You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராக் அண்ட் ரோல் இசை ஜாம்பவான் சக் பேரி காலமானார்
ராக் அண்ட் ரோல் இசையின் ஜாம்பவான் சக் பேரி தனது 90ஆவது வயதில் காலமானதாக அமெரிக்காவின் மிசோரி மாநில போலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மதிய நேரம் சக் பேரி சுயநினைவற்ற நிலையில் இருந்ததாக செயிண்ட் சார்லஸ் கவுண்டியின் போலிஸார் தெரிவித்துள்ளனர்
ரோல் ஓவர் பீதோவன் மற்றும் ஜானி பி. குட் என பேரியின் ஏழுபது வருட கால இசை, அடுக்கடுக்கான பல வெற்றிப்பாடல்களை கொடுத்துள்ளது.
1984ஆம் ஆண்டில் வாழ்நாள் சாதனைக்கான கிராமி விருதை பெற்றார் மற்றும் "ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேமின்" மாளிகையின் முதல் அழைப்பாளராவார்.
உள்ளூர் நேரப்படி மதியம் 12.40 மணிக்கு சுயநினைவில்லாத நபரைப் பற்றி தங்களுக்கு தகவல் வந்ததாக செயிண்ட் சார்லஸ் கவுண்டியின் போலிஸ் துறை, முகநூல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"துரதிஷ்டவசமாக அந்த 90 வயது பெரியவருக்கு நினைவு திரும்பவில்லை; மதியம் 1.26 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சக் பேரி என்று அழைக்கப்படும் பெரும் புகழ்பெற்ற இசைக்கலைஞரான, சார்லஸ் எட்வேர்ட் ஆண்டர்சன் பேரி, உயிரிழந்துவிட்டதாக வருத்தத்துடன், செயிண்ட் சார்லஸ் கவுண்டியின் போலிஸ் துறை உறுதி செய்துள்ளது".
பிரபலங்கள் அஞ்சலி
உயர் மட்ட இசைக் கலைஞர்கள் பலர் பேரிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஹிவே லீவிஸ், "ராக் அண்ட் ரோல் இசையின் மிக முக்கியமான நபர் சக் பேரி" என விவரித்துள்ளார்.
"அவரின் இசையும் புகழும் என்றும் நிலைத்து நிற்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்
பீட்டல்ஸ் இசைக்குழுவின் டிரம்ஸ் இசைக் கலைஞர் ரிங்கோ ஸ்டார், பேரியின் வரிகளில் ஒன்றான, நான் ராக் அண்ட் ரோல் இசையை கேட்கிறேன்" என்ற வரிகளை டீவிட் செய்து தனது அஞ்சலியை தெரிவித்துள்ளார்.
"நான் வாசிக்கிறேன், நான் உங்களைப் பற்றி பேசுகிறேன்" என அவர் எழுதியுள்ளார்.
பீட்டல்ஸ் மற்றும் ரோலிங் ஸ்டோன்ஸ் ஆகிய இரு இசைக் குழுக்களும் பேரியின் பாடல்களை பயன்படுத்தியுள்ளது.
"ராக் அண்ட் ரோலுக்கு மறுபெயர் என்றால் அது சக் பேரி" என்று பீட்டல்ஸ் இசைக்குழுவின் துணை நிறுவனர் ஜான் லெனான் தெரிவித்துள்ளார்.
பெர்ரி, 1926 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் செயிண்ட் லூயிஸில் பிறந்தார்; 1955ஆம் ஆண்டு "மேபலின்" என்ற பாடல் வெற்றிப்பாடலாக அமைந்தது.
கடந்த வருடம் சுமார் 40 ஆண்டுகளில் தனது முதல் ஆல்பத்தை வெளியிடப்போவதாக தெரிவித்தார். தனது 68 வயது மனைவிக்கு அதனை அவர் அர்ப்பணித்தார்.