You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மார்பகங்கள், தொப்புள், முழங்கால் தெரியாமல் உடையணிய உகாண்டா அரசு உத்தரவு
உகாண்டாவில் அரசாங்கப் பணியாளர்கள் கண்ணியமாக உடையணிந்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுளது.
பெண்கள் மார்பகங்களை மறைக்கும் வகையில் உடையணிந்து வரவேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு அரச பணியில் இருக்கும் பெண்களை இலக்குவைத்தே பிறப்பிக்கப்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது என்று அங்குள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
முழங்காலுக்கு மேலாக இருக்கும் குட்டைப் பாவாடைகளை அணிந்து பெண் பணியாளர்கள் வேலைக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பளிச்சென்று இருக்கும் வண்ணங்களில் தலைமுடியை ஒய்யாரமாக பின்னிக்கொண்டு வேலைக்கு வரவேண்டாம் எனவும் அரச உத்தரவு தெரிவிக்கிறது.
அதேபோல் ஆடவர்கள் தலைமுடியை ஒட்டவெட்டி, டை மற்றும் கோட் அணிந்து வேலைக்கு வரவேண்டும். ஆனால் கண்ணைப்பறிக்கும் வண்ணத்தில் சட்டை அணிந்து வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
உகாண்டா சமூக ரீதியில் பழமைவாதத்தில் ஊறிப்போன ஒரு நாடு என்றும், தற்போதைய உத்தரவு ஏற்கனவே இருக்கும் சட்டங்களை நினைவுபடுத்தும் நோக்கிலேயே உள்ளது என்றும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
பலவண்ன நகப்பூச்சுக்கும் தடை
அரசாங்கப் பணியில் உள்ளவர்கள் கையில்லாத சட்டை அணிவது, உள்ளாடைகள் தெரியும் வகையில் உடையணிவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பெண்கள் மார்பகங்கள், தொப்புள், முழங்கால் மற்றும் பின்புறங்கள் தெரியாத வகையில் ஆடை அணிந்து பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நகங்களை மூன்று செ.மீ நீளத்துக்கு மேல் வளர்க்கக் கூடாது என்றும் அரசு எச்சரித்துள்ளது.
பல வண்ணங்களில் நகப்பூச்சு அணிந்து வருவது அரச அலுவலகங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
அரசு பணியில் உள்ள பெண்கள் முக அலங்காரத்தை எளிமையாக செய்துகொள்ளவும், ஆண் பணியாளர்கள் தலைமுடியை ஒட்டவெட்டியிருக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனினும் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் இச்சட்டங்களை கடைபிடிக்க வேண்டும் என்று இப்போது ஏன்அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்பதை உடனடியாக தெளிவாகத் தெரியாத சூழல் நிலவுகிறது.