பொன்னியின் செல்வன் தடம் தேடிய பெண்கள்: "அந்த நிமிடங்கள் உற்சாகமானவை"

பட மூலாதாரம், RAMU
- எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
"1,000 ஆண்டுகளுக்கு முன்னால் அசைக்க முடியாத பேரரசாக இருந்த சோழ மண்டலத்தில் இருக்கிறோம் என்ற பெருமையே எங்களை 3 நாட்கள் தூங்க விடாமல் செய்தது. இந்த இடங்களை எங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவலே எங்கள் நால்வரையும் ஒன்றாக இணைத்தது "
வரலாறு எப்போதுமே சுவாரஸ்யமானது. புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதாபாத்திரமான வந்தியத்தேவன் சென்ற வழியில் பயணம் மேற்கொண்டு தங்கள் வரலாற்றுப் பயண தாகத்தை தீர்த்திருக்கிறார்கள், தமிழ்நாட்டை சேர்ந்த நித்யா சீதாராமன், ஸ்ரீபத்மா கணபதி, ஜெயப்பிரியா ஆதிமுருகன் மற்றும் தீபா நவீன் என்ற நான்கு பெண்கள்.
இவர்கள் நால்வரும் நடன ஆசிரியர், மனிதவள மேம்பாட்டுதுறை, ஆடிட்டர், ஆராய்ச்சியாளர் என தங்களுடைய வேலையில் பிசியாக இருக்கும் பெண்கள்.
'ஸ்மார்ட் மம்மீஸ்' என்ற முகநூல் பக்கத்தில் முகமறியா நண்பர்களாக இருந்த இவர்களை, 'பொன்னியின் செல்வன்' நாவல் தான் ஒன்றிணைத்திருக்கிறது. இந்த குழுவில் தாய்மை, குழந்தை வளர்ப்பு, வேலை, தங்கள் ஆர்வம் என பல விஷயங்கள் குறித்து பேச ஒரு நான் பொன்னியின் செல்வன் நாவல் குறித்து அனைவரும் உரையாடி இருக்கிறார்கள்.
இந்த இடங்கள் ஈர்த்தது ஏன்?
4 பேருக்கும் வரலாற்று தொடர்பான விஷயங்களில் ஆர்வம் இருக்க பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரமான வந்தியத்தேவன், நாவலில் சென்ற வரலாற்று இடங்களுக்கு நாமும் சென்று பார்த்தால் என்ன? என்று தோன்றியிருக்கிறது. இதற்கு முதலில் விதை போட்டவர் ஸ்ரீபத்மா கணபதி. முதலில் சென்னையில் இருந்தவர் இப்போது லண்டனில் வசிக்கிறார்.
" எங்கள் நால்வருக்கும் பொன்னியின் செல்வன் நாவலின் கதை மிகவும் பிடிக்கும். அதில் வரும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் எங்களை பெரிதும் ஈர்த்தன. காரணம் நான் ஏற்கெனவே வரலாறு தொடர்பாக நம்முடைய வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு வகுப்புகளை எடுத்து வருகிறேன். அதனால் 'வந்தியத்தேவன் வழியில் வரலாற்று பயணம்' என்ற அடிப்படையில் இந்த பயணத்தை நாங்கள் மேற்கொண்டோம்.
பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் எந்த இடத்திற்கு எல்லாம் சென்றார்? இப்போது அந்த இடம் பார்க்க கூடிய வகையில் இருக்கிறதா ? என்று எனக்கு தெரிந்த நண்பர்களிடத்தில் விவரங்கள் கேட்டு பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்தோம். பயணத்தை தொடங்கும் வரை இதை நம்மால் செய்ய முடியுமா என்ற கேள்வி எங்களிடத்தில் இருந்தது. காரணம் இது போன்று இதுவரை யாரும் முயற்சித்தது கிடையாது. எங்கள் குடும்பத்தினரும் 4 நாட்கள் எங்களை விட்டு இருப்பார்களோ என்று தயங்கிக் கொண்டே தான் இருந்தோம். ஆனால், இந்த பயணத்தை முடித்த போது கிடைத்த திருப்தியும் மகிழ்வும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று நெகிழ்கிறார் ஸ்ரீபத்மா.

பட மூலாதாரம், RAMU
இவர்கள் சென்ற பயணத்தில் மாளிகை மேடு என்ற ஒரு இடம் இருக்கிறது. ராஜேந்திர சோழனின் மாளிகை அங்கு இருந்திருக்கிறது. இன்று அந்த மாளிகையில் சில எச்சங்கள் மட்டுமே அங்கு இருக்கின்றன. அந்த இடத்தில் நின்ற தருணம் அப்படியே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்று விட்டதை போல உணர்வுகள் இருந்ததாக நால்வருமே சிலாகித்து கூறுகிறார்கள்.
"பழுவேட்டரையர்கள் கட்டிய கோவிலைப் பார்க்க ஆசைப்பட்டேன்"
பொன்னியின் செல்வன் நாவலில் வரும் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் . இவர்களுடைய மூதாதையர்கள் கட்டிய இரட்டை கோவில்களை பார்க்க வேண்டும் என்று நிறைய ஆசைப்பட்டேன். ஏனென்றால் இந்த இரட்டை கோவிலில் தான் 2 சிவன் கோவில் மற்றும் 2 விமானங்கள் உள்ளது. பொன்னியின் செல்வன் நடந்த கதை காலத்திற்கு முன்பே இந்த கோவில் கட்டப்பட்டு இருந்ததால் இதை பார்த்ததும் மிகவும் பரவசம் ஏற்பட்டது.
இந்த கோவிலை பார்ப்பதற்காக அந்த இடத்தை அடைந்ததும் கோவில் பூட்டி கிடந்தது. அந்த கோவிலின் பூசாரி வேறு ஒரு கோவிலுக்கு பூஜை செய்ய சென்றுவிட்டார். அவருக்காக நாங்கள் 3 மணி நேரம் காத்திருந்தோம். எங்கள் காத்திருப்பிற்காகவே வேறு எங்கும் செல்லாமல் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் அந்த கோவிலில் எங்களுக்கு அங்குள்ள சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் குறித்து விளக்கியது வாழ்வின் பரீபூரணமான தருணம் என மகிழ்கிறார் ஸ்ரீபத்மா.

