பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை பாதிப்பால் தவித்த பயணிகள் : என்ன சொல்கிறது நிறுவனம்?
மிகப்பெரிய தொழில்நுட்ப கோளாறின் காரணமாக ஞாயிற்றுக்கிழமையன்று அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்ட பிறகு, லண்டனின் காட்விக் விமான நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட வழக்கமான விமான சேவைகளை மேற்கொள்ளவும், ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பெரும்பான்மையான விமான சேவைகளை இயக்குவதையும் தங்கள் நோக்கமாக கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
பிரிட்டிஷ் ஏர்வேஸ் (பிஏ) தொழில்நுட்ப அமைப்பில் ஏற்பட்ட தீவிர பிரச்சனையால் சனிக்கிழமையன்று பல பயணிகளின் பயணத்திட்டங்கள் தடைபட்டு ஆயிரக்கணக்கானோர் தவிக்க நேர்ந்தது.
விமான நிலையங்களில் குழப்பமான காட்சியை கண்டதாக விவரித்த பயணிகளில் சிலர் போதுமான தகவல் அளிக்கவில்லையென பிஏ நிறுவனத்தை விமர்சனம் செய்தனர்.
இந்த பிரச்சனை தொடர்பாக மன்னிப்பு கோரிய பிரிட்டிஷ் ஏர்வேஸ், தாங்கள் வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பிச் செலுத்துவதாகவும், விரும்புபவர்களுக்கு மறுபதிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்துக்கு பயணம் செய்யும்முன், வாடிக்கையாளர்கள் தாங்கள் பயணம் செய்யும் விமானத்தின் தற்போதைய நிலை குறித்து அறிய www.ba.com என்ற தங்களின் வலைதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அண்மையில் நடந்த இணையதள தாக்குதலின் விளைவுதான் தற்போது ஏற்பட்ட இந்த கணனி பிரச்சனைகள் என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லையென இந்த விமானசேவை நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான அலெக்ஸ் க்ரூஸ் இந்த பிரச்சனையின் அடிப்படை காரணம் ஒரு மின் விநியோகப் பிரச்சனைதான் என்று நம்பப்படுவதாக தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
லண்டனில் உள்ள இந்த இரு விமான நிலையங்களில் இருந்தும் புறப்படும் மற்றும் வந்துசேரும் மற்ற விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை.
இந்த தொழில்நுட்ப கோளாறினால் வாடிக்கையாளர் சேவை தொலைபேசி இணைப்புகள் உள்ளிட்ட பயணிகள் வருகை சரிபார்ப்பு மற்றும் செயல்பாட்டு அமைப்புகள் பாதிக்கப்பட்டன.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன பேச்சாளர் கூறுகையில், ''எங்களின் அனைத்து தொழில்நுட்ப அமைப்புகளையும் மீட்க நாங்கள் தொடர்ந்து கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், ''சனிக்கிழமை முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்ட விமான சேவையால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எவ்வளவு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்'' என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, லண்டனுக்கு வந்து சேரும் தங்களின் பெரும்பான்மையான நீண்ட தூர விமானங்கள் வழக்கமான நேரப்படி வந்துசேரும் என்று எதிர்ப்பார்ப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
தங்களின் தொழில்நுட்ப பணியை வேறு நிறுவனங்களுக்கு ஒப்படைக்காமல் இருந்திருந்தால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இந்த தொழில்நுட்ப கோளாறை தவிர்த்திருக்கலாம் என்று ஜிஎம்பி தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கூற்றை மறுத்துள்ள பிஏ நிறுவனம், ''எங்களின் தொழில்நுட்ப அமைப்புகளின் நேர்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் எப்போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்'' என்று தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












