You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எவரெஸ்ட் சிகரத்தை அளவிடும் நடவடிக்கையில் நேபாளம் தீவிரம்
2015 ஏப்ரல் மாதம் நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய பூகம்பத்தை தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் மாறியிருக்கலாம். எனவே, எவரெஸ்ட் சிகரத்தை அளவிடும் முயற்சியில் நேபாளம் ஈடுபட்டுள்ளது. அந்த நடவடிக்கைகள் நிறைவடைய இரண்டு ஆண்டுகள் ஆகலாம்.
முந்தைய கணக்கெடுப்புகளின் அடிப்படையில், 8,848 மீட்டர் (29,029 அடி) அளவைக் கொண்ட இமயமலையின் புவியியல் நிலையும் பூகம்பத்தால் மாறியிருக்கக்கூடும் என்று நேபாள கணக்கெடுப்புத் துறை தெரிவிப்பதாக, `காத்மண்டு` போஸ்ட் பத்திரிகை கூறுகிறது.
இந்தப் பணிகள் இரண்டு ஆண்டுகள் வரை நடைபெறும் என்று கூறப்படும் நிலையில், காலநிலை மாற்றத்தினால் இமயமலையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும் இந்த கணக்கெடுப்பு வெளிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்த கணக்கெடுப்பிற்கு இந்திய பணத்தில்140 மில்லியன் ரூபாய்கள் ($ 1.35m; £ 1m) செலவாகும் என்று அந்த பத்திரிகை கூறுகிறது.
இமயமலையை அளவெடுக்கும் பணி, பனிமலையைச் சுற்றியிருக்கும் மூன்று பகுதிகளில் இருந்து எடுக்கப்படும். உபகரணங்களை சிகரத்திற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஷெர்பாக்களும் ஈடுபடுத்தப்படுவார்கள். எவரெஸ்ட் சிகரத்தை அளவிடும் பணியில் நேபாளம் மட்டுமே தற்போது ஈடுபடவில்லை. எவரெஸ்ட் சிகரத்தை அளவிடும் பணியில் ஈடுபடப்போவதாக இந்தியா கடந்த வாரம் தெரிவித்திருப்பதாக `த டெக்கான் ஹெரால்ட்` கூறுகிறது.
எனினும், "2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பம் எவரெஸ்டை சுருக்கிவிட்டதா" என்பதை அறியும் முயற்சியில், இந்தியாவும் தங்கள் வளங்களை நேபாளத்துடன் பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற கருத்து புவியியலாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
எவரெஸ்ட் சிகரத்தை அடைபவர்களின் லட்சியத்தின் இறுதிச் சவாலாக கருதப்படும் `ஹிலாரி முனை` அமிழ்ந்து போய்விட்டதான சர்ச்சையும் எழுந்துள்ளது.
பிரிட்டன் நாட்டு மலையேற்ற வீரர் ஒருவர், நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில், ஹிலாரி முனை அழிந்துவிட்டதாக கடந்த மாதம்
கூறியிருந்தார். எனினும், இந்தக் கூற்று வெளியிடப்பட்ட உடனே, அதனை மறுத்த நேபாள ஷெர்பாக்கள் இருவர், ஹிலாரி முனை இன்னமும் இருப்பதாகவும், ஆனால் அது பனியால் மூடியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்