இந்த பயணத்தில் இந்த நான்கு பெண்களின் நட்பை பலப்படுத்தி இருக்கிறது.
" இந்த பயணம் என் வாழ்வின் மறக்க முடியாத தருணம். இந்த 4 நாட்களும் எங்கு செல்ல வேண்டூம் என்று நான் இடங்களை தேர்வு செய்து அதற்கான ஏற்பாடுகளை தோழிகளோடு சேர்ந்து தயாரித்தோம். இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் வீர நாராயண பெருமாள் கோவிலுக்கு நாங்கள் அனைவரும் சென்றோம். அங்கு உட்கார்ந்து ,கையோடு எடுத்து சென்றிருந்த பொன்னியின் செல்வன் நாவலை அங்கு வரிக்கு வரி படித்தோம். வரலாற்றுக்கும் உண்மைக்குமான அந்த நிமிடங்கள் மிகவும் உற்சாகமாக இருந்தது. அதே போல கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் போது மாலை ஆகி விட்டது. சூரியன் மறையும் காட்சி அவ்வளவு அற்புதமாக இருந்தது. சூரியன் மறையும் போது அடிவானில் பிறையும் தோன்றியது. அந்த காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.அதே போல் கங்கை கொண்ட சோழபுரத்தில் அங்கு மண்டபத்தில் இருந்த பல கற்களை காணவில்லை. பிரிட்டிஷ் காலத்தில் அந்த ஊர்களுக்கு பாலங்களை கட்டுவதற்காக இங்கு இருந்து தான் கற்களை கொண்டு கட்டி இருக்கிறார்கள் என்று உள்ளூர் மக்கள் சொன்னது கொஞ்சம் வருத்தமாக இருந்தது," என்கிறார் ஆசிரியை ஜெயப்பிரியா ஆதிமுருகன்.

பட மூலாதாரம், Jayapriya
ஜெயப்பிரியா ஆதிமுருகன் அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.
" கும்பகோணம் வழியே செல்லும் போது பசுமையான காட்சிகள் இன்னும் கண்களுக்குள் அப்படியே இருக்கிறது. நாவலில் வந்தியத்தேவன் தஞ்சாவூருக்கு வரும் போது அந்த ஊரின் பசுமையையும் செழுமையையும் பார்த்து வியந்து நிற்பான். அப்போது அவனுடைய நாசியில் கரும்பு தோட்டத்தில் இருந்து வெல்லம் காய்ச்சும் வாசமும் வரும் என்று குறிப்பிட்டு இருக்கும் . நமக்கும் அது போல் வருமா என் சிரித்து பேசி தஞ்சாவூரின் வயல்வெளிகளையும் கரைகளையும் கடந்த போது நாவலின் நினைவுகள் நெஞ்சிக்குள்ளே இருந்தது என சிலாகிக்கிறார் தீபா. வீராணம் ஏரி கடல் போன்று இருந்ததாக நாவலில் இருக்கும். ஆனால் நாங்கள் சென்ற போது அங்கே தண்ணீர் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கற்பனையிலேயே கல்கி எழுதிய வார்த்தைகளை மனதில் நினைத்து பரவசம் அடைந்தோம் " என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்தீபா நவீன்
தீபா ஆடிட்டர் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிகிறார்.

பட மூலாதாரம், Sripadma
"கோடியக்கரை கடற்கரையில் கழித்த நினைவுகள் மனதில் இன்னும் அகலாமல் இருக்கின்றன. பூங்குழலியின் இடம் இதுவாக இருந்ததால், நாங்கள் அந்த கதாபாத்திரமாகவே மாறி அந்த நினைவுகளில் மூழ்கினோம். பூங்குழலிக்கும் வந்தியத்தேவனுக்கும் நடந்த உரையாடல்கள் அந்த இடத்தில் எங்களின் மனதில் உள்ளே குரலாக ஒலித்தன. கிட்டத்தட்ட 3 மணி நேரம் அந்த கடற்கரையைச் சுற்றி வந்தோம். அதன் பின்னர் மறக்க முடியாத நிகழ்வு, தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுக்ளை பார்த்தது தான். அந்த கல்வெட்டுக்களில் சில வார்த்தைகளை படித்து புரிந்து கொள்ள முயன்றோம். பெரியகோவிலுக்கு அதிகாலையிலேயே சென்றதால் அந்த அமைதி எங்களுடைய மனதை ஒருமுகப்படுத்தியது," என்று கூறினார் நித்யா சீத்தாராமன்
நித்யா சீத்தாராமன் ஆடிட்டராக பணிபுரிகிறார்.
மொத்தத்தில் வந்தியத்தேவன் வழியில் வரலாற்று பயணம் மனதிற்கு அமைதியையும், ஆன்மாவிற்கு நிம்மதியையும் கொடுத்ததாக மகிழ்கிறார்கள், நம் தமிழ்நாட்டு பெண்கள்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












