You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லவ் டுடே படத்தின் கதையில் என்ன சர்ச்சை?
- எழுதியவர், கல்யாண் குமார்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஜெயம் ரவி நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற 'கோமாளி' படத்தின் இயக்குநரான பிரதீப் ரங்கநாதனே ஹீரோவாக நடித்து இயக்கி இருக்கும் லவ்டுடே திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், அதன் கூடவே சர்ச்சையும் தொடர்கிறது.
படத்தின் கதையில்தான் சர்ச்சை
"ஒவ்வோர் இளைஞனுக்கும் கல்லூரி நாட்களில் கைபேசியை வைத்து எத்தனையோ நகைச்சுவையான, சீரியஸான சம்பவங்கள் நடைபெற்றிருக்கும். காதல் வயப்பட்டிருக்கும்போது செல்போனை ஓர் அவசரத்திற்குக்கூட நெருங்கிய நண்பனுக்குத் தரமாட்டோம். காரணம் அதிலிருக்கும் நமது ரகசியம் வெளியே கசிந்து விடுமோ என்கிற பயம்தான்.
அப்படி இருக்கும்போது என்னுடைய இந்த லவ் டுடே படத்தின் கதைப்படி, தன் அப்பாவிடம் காதலைப் பற்றிச் சொல்லி திருமணத்திற்கு அனுமதி கேட்கிறார் ஹீரோயின். அப்பா சத்யராஜோ வினோதமான ஒரு கண்டிஷன் போடுகிறார்.
'நீயும் உன் காதலனும் ஒருவருக்கொருவர் உங்கள் செல்போன்களை ஒருநாள் மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும்' என்பதுதான் அந்த கண்டிஷன். இதை மையப்படுத்தி, இதனால் நடைமுறையில் ஏற்படும் சிக்கல்களை காமெடியாக இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறேன்" என்கிறார் இதன் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.
இந்த மையக் கருத்தில்தான் சர்ச்சை
ஏற்கெனவே தமிழில் நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் அறிவுமதி இதே மையக் கருத்தை பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு பாடலில் எழுதி இருக்கிறார்.
"அந்தப் பாடலை நான் சிறப்பு அழைப்பாளராக கல்லூரி விழாக்களுக்குப் போகும்போது பல மேடைகளில் பாடியிருக்கிறேன். பையா படம் முடிந்தவுடன் அந்தப் பாடலைக் கேட்ட இயக்குநர் லிங்குசாமி, இதைத் தன் அடுத்த படத்தில் பயன்படுத்திக் கொள்வதாகவும் உறுதி கொடுத்திருந்தார். குறிப்பாக செல்போன்களை மாற்றிக் கொள்வதை வைத்து ஒரு படமே எடுக்கலாம் என்று சிலாகித்துப் பேசியிருந்தார். இந்தப் படத்தின் மையக்கரு, முழுக்க முழுக்க நான் எழுதிய வரிகளில் இருந்துதான் கையாளப்பட்டிருக்கிறது என்பதை என் பாடல் வரிகளை படிப்பவர்களுக்கு சட்டென புலப்படும். அவர் நன்றாக வரட்டும். ஆனால் ஒரு நாகரீகம் கருதி என்னிடம் இதற்கு அனுமதி கேட்டிருக்கலாம் என்பதுதான் என் வருத்தம்" என்று ஆதங்கப்படுகிறார் கவிஞர் அறிவுமதி.
கவிஞர் அறிவுமதியின் வரிகள்
காதலன் கைப்பேசி
காதலியின் கையில்
காதலி கைப்பேசி
காதலனின் கையில்
ஒரு மணி நேரம்
மாற்றிக் கொள்ள
உடன்படும் காதலர்
உண்டா உண்டா சொல்லுங்கள்….
இதில் ஒருமணி நேரம் செல்போனை மாற்றிக் கொள்வது என்பது படத்தில் ஒருநாள் மாற்றிக் கொள்வதாக மாறியிருக்கிறது.
"அணு அணுவாய் சாவதற்கு
முடிவெடுத்த பின்
காதல் சரியான வழிதான்!"
இதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவுமதி எழுதிய கவிதை வரிகள்.
"அண்ணன் அறிவுமதி அவர்களின் இந்த வரிகளில் விளைந்த பாதிப்புதான் என்னுடைய முதல் படமான சேது" என்று இயக்குநர் பாலா, முன்பு ஒரு வார இதழில் எழுதிய அவரது வாழ்க்கைத் தொடரில் நன்றியோடு அறிவுமதியின் பெயரைக் குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார். இந்தப் பண்புதான் இன்றைய இளைஞர்களிடம் காணாமல் போய்விட்டது. பிரதீப்பின் லவ் டுடே படம் வெளிவந்த பிறகு அதைப் பார்த்து விட்டு அந்தக் கருத்தை என் பாடலில் நான் கையாண்டு விட்டதாக யாரும் கருதிவிடக் கூடாது என்பதற்காகத்தான், அந்தப் பாடலை தாஜ்நூர் இசையசைமைப்பில் ஒரு வீடியோ ஆல்பமாக வெளியிட்டிருக்கிறேன். யூட்யூப்பில் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பிரதீப்பிடம் இருந்து எனக்கு பணம் எதுவும் தேவையில்லை. 'மையக்கரு அறிவுமதி' என்று போட்டிருக்கலாம் என்று சொல்கிறேன். லிங்குசாமி, பாக்யராஜ், தாணு ஆகியோரிடமும் இது குறித்துப் பேசியுள்ளேன். ஆனால் இதற்காக நான் எந்த சங்கத்திலும் புகார் கொடுக்கப் போவதில்லை," என்பது அறிவுமதியின் முடிவு.
"இதே பிரதீப் ரங்கநாதனின் முதல் படமான கோமாளி என்ற படத்திற்கும் கதை திருட்டு பிரச்னை வந்தது. அதன் அசல் கதையை எழுதிய கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞர், (இவர் ஆர்.பார்த்திபனின் உதவி இயக்குநர் ) எங்களிடம் வந்து புகார் கொடுத்திருந்தார். நாங்கள் இரண்டு தரப்பையும் விசாரித்து விட்டு அதில் உண்மை இருப்பதை அறிந்து பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்திக்கு அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடமிருந்து நஷ்ட ஈடாக பத்து லட்சம் ரூபாயை வாங்கிக் கொடுத்தோம்," என்கிறார் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் இணை செயலாளராக இருக்கும் 'மங்கை' அரிராஜன்.
இந்த சர்ச்சை குறித்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதனிடம் கேட்டபோது, "இந்தக் கருத்தை மையமாக வைத்து தான் நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே 'அப்பா லாக்' என்ற குறும்படத்தை இயக்கியுள்ளேன். யூ ட்யூபில் அது வரவேற்பைப் பெற்றதால்தான் அதே கதையைப் படமாக்க முடிவு செய்தேன். கவிஞர் சொல்வதைப் போல அவர் மேடைப் பேச்சுகளை நான் கேட்டதில்லை. அவரை சந்தித்ததும் இல்லை," என்று முடித்துக் கொண்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்