You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மது அருந்த எல்லை கடந்து மாட்டிக்கொண்ட பிரிட்டிஷ் விளையாட்டுக் குழு - இது பின்லாந்து-ரஷ்ய எல்லையில்
மலிவு விலை மதுவுக்காக தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரி செல்பவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம் . இந்தியாவில் மட்டும் நடப்பதல்ல இது. பின்லாந்து சென்றிருந்த பிரிட்டிஷ் ஓரியன்டர்கள் குழு ஒன்று ரஷ்யாவில் மலிவு விலை பீயருக்காக எல்லை கடந்து, ஃபின்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.
வரைபடம் மற்றும் திசைக்காட்டும் கருவியை பயன்படுத்தி அறியாத இடங்களுக்கு வழிகண்டுபிடித்து சென்றடையும் விளையாட்டு "ஒரியன்டரிங்" என்று அழைக்கப்படுகிறது. இந்த விளையாட்டில் கலந்துகொள்ள ஃபின்லாந்து வந்திருந்த ஐக்கிய ராஜ்ஜிய குழுவினர்தான் ரஷ்யா சென்று பியர் குடித்து மாட்டியுள்ளனர்.
ஃபின்லாந்தின் தெற்கு பகுதியில் நடைபெற்ற ஒரியன்டரிங் விளையாட்டு போட்டியில் கலந்துகொண்ட பெயர் குறிப்பிடப்படாத பிரிட்டிஷ் பிரஜைகள், எல்லை கடந்து ரஷ்யாவுக்கு சென்று சில பியர்களை குடிப்பதற்கு ஏற்பட்ட ஆசையை கட்டுப்படுத்த முடியாமல், அங்கு சென்று பியர் குடித்துள்ளதாக ஃபின்லாந்தின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான யுஎல்இ தெரிவித்திருக்கிறது,
எல்லையோரத்தில் காரை நிறுத்திவிட்டு நடந்தே இவர்கள் ரஷியாவுக்குள் சென்றுள்ளனர். கார் நிறுத்தப்பட்டிந்த இடத்தை கடந்து சென்ற ஃபின்லாந்து எல்லை ரோந்துப்படை அந்த காரை பார்த்து, அவர்களை கைது செய்துள்ளது.
"ரஷ்ய பகுதியில் 15 நிமிடம் நடந்து செல்லும் தூரத்தில் இவர்கள் சென்றிருந்தனர். பல பியர் கேன்களை அவர்கள் குடித்திருந்தனர்" என்று ஃபின்லாந்து எல்லையோர காவல்படையின் புலனாய்வாளர் டிமோ ஹாக்கினன் தெரிவித்திருக்கிறார்.
இந்த நால்வரும் தங்களுடைய குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், சட்டத்திற்கு புறம்பாக இவர்கள் மேற்கொண்ட இன்பப்பயணத்திற்காக அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதன் பின்னர் இவர்கள் விடுதலை செய்யப்பட்டு, ஐக்கிய ராஜ்ஜியம் செல்ல அனுமதிக்கப்படுவர்.
மலிவான மது
இவர்கள் சென்ற நாடுகளில் ரஷ்யாவையும் சேர்த்துக்கொள்ள விரும்பியதற்கு அப்பாற்பட்டு, ஃபின்லாந்தை விட ரஷ்யாவில் மதுபான விலை மிகவும் மலிவாக இருப்பது, இந்த குழுவினர் எல்லை கடந்து செல்ல தூண்டப்படுவதற்கு ஒரு காரணமாகும்.
மலிவான மது வாங்குவதற்காக ஃபின்லாந்து பிரஜைகள் வழக்கமாக படகில் எஸ்டோனியாவை கடந்து செல்கின்றனர்.
கடந்த வாரத்தில் மட்டும் இத்தகைய சம்பவம் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது என்று சநோமாட் செய்தித்தாள் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக, ஒரு சாகச விடுமுறையில் இருந்த ஜெர்மனி சுற்றுலா குழு ஒன்று, பாலம் ஒன்றை கடந்து ரஷ்யாவில் 6 நிமிடங்கள் இயற்கைக் காட்சிகளை ரசித்துள்ளனர்.
எல்லைக்கு மிகவும் அருகில் இருந்தது, அவர்களுக்கு அதிக உற்சாகத்தை வழங்கியிருந்தது. சற்று நேர "எல்லை குற்றம்" நல்லதாகவே அமையும் என்று அவர்கள் எண்ணியுள்ளனர். "இது அவர்களுக்கு துணிச்சலான செயலாக இருந்திருக்கலாம்" என்று எல்லையோர பாதுகாப்பு படையை சேர்ந்த ஹாக்கினன் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்