இயக்குநர் வஸந்த் பேட்டி: "எனக்கு நான்தான் வாத்தியார்"

- எழுதியவர், வீ. விக்ரம் ரவிசங்கர்
- பதவி, பிபிசி தமிழ்
பெண்ணை ஆணின் கண்ணுக்கு விருந்தாகக் காட்சிப்படுத்துவது அல்லது பெண்ணை மையமாக வைத்துப் படமெடுப்பதாகச் சொல்லி, நாயகனின் சாகசங்களைத் தானும் செய்கிறவளாக வடிவமைப்பது. இந்த இரண்டைத் தவிர பெண்ணை பெண்ணாகவே காட்டி பெண்ணியம் பேசும் கதைகளைக் கையாளும் வெகு சில இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் வஸந்த் சாய்.
அவரது இயக்கத்தில் வெளியான 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படமும் அப்படித்தான்.
வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்த மூன்று பெண்களின் மூன்று தனித்தனி கதைகளைச் சொல்லும் ஆந்தாலஜி வகைப் படம் அது. எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய மூவரும் எழுதிய சிறுகதைகளை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் வஸந்த்.
ஆண்மை, பெண்மை என்று இந்தச் சமூகம் வகுத்து வைத்திருக்கிற கற்பிதங்களை இந்தப் படம் கேள்விக்குட்படுத்துகிறது. எதை ஆண்மை என நாம் கொண்டாடுகிறோமோ அது இவ்வளவு கேவலமானதா என்பதை 'பொட்டில் அடித்தது போல்' இயல்பாகச் சொல்கிறது.
2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்குத் தேர்வான படங்கள், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.
சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது, சிவரஞ்சனி கதாபாத்திரத்தில் நடித்த லக்ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கு சிறந்த துணை நடிகர் விருது, ஸ்ரீகர் பிரசாத்துக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது என, மூன்று தேசிய விருதுகளை வாங்குகிறது இந்தப்படம்.
படத்தின் இயக்குநர் வஸ்ந்துடன் பிபிசி தமிழ் நடத்திய நேர்காணலை, கேள்வி பதில்களாக இங்கே வழங்குகிறோம்…
சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகர், சிறந்த படத்தொகுப்பு- மூன்று தேசிய விருதுகள் கிடைத்திருக்கின்றன. இது நீங்கள் எதிர்பார்த்தது தானா? படம் எடுக்கும்போது, இத்தனை விருதுகள் கிடைக்கும் என்று நினைச்சீங்களா?
எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா? கண்டிப்பாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை விட, கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்னும் அதிகம் பேர் படத்தைப் பார்ப்பார்கள் என்பதால் எதிர்பார்த்தேன். அந்த வகையில், விருதுகள் கிடைத்ததில் மகிழ்ச்சி. பெண்களுக்காக எடுக்கப்பட்ட படத்தை இன்னும் நிறைய பேர் கூடுதலாகப் பார்ப்பதற்கு இந்த விருதுகள் காரணமாக இருக்கின்றன என்பதில் மிக்க மகிழ்ச்சி.
இந்த படம் வெளியாகும் முன்பே பல சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்திருந்தது. படம் உருவாகும்போது குறிப்பிட்ட பிரிவில், விருது உறுதி என்று நினைத்தீர்களா? அப்படியென்றால் அது எந்த பிரிவு?
ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது முதல் படத்தில் இருந்தே, விருதுக்காக படம் எடுப்பதை நான் விரும்புபவனும் அல்ல. அதை நம்புபவனும் அல்ல. நோக்கம் அதில் இருக்கக் கூடாது. செய்வதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். செடியை வளர்க்க விரும்புபவன், தினமும் அந்தச் செடியைப்பிடுங்கி வளர்கிறதா என்று பார்த்தால், அது வளராது. ஏமாற்றம்தான் மிஞ்சும்.
எனக்குப் பிடித்ததை எடுக்கிறேன். எனக்குள் ஒரு சவாலை உருவாக்கிக்கொண்டு, அதை எவ்வளவு தூரம் எதிர்கொள்ள முடியும் என்று நானே சோதித்துப் பார்க்கிறேன், அவ்வளவுதான். அதுபோன்ற படைப்புகளை நானே தயாரிப்பதும் அதற்காகத்தான்.

உங்கள் படத்திற்கான கதைகளை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கான கதைத்தேர்வு எப்படி நடந்தது?
நான் படத்திற்காக கதைகள் படிக்கவில்லை. கதைகளை எழுதுவதும், படிப்பதும் எனக்குப் பிடிக்கும். எனது அன்றாட நடவடிக்கைள் அவை. இந்தப் படத்திற்காக தேர்வு செய்த இந்த கதைகளும் நான் இப்போது படித்தவை அல்ல. எனது 20 வயதில் படித்திருக்கிறேன், 40 வயதில் படித்திருக்கிறேன், ஒவ்வொரு முறை படிக்கும்போதும் என்னுடைய முதிர்ச்சிக்கு ஏற்ற தாக்கத்தை இந்தக் கதைகள் ஏற்படுத்தின. எனது திருமணத்திற்கு முன் இந்தக் கதைகளை நான் படித்தபோது ஒரு தாக்கம் ஏற்பட்டது. திருமணத்திற்கு பின் படித்தபோது வேறொரு தாக்கம் ஏற்பட்டது. இப்படி, எனக்குள் ஏற்பட்ட தாக்கத்தை படமாக்கினேன்.
