"பேரனுக்கு ஜோடியாக நடிக்க காரணம் இதுதான்" - இன்ஸ்டாவில் கலக்கும் ராஜாமணி பாட்டி

இன்ஸ்டாவில் கலக்கும் பாட்டியும் பேரனும்

பட மூலாதாரம், Thoufiq & Rajamani

    • எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சென்னையைச் சேர்ந்த 75 வயது பாட்டி ராஜாமணியும் அவருடைய 26 வயது பேரன் தௌபிக்கும் சேர்ந்து வெளியிடும் வீடியோக்களுக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். பிபிசி தமிழுக்காக இருவரும் சேர்ந்து பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம்.

"என்னுடைய பேரன் விஸ்காம் சென்னையில் படித்து கொண்டிருந்தார். அப்போது வெளியில் சாப்பிடும் சாப்பாடு பேரனுக்கு ஒத்துக்கொள்ளாததால் அவருக்கு சமைத்து கொடுக்க நான் சென்னைக்கு வந்தேன். பேரன் படித்து முடித்ததும் நடிகராக வேண்டும் என்ற ஆசைப்பட்டார். அதனால் வீட்டிலேயே நடித்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். எப்போதும் கதவை மூடிக்கொண்டு பயிற்சி செய்து கொண்டிருப்பார். ஒரு நாள் அவரிடம், இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது, வேறு வேலை ஏதாவது வேலை தேடி கொள்ளலாமே என்று கேட்ட போது தான், அவர் நடித்து வைத்திருந்த நூற்றுக்கணக்காண வீடியோக்களை என்னிடம் காண்பித்தார். அதை பார்த்து அசந்து போனேன். அவருக்கு துணையாக இருக்கட்டுமே என்று தான் முதலில் வீடியோவில் நடிக்க ஒப்புக் கொண்டேன் " என்று கூறுகிறார் ராஜாமணி பாட்டி.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் " ஒரு கோடிப்பே " என்ற டயலாக் தான் ராஜாமணி பாட்டியின் முதல் நடிப்பு. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரல் ஆக, அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கி இருக்கிறார் ராஜாமணி பாட்டி.

இன்ஸ்டாவில் கலக்கும் பாட்டியும் பேரனும்

பட மூலாதாரம், Thoufiq & Rajamani

" எங்களுக்கு சமூக வலைதளங்களில் வரும் அனைத்து கமென்ட்டுகளை படிக்கும் போது அதில் பெரும்பாலோனார் என்னுடைய உடை குறித்து கேட்பார்கள். அப்போது தான் அந்த யோசனை உதித்தது. பின்னர் எந்த வீடியோவில் நடிக்கிறோமோ அதே வீடியோவில் நடிகர் நடிகர்களின் உடை சாயலை நானும் என் பேரனும் பின்பற்ற தொடங்கினோம். அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என உற்சாகம் பொங்க கூறுகிறார் பாட்டி.

பாட்டி மற்றும் பேரனின் விதவிதமான ஆடைகளை தேர்வு செய்வது பாட்டியின் பெண்தான்.

எந்த வீடியோவில் நடிக்கலாம் என்பது முடிவானதும், அதே போல் உடை வாங்க பாரிஸ் கார்னர் செல்வோம். பின்னர் அதைத் தைத்து அதற்கு மேட்சிங்காக ஆபரணங்கள் வாங்கி பின்னர் மேக்கப் என அனைத்து விஷயங்களையும் பார்த்து, பார்த்து செய்கிறார் ராஜாமணி பாட்டியின் பெண்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

"என்னுடைய வீடியோவை பார்த்து நான் இந்த வயதிலும் நடிப்பது குறித்து பலரும் பாராட்டுகிறார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சில இடங்களில் குட்டிக் குழந்தைகளும் என்னை அடையாளம் கண்டு பேசுகிறார்கள். போன வாரம் கூட ஒரு ஈரோட்டில் நடந்த கிரகப்பிரவேச நிகழ்வில் ஒரு குட்டி குழந்தை என்னிடம் வந்து, தான் யூட்யூப் சேனல் வைத்திருப்பதாகவும் அதில் தன்னுடன் டிக்டாக் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் அவரை பற்றி என்னுடைய சமூக வலைதங்களிலும் பேசுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார். எனக்கு பெரியவர்களை விட குட்டிக் குழந்தைகள் ரசிகர்களாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொல்கிறார் ராஜாமணி பாட்டி.

ராஜாமணி பாட்டி 35 வருடங்களாக தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்திருக்கிறார். எப்போதும் ரசனையோடு ஏதாவது ஒரு செயலில் ஈடபட வேண்டும் என்று பாட்டியின் எண்ணம். அது பேரனின் இன்ஸ்டா வீடியோ மூலம் நிறைவேறி இருக்கிறது.

இன்ஸ்டாவில் கலக்கும் பாட்டியும் பேரனும்

பட மூலாதாரம், Thoufiq & Rajamani

படக்குறிப்பு, குடும்பத்தினருடன் தௌபிக் மற்றும் ராஜாமணி

நான் நடிப்பதை எல்லாம் பாட்டியிடம் அவ்வப்போது காண்பிப்பேன். நன்றாக நடிக்கிறாய் என்று பாராட்டுவார்கள். முதல் வீடியோவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்போது கூடுதலாக இருக்கிறது.

முதலில் சாதாரண உடையில் நாங்கள் நடித்தாலும் பின்னர் வீடியோக்களுக்கு தகுந்தவாறு உடையணிந்து நடித்த போது அதிக வரவேற்பு இருந்தது. அதனால் அதை அப்படியே தொடர்கிறோம். ஒரு நாளில் எத்தனையோ கவலைகளுக்கு இடையி வாழ்க்கையை வாழ்கிறோம், அதில் சில நிமிடங்கள் மக்கள் எங்கள் வீடியோக்களை பார்த்து தங்களை மறந்து சிரிக்கிறார்கள். அந்த மனத்திருப்தி போதும் என்கிறார் பேரன் தௌபிக்.

இன்ஸ்டாவில் கலக்கும் பாட்டியும் பேரனும்

பட மூலாதாரம், Thoufiq & Rajamani

உங்களை பல பேர் பாராட்டினாலும் உங்களை விமர்சனமும் செய்கிறோர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்று ராஜாமணி பாட்டியிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில் என்னை அசர வைத்தது.

"என்னுடைய சின்ன வயதில் இருந்தது எனக்கு ரசனைகள் அதிகம். சின்ன சின்ன விஷயங்களை கூட ரசித்து செய்வேன். நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை அதை நமக்காக தான் வாழ வேண்டுமே தவிர அடுத்தவர்களுக்காக அல்ல. ரசனை இருக்கும் வரை எனக்கு வயது என்பது எப்போதும் எண்கள் தான். நான் செய்பவைகளை என் குடும்பம் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள். நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அடுத்தவர் ஒரு கருத்து சொன்னால் அது உங்கள் சொந்த கருத்து என விட்டுவிடுவேன். எதுவுமே நாம் எடுத்து கொள்வதில் தானே இருக்கிறது," என கண்களில் துள்ளலுடன் முடித்தார் ராஜாமணி பாட்டி.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: