You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதிய திருப்பம்: அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரிக்க நேர்மைக்கு பெயர் பெற்ற அதிகாரி நியமனம்
அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் டிரம்பின் பிரசார உறவுகளில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டு விசாரணைக்கு எஃப் பி ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் ராபர்ட் முல்லர் தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராபர்ட் முல்லரின் பெயரை அறிவித்த துணை அட்டார்னி ஜெனரல், பொது நலன் கருதி வெளிநபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முல்லரின் நியமனம் இருதரப்பை சேர்ந்த அரசியல்வாதிகளாலும் பரவலாக பாராட்டப்படுகிறது.
கடந்த வாரம், எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவியிலிருந்து நீக்கினார் அதிபர் டிரம்ப். அதிலிருந்து, சிறப்பு வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத்தொடங்கின.
டொனால்ட் டிரம்பின் பிரசார குழு மற்றும் ரஷ்யா இடையே சாத்தியமான தொடர்புகள் இருந்தனவா என்பது குறித்து எஃப் பி ஐ மற்றும் நாடாளுமன்றம் ஆராய்ந்து வருகிறது.
குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக தேர்தலை முடுக்கிவிட ரஷ்யா முயற்சித்ததாக அமெரிக்க புலனாய்வு முகமை நம்புகிறது.
டிரம்ப் கருத்து
இந்தப் புதிய நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்த அதிபர் டிரம்ப், தன்னையும் தனது அணியினரையும் இந்த புதிய விசாரணை, குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக, விசாரணைக்கு வெளி நபர் ஒருவர் தலைமை வகிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வெள்ளை மாளிகை கருத்துத் தெரிவித்திருந்தது.
"எனது பிரசார அணிக்கும் எந்த ஒரு வெளிநாட்டு அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்று எங்களுக்குத் தெரிந்த தகவலை முழுமையான விசாரணை உறுதிப்படுத்தும்" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் முக்கிய செனட் உறுப்பினரான சக் சூமர், முல்லர் இந்தப் பணிக்குப் பொருத்தமான நபர் என்று பாராட்டியுள்ளார்.
புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும், தன்னால் இயன்றவரை சிறப்பாக செயல்படப்போவதாகவும் முல்லர் தனது நியமனம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
திருப்புமுனை
இந்த மாற்றங்கள் எல்லாமே அமெரிக்க நிர்வாக வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை என்கிறார் வாஷிங்டனில் உள்ள பிபிசி செய்தியாளர் ஏண்டனி சூர்செர்.
ராபர்ட் முல்லர் ஏற்கனவே, பதவி நீக்கப்பட்ட கோமி ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தில் துணை அட்டார்னி ஜெனரலாக பணியாற்றியபோது, அவருடன் பணியாற்றியவர். அரசியல்வாதிகளின் நெருக்குதல் நிர்வாகத்தை நன்கு தெரிந்து வைத்திருப்பவர். நேர்மைக்குப் பெயர் பெற்றவர்.
தற்போது நீதித்துறையில் இருக்கும் முல்லர், நிர்வாக ரீதியாகப் பார்த்தால் டிரம்பின் கீழ்தான் செயல்படுகிறார். ஆனால், அதிபரின் நெருக்குதலுக்குப் பணியக்கூடியவர் அல்ல என்ற நற்பெயர் அவருக்கு இருக்கிறது.
சுயாதீன விசாரணை, பல நேரங்களில் அதற்கு உத்தரவிட்டவர்களுக்கு எதிராகவே முடியக்கூடிய எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும் நிலையில், முல்லர் நியமனம் அதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கவே செய்திருக்கின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்