You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐ.எஸ். பிடியிலிருந்து ராக்கா நகரை மீட்கும் முயற்சியில் புகழ்பெற்ற சுவர் தகர்ப்பு
அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியா படைகள், இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் குழுவிடம் இருந்து ராக்கா நகரை மீட்கும் முயற்சியில் பழைய நகரத்தின் புகழ்பெற்ற சுவரை தகர்த்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது.
சிரியா ஜனநாயகப் படைகள் முன்னேறுவதற்கு வசதியாக கூட்டணிப் படைகள், வரலாற்று சிறப்புமிக்க ரஃபிகா சுவரின் இரண்டு பகுதிகளில் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ராக்காவை 2014 ஆம் ஆண்டு கைப்பற்றிய ஐ.எஸ் குழு, அதை தங்கள் ராஜ்ஜியத்தின் தலைநகராக அறிவித்தது. ராக்கா நகரம் பல மாதங்களாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு முக்கியமான மையமாக திகழும் ராக்காவை சிரியா படையினர் சுற்றி வளைத்ததும், ஐ.எஸ் குழுவின் முக்கியத் தலைவர்கள், தங்கள் ஆதிக்கமுள்ள டெய்ர் அல்-ஜோர் மாகாணத்திற்கு சென்றுவிட்டனர்.
தற்போது ராக்காவில் மேலும் 2,500 ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதாக அமெரிக்க கூட்டணிப்படைகள் கருதுகின்றன. ரஃபிகா சுவரில் 25 மீட்டர் (80 அடி) அளவிலான இரண்டு சிறிய பகுதிகளே விமானத்தால் தகர்க்கப்பட்டதாக கூறும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம், மீதமுள்ள 2,475 மீட்டர் அளவிலான சுவரை பாதுகாக்க உதவப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
சிரியா படைகள் நகரினுள் நுழையாமல் இருப்பதற்காக, சுவரின் திறந்திருக்கும் பகுதிகளில் கண்ணி வெடிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிப்பொருட்களை ஐ.எஸ் புதைத்து வைத்திருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் கூறுகிறது.
அரபு-குர்து இன கூட்டணிக்கு ஐ.எஸ் வசம் இருந்து பழைய நகரத்தை மீட்டெடுப்பது மிகவும் முக்கியமானதாகும்.
நவம்பர் மாதம் முதலே ராக்காவை நோக்கி முன்னேறிச் செல்லும் அமெரிக்க ஆதரவு பெற்ற படைகள், நகரை மீட்பதற்கான தாக்குதலை ஜுன் ஆறாம் தேதியன்று நடத்தின.
ராக்காவை கைப்பற்றி ஐ.எஸ் குழுவுக்கு ஒரு "தீர்க்கமான அடி" வழங்கப்போவதாக கூட்டணிப் படைகள் கூறுகின்றன.
ஜூன் மாதத்தில் குறைந்தது 173 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவித்தாலும், உண்மையான எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கலாம். ராணுவத்தின் துரிதமான வெற்றிக்காக பொதுமக்கள் பலியாகக்கூடாது என்றும் ஐ.நா வலியுறுத்துகிறது.
நடைபெற்று வரும் சண்டையின் காரணமாக மக்கள் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மக்கள் தப்பிச் செல்லாமல் ஐ.எஸ் தீவிரவாதிகள் தடுக்கிறார்கள் என்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன.
சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிரான சிறிய அளவிலான மோதல், ஆறு ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்திருப்பதோடு, மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்களின் உயிரைப் பலி வாங்கிவிட்டது. மேலும், 11 மில்லியன் மக்கள் சண்டையினால் இடம் பெயர்ந்துவிட்டனர்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்