You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பம்பா பாக்யா மறைவு - சோகத்தில் தமிழ் திரையுலகம், ரசிகர்கள்
திரையுலகின் பாடல் துறையில் குறுகிய காலமே வாழ்ந்தாலும் தமது பாடல்கள் மூலம் பிரபலம் அடைந்த பம்பா பாக்கியா, உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்றி இரவு சென்னை பாடி அருகே உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. உடனே இவரது குடும்பத்தினர் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த நிலையில் பம்பா பாக்யாவின் உயிர் இன்று அதிகாலையில் பிரிந்தது.
பம்பா பாக்யாவின் மரணம், திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பம்பா பாக்யாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாக்யா என்ற பெயரில் மேடை கச்சேரிகள் மற்றும் பக்தி பாடல்கள் மூலம் பிரபலமடைந்த இவருக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானால் தமிழ் திரையுலகில் பின்னணிப் பாடகராக வாய்ப்பு கிடைத்தது.
பாக்யா என்ற பெயரை 'பம்பா பாக்யா' என்று பெயர் மாற்றம் செய்தது ஏ.ஆர். ரஹ்மான் தான் என பல மேடைகளில் இவரே கூறியிருந்தார். 'பம்பா' என்றால் என்ன அர்த்தம் என்று இவரிடம் கேட்ட போது, அதே கேள்வியை தானும் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டதாகவும் அதற்கு அவர், பம்பா என்ற பெயரில் ஆஃப்ரிக்க நாட்டை சார்ந்த ஒரு பாடகர் உள்ளதாகவும் என்னுடைய குரலும் அவரது ஒன்றாக இருப்பதால் பாக்யா என்ற எனது பெயரை 'பம்பா பாக்யா' என மாற்றியதாக ரகுகான் கூறியதாக இவர் பதிலளித்தார்.
அதுமட்டுமன்றி தான் அணிந்திருக்கும் ஆடை தலைப்பாகை கூட, ஏ.ஆர்.ரஹ்மான் பரிசாக தந்தது என்றும் பிறர் மத்தியில் தன்னை தனித்துக் காண்பிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இவ்வாறு செய்ததாகவும் பம்பா பாக்யா தெரிவித்தார்.
திரைத்துறையில் பம் பாக்யா
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த 2.O திரைப்படத்தில் இடம்பெற்ற 'புல்லினங்கால்' பாடலை மனோ, ஏ.ஆர். அமீன் ஆகியோருடன் இணைந்து பம்பா பாக்யாவும் பாடி இருந்தார். இதுவே இவருடைய முதல் திரை அனுபவம்,
புல்லினங்கால் பாடலை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் 'சிம்டாங்காரன்' என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடி அசத்தினார் பம்பா பாக்யா. இப்பாடல், மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, பம்பா பாக்யாவுக்கும் மிகப் பெரிய அடையாளத்தையும் கொடுத்தது. இவரது குரல் மிகவும் வித்தியாசமாக இருப்பதால், இவர் பாடிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.
இதைத் தொடர்ந்து பல பாடல்களை பம்பா பாக்யா பாடியுள்ளார். சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தில் இடம்பெற்றுள்ள 'பொன்னி நதி' பாடலை, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஏ.ஆர்.ரைஹானாவுடன் பம்பா பாக்யாவும் பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் தான் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
மானசீக குருவாக ஏ.ஆர். ரஹ்மான்
திரைத்துறையில் தன்னை அறிமுகப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மானை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு அவருடனே பயணிக்க துவங்கினார், திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாமல் பல நாடுகளில் நடைப்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரிகளிலும் பங்கேற்று பாடினார்.
பம்பா பாக்கியா குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் இசையமைப்பாளரும் பாடகியுமான ஏ.ஆர்.ரைஹானாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
'பாக்யா எங்கள் குடும்பத்திற்கு 20 வருடங்களாக நன்கு அறிமுகமானவர் பக்திப் பாடல்கள் வாயிலாகத்தான் அவர் எங்களுக்கு முதலில் அறிமுகமானார் எப்போதெல்லாம் நானோ அல்லது ரஹ்மானோ நாகூர் செல்கிறோமோ அப்போதெல்லாம் எங்களை காண வந்துவிடுவார். பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர். அவரின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு ரஹ்மானால் பலன் கிடைத்தது. திரைத்துறைக்கு வந்தார், மக்களும் அவர் குரலுக்கு ரசிகர்களானார்கள், எல்லாம் நல்ல சென்று கொண்டு இருக்கும் போது இப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் யாரும் எதிர்பார்க்கவில்லை, உடல்நலனில் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்துவிட்டார். சர்க்கரை நோய் இருந்துள்ளது. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் இருந்துள்ளது. அதை யாரிடமும் கூறாமல் இறந்து விட்டார், எங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால் கூட மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்று இருப்போம். எல்லாம் காலம் கடந்துவிட்டது. அவருடன் பயணித்த நாட்கள் என்றும் மறக்க முடியாதவை' என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்