லண்டன் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு 'பாக்கெட் மணியை' தானம் வழங்கிய 6 வயது சிறுவன்
தன்னிடம் உள்ள பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக, லண்டனில் தீவிபத்து ஏற்பட்ட கிரென்ஃபெல் டவர்கட்டடத்துக்கு சென்ற ஒரு 6 வயது சிறுவன், அங்கு வாழ்ந்து வந்த மக்களுக்காகதான்வருந்துவதாக தெரிவித்தான்.

பட மூலாதாரம், PA
தீ விபத்து ஏற்பட்ட மேற்கு லண்டன் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற சிறுவன் ஆல்ஃபி லிண்ட்ஸே, தனது தகரப்பெட்டியில் இருந்த 70 பவுண்டுகள் பணத்தினை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு எடுத்துச் சென்றான்.
சிறுவன் ஆல்ஃபியின் தந்தையான ஆர்தர், தீ விபத்து தொடர்பான துயரத்தை தொலைக்காட்சியில் கண்ட தனது மகன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்பியதாக தெரிவித்தார்.
கென்ஸிங்டன் ஆயரான கிரஹாம் டாம்லினிடம் (பிஷப் ) தான்வைத்திருந்த பணத்தை ஆல்ஃபி வழங்கியுள்ளார். சிறுவன் ஆல்ஃபியின் செய்கையை உண்மையிலேயே அற்புதமான ஒன்று என்று கிரஹாம் டாம்லின் வர்ணித்துள்ளார்.

பட மூலாதாரம், AFP/GUILIO THUBUM
'தீ விபத்தால் கவலை கொண்டேன்'
தன்னை சந்திக்க சிறுவன் ஆல்ஃபி லிண்ட்ஸே வந்தது குறித்து ஆயர் கிரஹாம் டாம்லின் விவரிக்கையில், ''சிறுவன் ஆல்ஃபி ஒரு சிறு பையை தன்னிடம் இருந்த தகரப்பெட்டியில் இருந்து எடுத்தவுடன். நான் அவனிடம் ஏதாவது நிதி சேகரிக்கிறாயா என்று வினவினேன். அதற்கு அவன், இல்லை, இது எனது `பாக்கெட் மணி`என்றான்'' என்று கூறினார்.
''இது மிகவும் அற்புதமான செய்கையாகும். லண்டனில் நம்ப முடியாத அளவு இரக்கம் உள்ளது என்பதற்கு இது ஒரு சிறு அடையாளமாக அமைந்துள்ளது'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
''தற்போதுள்ள சூழ்நிலையில் போதுமான உடை, உணவு போன்றவை நம்மிடம் இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்திட பணம் வேண்டும் என்ற தேவை தற்போது உள்ளது'' என்று தற்போதைய சூழல் குறித்து ஆயர் கிரஹாம் டாம்லின் எடுத்துரைத்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆல்ஃபி லிண்ட்ஸே வழங்கிய தானத்தை ஏற்றுக்கொண்டு, அதனை உரியவர்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் வழங்க தான்உறுதியளித்தாக ஆயர் மேலும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், PA
ஹவுன்ஸ்லோ பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஆல்ஃபி லிண்ட்ஸே, தீவிபத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான கிரென்ஃபெல் டவர் கட்டிடத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்காக தான்துயரம் அடைவதாகவும், தீ விபத்தால் சிறு கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தான்.
அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்து
முன்னதாக, கடந்த புதன்கிழமை அதிகாலை பொழுதில் 24 மாடிகளை கொண்ட கிரென்ஃபெல் டவர் கட்டிடத்தில் பரவிய தீயால் குறைந்தது 79 பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று தற்போது ஊகிக்கப்படுகிறது.
பலரும் இந்த கோர தீபத்தால் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். இந்த தீவிபத்தினால் கிரென்ஃபெல் டவர் கட்டிடம் முற்றிலும் எரிந்து போய் அழிந்துள்ளது.
லண்டனின் மேற்கு பகுதியில் இருக்கும் அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ ஏற்பட காரணமான பிரச்சனையின் ஆணிவேரைக் கண்டறிவோம் என்று பிரதமர் தெரீசா மே உறுதி அளித்திருந்தார்.
இந்த தீ விபத்து பற்றி ஐக்கிய ராஜ்ஜியத்தின் எலிபெத் மகாராணி கூறுகையில், "சமீபத்திய வாரங்களில் லண்டன் மற்றும் மான்செஸ்டரில் நிகழ்ந்த சோக சம்பவங்களை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சோகமான தேசிய மனநிலையில் இருந்து வெளிவருவது கடினமாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.
தொடர்பான செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













