ரஜினியின் 47 ஆண்டுகள் முதல் விஜய் சேதுபதியின் தர்ம சங்கடம் வரை - இந்த வார சினிமா

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், @ash_rajinikanth / Twitter

    • எழுதியவர், நபில் அஹமது
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்த வாரம் தமிழ் திரையுலகில் நடந்த சில சுவாரஸ்யமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1.திரை உலகில் ரஜினி காந்தின் 47 ஆண்டுகள்...

இந்திய திரையுலகின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் வருகை தந்து 47 ஆண்டுகள் ஆகின்றன. இதனை கொண்டாடும் விதமாக ரஜினிகாந்தின் வீட்டிலேயே மிகவும் எளிமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த தகவலை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

2. தொடங்கியது 'பொன்னியின் செல்வன்' பயணம்...

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம், Lyca production

இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்' சரித்திர நாவலை மையப்படுத்தி உருவாகியள்ள இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், செப்டம்பர் முதல் வாரம் படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பிரமாண்டமாக நடைப்பெற உள்ள இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக அழைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3.வெற்றிக்கொண்டாட்டத்தில் 'விருமன்' படக்குழுவினர்....

விருமன்

பட மூலாதாரம், shakthivelan Facebook

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'விருமன்'. இயக்குநர் முத்தையா இப்படத்தை இயக்க 2D என்டேர்டைன்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து இருந்தார். இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேல் பெற்று இருந்தார். கார்த்தி நடிப்பில் வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வசூல் பெற்றதால் இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் விநியோகஸ்தர் சக்திவேல் படக்குழுவினருக்கு தங்க காப்பு பரிசு அளித்தார். நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யாவிற்கு தங்க காப்பை பரசளித்த சக்திவேலுக்கு அதே காப்பை சூர்யா திருப்பி அளித்தது நெகிழ்வான நிகழ்வாக அமைந்தது.

4. இறுதி கட்ட படப்பிடிப்பில் அஜித்தின் புதிய படம்...

நடிகர் அஜித்

பட மூலாதாரம், Bay view projects Facebook

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது கடந்த வாரம் சென்னை ஈ.சி.ஆர் சாலையில் பிரம்மாண்டமாக பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் நடிகர் அஜித் கலந்து கொள்ளவில்லை, இதன் தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் காட்சிகள் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது, இந்த படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளவதற்காக சென்னையிலிருந்து ஹைதராபாதிற்கு விமானம் மூலம் சென்றார் நடிகர் அஜித், அவர் விமானநிலையத்தில் இருந்து விமானத்தில் ஏறும் வரை பொதுமக்களால் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

5. வெற்றி மாறனால் தர்மசங்கடத்தில் நடிகர் விஜய் சேதுபதி...

வெற்றிமாறன் - விஜய் சேதுபதி

பட மூலாதாரம், RS infotainment Facebook

வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து வரும் படம் 'விடுதலை' இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். சிறிய பட்ஜெட்டாக தொடங்கப்பட்ட இப்படம், பட்ஜெட் எல்லை மீறி சென்றுக்கொண்டு இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதியும் முதலில் 7 நாட்கள் மட்டுமே தேதி அளித்து இருந்த சூழ்நிலையில் தற்போது 45 நாட்கள் நடித்துள்ளார். ஆனாலும் இப்படம் முடியும் நிலையில் இல்லை. இந்நிலையில் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட தயாரிப்பு தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கும் தற்போது தடை ஏற்பட்டுள்ளது இரண்டாம் பாகத்தை முழுவதுமாக முடிக்க விஜய் சேதுபதியிடம் மேலும் 30 நாட்கள் தேதி கேட்கப்பட்டுள்ளதாம் விஜய் சேதுபதி தரப்பிலோ ஏற்கனவே அவர்கள் கேட்ட தேதிக்கு மேல் ஒதுக்கி கொடுத்தபின்பும் தேதிகள் கேட்பதினால் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பிற படங்களின் வேலைகள் பாதிக்கப்படுகிறது இதனால் கடும் தர்மசங்கடத்தில் விஜய் சேதுபதி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6.ஆமீர் கானால் ஹ்ரித்திக் ரோஷனுக்கு ஏற்பட்ட சிக்கல்...

ஹ்ருத்திக் ரோஷன்

பட மூலாதாரம், Ynot studios Facebook

நடிகர் ஆமீர் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லால் சிங் சத்தா' திரைபடம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. நடிகர் ஆமீர் கான் முன்பு இந்தியாவின் தனிநபர் பாதுகாப்பு குறித்து பேசியது கடும் எதிர்ப்புகளை சந்திதது. படம் வெளியாவதற்கு முன் #boycott_laal_Singh_chaddha என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது. ஆனால், நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் லால் சிங் சத்தா படம் பார்த்துவிட்டு பிறரும் பார்க்கும்படி ஒரு டிவீட் செய்து இருந்தார். இதனால் கோபமடைந்த சமூக வலைதளவாசிகள் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் வேதா ஹிந்தி மறு ஆக்கத்தை புறக்கணிக்கும் விதமாக #boycott_Vikram_Vedha என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

காணொளிக் குறிப்பு, ராக்கெட்ரி படத்தை எடுக்க மாதவன் வீட்டை இழந்தாரா? - ட்விட்டரில் நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :