குடும்பச் சண்டையில் ஆப்கான் பெண்ணின் காதுகளை அறுத்த கணவர்

ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான பால்க்கில், குடும்பச் சண்டை வன்முறை தாக்குதலாக மாறி, தன்னை கட்டி வைத்து தன் இரு காதுகளையும் தனது கணவர் அறுத்த செயலை பிபிசியிடம் 23 வயது பெண்ணொருவர் விவரித்தார்.

ஜெரீனா
படக்குறிப்பு, குடும்பச் சண்டையில் காதுகளை இழந்த ஆப்கான் பெண் ஜெரீனா

ஜெரீனா என்ற அந்தப் பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும், மிகவும் அதிர்ச்சியுற்ற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

''நான் எந்த பாவமும் செய்யவில்லை'' என்று கூறிய அப்பெண், ''என் கணவர் ஏன் இப்படிச் செய்தார் என்று எனக்கு தெரியவில்லை" என்றும் மேலும் தெரிவித்தார்.

இந்த பெண்ணின் மீது தாக்குதல் நடத்திய பிறகு, அவரது கணவர் கஷிண்டா மாவட்டத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஊடகங்களிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தனக்கு 13 வயதிலேயே திருமணம் ஆகி விட்டதாக பிபிசியிடம் தெரிவித்த ஜெரீனா, தனக்கும், தன் கணவருக்கும் இடையிலான உறவு நல்ல நிலையில் இல்லை எனத் தெரிவித்தார்.

'என் கணவர் ஒரு சந்தேக நபர்'

டோலோ நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த மற்றொரு பேட்டியில், தனது பெற்றோரை பார்க்க அனுமதிக்காமல், தன் கணவர் தன்னை தடுத்து வந்ததாகவும், இனியும் தனது கணவருடன் திருமண வாழ்க்கையை தொடர தனக்கு விருப்பமில்லை என ஜெரீனா கூறியுள்ளார்.

'கணவருடன் திருமண வாழ்க்கையை தொடர விருப்பமில்லை '
படக்குறிப்பு, 'கணவருடன் திருமண வாழ்க்கையை தொடர விருப்பமில்லை'

''என் கணவர் ஒரு சந்தேக நபர்; எப்போது நான் பெற்றோர் வீட்டுக்கு செல்ல விரும்பினாலும், வேறு ஆண்களுடன் நான் பேசுவதாக என் மீது சந்தேகம் கொள்வார்'' என்று ஜெரீனா மேலும் தெரிவித்தார்.

தனக்கு தீங்கிழைத்த தன் கணவர் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்படவேண்டும் என்று ஜெரீனா கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்