You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாஜ்மஹால் மீது ஜஸ்டின் பீபரின் காதல்!
பிரபல பாப் இசைப்பாடகரான ஜஸ்டின் பீபரின் நிகழ்ச்சிக்காக காத்திருந்த இசை ரசிகர்களின் கட்டுக்கடங்கா இசைத்தாகம், மும்பையில் பொழிந்த இசைமழையால் தணிந்தது.
கனடாவை சேர்ந்த ஜஸ்டின் பீபரின் இசைக்காக இந்திய ரசிகர்கள் பல காலமாக காத்திருந்தார்கள். ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
டி.ஒய்.பாடீல் அரங்கில் புதன்கிழமை இரவு 8.15 மணிக்கு ஜஸ்டின் மேடையில் தோன்றியதும், ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டது. அரங்கம் முழுவதும் ஜஸ்டின், ஜஸ்டின் என்ற முழக்கம் நிறைந்தது.
சாரி, கோல்ட், வாட்டர், ஐ வில் ஷோ யூ, வேர் ஆர் யூ நவ், பாய் பிரண்ட், பேபி போன்ற தனது பிரபல பாடல்கள் உட்பட பல பாடல்களை சுமார் இரண்டு மணி நேரம் இசைத்து அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்ட ஜஸ்டின், 'நன்றி இந்தியா, மீண்டும் வருவேன்' என்ற முத்தாய்ப்புடன் நிகழ்ச்சியை முடித்தார்.
கனடாவை சேர்ந்த பாப் இசைப்பாடகர் ஜஸ்டின் பீபர் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அவரைப் பார்த்தனர்.
மும்பை வந்த ஜஸ்டின், முதலில் ஓர் அனாதை இல்லத்திற்கு சென்று, அங்கிருந்த ஏழைக் குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவளித்த பிறகு ஒரு பெரிய வணிக வளாகத்துக்குச் சென்றார்.
இந்த பாப் இசைக்கலைஞனின் ரசிகர்களில் இளைஞர்களும், இளைஞிகளும் மட்டுமே இல்லை, பாலிவுட் கலைஞர்களும், ஜஸ்டினின் ரசிகர்கள் தான்.
ஆலியா பட், ஸ்ரீதேவி, ஜாக்லீன் ஃப்ரனாண்டஸ், பிபாஷா பாசு, ரவீணா டாண்டன், மஹிமா செளத்ரி, மலைக்கா அரோரா, திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான அர்பாஸ் கானும், திரைப் பிரபலங்களின் குழந்தைகளும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இசை விருந்தை ருசித்தனர்.
ஜஸ்டின் பீபரின் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மும்பை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உலகப் புகழ் பெற்ற காதல் சின்னமான தாஜ்மஹாலை பார்க்கவேண்டும் என்ற தனது ஆவலையும் ஜஸ்டின் பீபர் வெளியிட்டார்.
மேலதிக செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்