிலர் பதின்ம வயது பெண்கள் என்று கூறப்படுகிறது.
திங்களன்று பெண்களைக் கொண்டு இரண்டு தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் வெடிகுண்டுகளுடன் படைகளை அணுக வந்த ஏழு பெண்கள் தடுக்கப்பட்டனர் என ஏபி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
அம்மாதிரியான தாக்குதலைகளை தடுக்க, பழைய நகரத்தைவிட்டுச் செல்லும் பெண்கள் தங்கள் முகத்திரையை எடுக்க வேண்டும் என்றும் ஆண்கள் தங்கள் சட்டைகளை கழற்ற வேண்டும் என்றும் தற்போது ஆணையிட்டு வருவதாக இராக்கிய படை தளபதிகள் தெரிவிக்கின்றனர்.
மொசூலில், ஐ.எஸ் அமைப்பினர் ஒரு லட்சம் பேரை மனித கேடயங்களாக பிடித்து வைத்திருப்பதாக ஐ.நா., தெரிவிக்கிறது.
அக்டோபர் மாதம் இந்த தாக்குதல் தொடங்கிய சமயத்தில் 6000 தீவிரவாதிகள் இருந்ததாகவும் தற்போது 300 தீவிரவாதிகள் மட்டுமே இருப்பதாக நம்புவதாகவும் இராக் ராணுவம் தெரிவித்துள்ளது.
"வெற்றி மிக அருகில்" இருப்பதாக ப்ரிகாடியர் ஜெனரல் யஷ்யா ரசூல் அரசு தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். மற்றொரு தளபதி ஐந்து நாட்களிலிருந்து ஒரு வாரத்திற்குள் இந்த சண்டை முடிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்