You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனிதனே மாடாக மாறி ஏர் உழும் ஏழை விவசாயின் பரிதாப நிலை
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், சாலம்பாத் கிராமத்தில் வசிக்கும் சீதாராம், மற்ற விவசாயிகளைப் போலவே வயலை உழுகிறார் சாகுபடி செய்வதற்காக. தன்னிடம் இருக்கும் ஒரு எருமையை ஏரில் பூட்டி, மற்றொரு எருமைக்கு பதிலாக தன்னையே ஏரில் பூட்டிக் கொண்டு உழவு செய்கிறார். ஏர் ஓட்டுவது யார்? அவரது மனைவி முன்னி தேவி.
விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சங்கடங்கள், பிரச்சனைகளும் சர்ச்சைகளாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் விவசாயி சீதாராமின் இந்த வாழ்க்கை, விவசாயிகளின் அவலநிலையையும், தவிப்பையும் பிரதிபலிக்கிறது.
தோராயமாக இரண்டு ஏக்கர் நிலத்தின் உரிமையாளரான சீதாராமிடம் இருப்பதோ ஓர் எருமைமாடு மட்டும்தான். வயலில் உழுவதற்கு மற்றொரு எருமைமாட்டை வாங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை. எனவே, அவர் வேறு வழியில்லாமல், தன்னுடைய எருமைமாட்டுக்கு ஜோடியாக இன்னொரு பக்கம் ஏரில் தன்னையே பூட்டிக் கொண்டு, வயலில் களம் இறங்கிவிட்டார்.
"என்னிடம் ஒரேயொரு எருமை மட்டும்தான் இருக்கிறது, நானும் அதனுடன் சேர்ந்து வயலில் இறங்கினால் மட்டுமே விவசாயம் செய்யமுடியும். சிதிலமான வீடு மட்டுமே எனக்கு சொந்தம், உதவி செய்ய யாருமே இல்லை" என்று பிபிசியிடம் பேசிய சீதாராம் விரக்தியை வெளிப்படுத்தினார்.
சீதாராமின் வலது கை, மணிக்கட்டுக்கு மேலே இல்லை. கை வெட்டுப்பட்டால் என்ன? வயலை உழுவதற்கு, தனது கால்நடையுடன் சேர்ந்து பாடுபட அவரிடம் தோள் இருக்கிறதே!
மாற்றுத்திறனாளியான அவருக்கு ஆதார் அட்டை இல்லை, இதனால் அரசின் ஆதரவான ஓய்வூதியமும் கிடைப்பதில்லை.
தனது கையை சுட்டிக்காட்டும் சீதாராம், "கை இல்லை, ஆதார் அட்டையும் கிடைக்கவில்லை, நீங்கள் உதவி செய்தால், ஆதார் அட்டை கிடைத்தாலும் கிடைக்கலாம்" என்று வேண்டுகோள் விடுத்தார் அவர்.
சீதாராமின் சிக்கல் இத்துடன் முடிந்துவிடவில்லை, அது தொடர்கதையாய் தொடர்கிறது. இரண்டு ஆண்டுகளாக கரும்பு பயிரிட்டேன், கருகிப்போயிவிட்டது, லாபமும் இல்லை, இழப்பீடும் கிடைக்கவில்லை என்கிறார் அவர்.
"விவசாயத்தில் ஒன்றுமே கிடைப்பதில்லை. இரண்டு வருடங்களாக கரும்பு பயிரிட்டால் கருகிப் போகிறது, நெல் விதைத்தால் விலங்குகள் நாசம் செய்துவிடுகின்றன. வாழ்வதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை" என்று விரக்தியில் பேசுகிறார் சீதாராம்.
அனாதரவாய் நிற்கும் விவசாயி சீதாராமுக்கு ஆதரவாய் தோள் கொடுத்து உறுதுணையாய் இருப்பது அவர் மனைவி முன்னி தேவி மட்டுமே.
கண்களில் நீர் ததும்ப பிபிசியிடம் பேசும் முன்னி தேவி, "வயலை உழுவதற்காக என்னுடைய கணவர் எருமையுடன் சேர்ந்து உழைக்கிறார், அவரது தோள்பட்டையில் ஏற்படும் காயங்கள் வடுக்களாய் தங்கிப்போகும். என்னால் என்ன செய்ய முடியும்? அவரை ஏரில் பூட்டி உழுவதைத் தவிர?" என்று புலம்புகிறார்.
"வறுமையில் இருக்கும் எங்களால், பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியவில்லை. வேலைக்காக, வயிற்றுப் பிழைப்புக்காக படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது" என்று முன்னி தேவி வருந்துகிறார்.
சீதாராம்-முன்னிதேவி தம்பதிகளின் மகன் ராகுல் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். "பத்தாம் வகுப்பு வரைதான் படித்தான். எங்களுக்கு அவ்வளவு விவரம் பத்தாது, எனவே அரசு உதவி எதுவும் கிடைக்கவில்லை" என்றும் முன்னி சொல்கிறார்.
"வயலில் பயிர்கள் கருகியது, இழப்பீடு கிடைக்கவில்லை, விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட்டன, ஆனால் என்னுடைய பங்குக்கு எதுவும் நடக்கவில்லை. வீடு இடிந்து கிடக்கிறது, ஆனால், குடியிருக்க வீடு கிடைக்கவில்லை. எங்களுடைய நிலை பற்றி யாருக்கும் கவலையில்லை" என்ற வருத்தத்தை வெளிப்படுத்துகிறார் சீதாராம்.
பிஜ்னோர் மாவட்ட ஆட்சியர் ஜகத்ராஜ் திரிபாதியிடம், சீதாராமின் பிரச்சனை பற்றி பிபிசி செய்தியாளர் பேசினார். தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்திருக்கிறார்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், சீதாராமின் குடும்பத்தினரை, ஜகத்ராஜ் திரிபாதி, தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்துப் பேசினார். தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தார்.
தொடர்பான செய்திகள்:
"சீதாராமின் குடும்பத்தினருக்கு ஆதார் அட்டையை உடனடியாக வழங்கத் தேவையான ஏற்பாடுகளை செய்கிறேன். அதன்மூலம் அரசின் நலத்திட்டங்களின் உதவி அவர்களுக்கு கிடைக்கும்" என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
"பிரதமமந்திரி வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், சீதாராமிற்கு வீடு கட்டித் தருகிறோம். இதைத்தவிர, அரசின் வேறு எந்த நலத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு உதவி செய்யமுடியும் என்று ஆலோசித்து, அது குறித்து அரசுக்குக் கடிதம் எழுதுகிறேன்" என்றும் பிஜ்னோர் மாவட்ட ஆட்சியர் ஜகத்ராஜ் திரிபாதி நம்பிக்கை அளித்தார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்