You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதியின் இஸ்ரேல் பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாவது எதனால்?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேல் நாட்டில் ஜூலை 6 வரை மேற்கொள்ளவுள்ள சுற்றுப் பயணத்தை செவ்வாய்க்கிழமை துவக்கியுள்ள நிலையில், இது வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணமாகப் பார்க்கப்படுவது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேலில் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.
இந்தியாவில் உள்ள ஊடகங்களும் வல்லுநர்களும் இப்பயணத்தை ஒரு மைல் கல்லாகக் கருதுகின்றனர்.
இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த 25 ஆண்டுகளாக ராஜாங்க உறவு கொண்டுள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு, வேளாண்மை, நீர் மேலாண்மை மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் சமீபத்திய ஆண்டுகளில் தங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ளன.
முக்கியமாக, இந்தப் பயணத்தின்போது மோதி பாலஸ்தீனியப் பகுதிகளுக்கு செல்ல மாட்டார்.
இரு நாடுகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் "வரலாற்று சிறப்புமிக்க" என்னும் சொல் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் மிகவும் சிறப்புமிக்க ஒரு கூட்டாளியான இஸ்ரேலுக்கு, நாளை வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை தொடங்கவுள்ளேன்," என்று ஜூலை 3-ஆம் தேதி மோதி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
அதைப்போலவே இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும், "எனது நண்பர் மோதி இஸ்ரேல் வருவார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பயணம். கடந்த 70 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவரும் இஸ்ரேல் வந்ததில்லை," என்று கடந்த ஜூன் மாத இறுதியில் கூறியிருந்தார்.
மோதியின் இப்பயணம், "இருநாட்டு உறவுகளின் போக்கு மாறிவருவதும், அதன் கட்டமைப்பு மாறிவிட்டதும் முன்னெப்போதும் இல்லாத முக்கியத்துவம் பெறுவதை உணர்த்துகிறது," என்று இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மோன் கூறியுள்ளார்.
மோதி பயணத்தின் நிகழ்ச்சி நிரல் என்ன?
நேதன்யாகுவுடன் "பரந்த அளவிலான" பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறியுள்ள மோதி, பயங்கரவாதம் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் பொதுவான சவால்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவையும் இப்பயணத்தில் முக்கிய கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, வேளாண்மை, வர்த்தகம், ராஜாங்க உறவு மற்றும் நீர் மேலாண்மை ஆகியவையும் பேச்சுவார்த்தையை ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோதியின் "மேக் இன் இந்தியா" திட்டத்தை வலிமைப்படுத்தும் வகையில் இந்திய நிறுவனங்களுடன் கூட்டு தொழில் தொடங்க இஸ்ரேல் நாட்டிலுள்ள ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதீத நாட்டம் காட்டியுள்ளன.
கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக இந்தியாவின் வடக்கிலுள்ள மாநிலமான உத்திர பிரதேசத்துடனும் ஒரு உடன்படிக்கை கையெழுத்தாகும் வாய்ப்புள்ளது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் 4,000 முதல் 5,000 இந்திய வம்சாவளியினரிடையே, ஜூலை 5 அன்று மோதி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2008-ஆம் ஆண்டில் மும்பை நகரில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் தப்பி உயிர்பிழைத்த ஹோல்ஸ்பெர்க் மோசேவையும் மோதி சந்திக்கவுள்ளார். அச்சம்பவத்தில் கொல்லப்பட்ட எட்டு இஸ்ரேலியர்களில் மோசேவின் பெற்றோரும் அடக்கம்.
பாலஸ்தீன பகுதிகள் தவிர்ப்பு
பாலஸ்தீனத்தின் ஆட்சி அதிகாரத்தின் மையமாகவும் அதன் அதிகாரப்பூர்வமற்ற தலைநகராகவும் உள்ள ரமல்லா நகருக்கு மோதி பயணிக்க மாட்டார்.
அரசியல் உறவுகளில் சமநிலை மேற்கொள்வதற்காக இஸ்ரேல் பயணிக்கும் தலைவர்கள் ரமல்லா நகருக்கும் செல்வது வழக்கம். மோதி அங்கு பயணிப்பதை தவிர்ப்பதை பலரும் விமர்சித்துள்ளார்.
"நரேந்திர மோதியின் இஸ்ரேல் பயணம் அந்நாடு பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பதையே வலிமைப்படுத்தும்," என்று இஸ்லாமிய அரசியல்வாதியான, அசாதுதீன் ஓவாய்சி கூறியுள்ளார்.
மோதி வெளிப்படையாக பாலஸ்தீனத்தை தவிர்ப்பது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன விவகாரத்தை தனித்தனியாக அணுகும் உத்தியை சமிக்ஞை செய்வதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
உற்சாகம் மிகுந்த கணிப்புகள்
இப்பயணம் குறித்த நேர்மறையான கருத்துக்களுடைய ஊடகங்கள் மற்றும் வல்லுநர்கள், இது இரு நாட்டு உறவின் பல "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த" நிகழ்வுகளில் முதன்மையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளனர்.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியா, தனது ஜூன் 4-ஆம் நாள் பதிப்பில் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் "இந்தியாவும் இஸ்ரேலும் கூட்டாளிகளாக கையோடு கை சேர்த்துக்கொண்டு வருங்காலத்தை நோக்கி பயணிக்கின்றன" என்று எழுதியுள்ளது. இப்பயணம் இருநாட்டு அரசுகளின் நெருக்கமான ஒத்துழைப்பை மட்டுமல்லாமல், இரு நாட்டு மக்களிடையே நிலவும் "மிகுந்த அனுதாபம் மற்றும் இணக்கம்" ஆகியவற்றையும் பிரதிபலிப்பதாக அத்தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய ஆங்கில நாளிதழான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது தலையங்கத்தில் மோதியின் இப்பயணம், "அவர் டெல் அவிவில் இறங்கும்பொழுது அவரின் பெயருக்கு பல `முதல் முறை` சாதனைகளைப் பெற்றுத்தரும்," என்று எழுதியுள்ளது. "மோதி ஹீப்ரூ மொழியில் ட்விட்டரில் பதிவிட தொடங்கும்போது, ஒரு முக்கியத்துவம் மிக்க பயணம் தொடங்குகிறது," என்று அந்நாளேடு கூறியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் அருண் கே.சிங், பரவலாக வாசிக்கப்படும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில், "இரு நாட்டு உறவுகளை பாதுகாப்பதில் உறுதியான நடவடிக்கை," என்று மோதியின் பயணம் பற்றி கூறியுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் எஸ்.நிகல் சிங் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழில், மோடி கற்பனைரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் இரு தரப்புக்கும் பலனளிக்கக்கூடிய நேரான மற்றும் குறுகலான பாதையையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளார்.
மத்திய வலதுசாரி கொள்கையுடைய இந்தி நாளிதழான தைனிக் ஜாக்ரனில், மூத்த பத்திரிக்கையாளர் துஃபைல் அகமது எழுதியுள்ள கட்டுரையில், "இந்திய-இஸ்ரேலிய ஒத்துழைப்பு பாதுகாப்பு உறவுகளுடன் மட்டும் அடங்குவதல்ல. வேளாண்மை துறையில் இஸ்ரேல், ஒன்பது இந்திய மாநிலங்களுக்கு அளிக்கும் ஆதரவு இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை வலிமைப்படுத்துவது. மோதியின் பயணம் இரு நாடுகளின் ராஜாங்க மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலிமைப்படுத்தி, இரு நாட்டு மக்களையும் செழிப்படைய செய்யும்," என்று எழுதியுள்ளார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்