டிரம்பின் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்காததால் பதவி நீக்கப்பட்டேன் - அரசு தரப்பு வழக்கறிஞர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து பல தொலைபேசி அழைப்புகளை பெற்ற பிறகு, தன்னுடைய பதவி பறிக்கப்பட்டதாக நியுயார்க்கிலுள்ள முன்னாள் முன்னிலை பெடரல் அரசு வழக்கறிஞரான பிரீட் பாரா தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
நிர்வாக கிளையையும், சுயாதீன குற்றவியல் ஆய்வாளர்களையும் பிரிக்கிற வழக்கமான எல்லைகளை டிரம்ப் தாண்டி விட்டதாக பிரீட் பாரா, ஏபிசி தொலைக்காட்சி சானலின் "நீயுஸ் திஸ் வீக்" நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
மூன்றாவது தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுக்காத பிறகு, தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக பாரா தெரிவித்திருக்கிறார்.
பாராவின் கூற்றுக்கு வெள்ளை மாளிகை இன்னும் பதிலளிக்கவில்லை.
2016 ஆம் ஆண்டு இறுதியில் பாராவும், டிரம்பும் சந்தித்த பிறகு ஏதோ ஒருவகை உறவை ஏற்படுத்திக்கொள்ள டிரம்ப் முயன்றதாக தோன்றியது என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட, மன்ஹாட்டனில் தலைமை பெடரல் அரசு வழக்கறிஞராக பணியாற்றிய பாரா கூறியுள்ளார்.
டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு இது "பொருத்தமில்லாதது" என்று உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
"ஏழரை ஆண்டுகளாக அன்றைய அதிபர் பராக் ஒபாமா என்னை ஒருமுறை கூட அழைத்ததில்லை" என்று அவர் கூறினார்.
"அமெரிக்க அதிபர் என்னை ஒருமுறை கூட அழைக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஒவ்வொருவரும் வகித்து வருகின்ற பணி பொறுப்புகளுக்கு தக்கவாறு சற்று இடைவெளி இருக்க வேண்டும் என்பதே இதற்கு காரணமாகும்" என்கிறார் பாரா.
அமெரிக்க பெடரல் உளவுத் துறை முன்னாள் தலைவர் ஜேம்ஸ் காமியை கடந்த மே மாதம் டிரம்ப் பதவியில் இருந்து நீக்கிய பிறகு, காமி அமெரிக்க செனட் அவையில் விளக்கம் அளித்தார்.
தன்னை பொறுப்பில் அமர்த்திய பின்னர் அளித்த விருந்தின்போது, தனக்கு விசுவாசமாக இருப்பதற்கான உறுதி மொழியை டிரம்ப் கேட்டதாக செனட் அவை விளக்கத்தில் ஜேம்ஸ் காமி தெரிவித்த சில நாட்களில் பாராவின் இந்த பேட்டி வந்துள்ளது.
ஜேம்ஸ் காமியின் கூற்றை முற்றிலுமாக மறுத்துவிட்ட அதிபர் டிரம்ப், தனிப்பட்ட உரையாடல்களை கசியவிட்ட கோழை என்று பாராவின் நண்பரும், முன்னாள் சகாவுமான காமியை குறிப்பிட்டிருந்தார்.
செளதியின் பாரம்பரிய கத்தி நடனத்தில் டொனால்ட் டிரம்ப்
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