அதை முடிந்தவரை எந்த வகையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் படமாக்க ஒவ்வொரு முறையும் தொடர்ந்து முயற்சிக்கிறேன். என்னால் முடியுமா என்று நானே செய்து பார்க்கும் முயற்சிதானே தவிர, வேறொன்றுமில்லை. எனது பார்வையில், அப்படிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வகையில், `வாழ்` படத்தின் இயக்குநர் அருண் பிரபுவை நான் பாராட்டுகிறேன். அந்தப் படமும் இன்னும் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அருவி என்கிற படத்தைக் கொடுத்த அவர், அதற்கு அடுத்ததாக எடுத்த முயற்சிக்கு எனது பாராட்டுகள்.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் பிரதான கதாபாத்திரங்களான, சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி மூவரும் காலத்தால் வேறுபட்டாலும் இரண்டாம் பாலினமாக ஒடுக்கப்படுவதில் ஒரே கோட்டில் நிற்கிறார்கள். ஆண்களுடன் வாழும் பெண்கள் அனைவரது நிலையும் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றுதானா?
அப்படியெல்லாம் நான் சொல்லவில்லை. 'இந்த கேள்வி கேட்டால்' அதுதான் நீங்கள். இன்னும் இதுபோல், கதை சார்ந்தோ, கதாபாத்திரம் சார்ந்தோ என்னென்ன கேள்விகள் யார் யாருக்குத் தோன்றுகிறதோ, அது அவர்களது எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்குமே தவிர, அதை நான் சொல்வதாக ஆகிவிடாது. ஆதே சமயம், அவரவர் எண்ணங்களையும், கருத்துக்களையும் நான் மதிக்கிறேன். ஆனால், நான் நினைத்ததை படத்தில் சொல்லிவிட்டேன். அதுதான் அந்தப் படம். அதில் எல்லாம் இருக்கிறது. ஜெயகாந்தன் அருமையாகச் சொல்வார், ``கதையில் சொல்லாததையா நீங்கள் கேட்கும்போது சொல்லப் போகிறேன்`` என்று. அப்படித்தான் அது.
உங்கள் முதல் படமான கேளடி கண்மணி, ஆசை, அப்பு, ரிதம், சத்தம் போடாதே, நேருக்கு நேரில் 'அண்ணி' கதாபாத்திரம், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நாயகனின் 'தாயார்' கதாபாத்திரம் என, பெண்களுடைய உளவியல் சார்ந்த சிரமங்களை ஒவ்வொரு முறையும் இவ்வளவு அழுத்தமாக தொடர்ந்து பதிவு செய்வதற்கான காரணம் என்ன?
நான் அதை கவனித்ததுதான் காரணம். பெண்களின் வாழ்க்கையோ, நிலையோ அப்படி இல்லை என்று யாரும் சொல்ல முடியாதே… உங்கள் அம்மாவைப் பற்றிய காட்சிகள்தான் அவை, என் அம்மாவை பற்றிய காட்சிகள்தான் அவை. தினமும் காலையில் எழுந்து குழந்தைகளை கிளப்பி பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது, கணவர் வேலைக்குச் செல்லும்வரை அவருக்கு தேவையானதைச் செய்வது, வீட்டு வேலைகளை கவனிப்பது, பெரியவர்களை கவனிப்பது என, இதிலேயே அவர்கள் சுழல்வதைப் பார்க்கையில், இதில் ஏதோ ஒன்று இருக்கு. காட்சிப்படுத்த வேண்டும் என்று எனக்கு தோன்றியது. எடுத்தேன், எடுத்துக்கொண்டிருக்கிறேன். அதில் கூட கைத்தட்டல்கள் வாங்க முடிகிறதே… இந்தப் படத்தில் கூட, இறுதிக்காட்சிக்கு முன் சிவரஞ்சனிக்கு கிடைத்த கைத்தட்டல்களை அப்படித்தான் நான் பார்க்கிறேன்.
திடீரென ஆந்தாலஜி பக்கம் திரும்பியது ஏன்? இந்தக் கதையை ஆந்தாலஜியாதா எடுக்கணும்னு நினைச்சதுக்கு காரணம் என்ன?
எல்லாத்தையும் முயற்சி செய்யுறது எனக்குப் பிடிக்கும். இந்தக் கதைகளை இணைத்து ஹைபர்லிங்க் படமாகக் கூட எடுத்திருக்க முடியும். நவீனமாகவும் கொடுத்திருக்க முடியும். அதையெல்லாம் தாண்டி, இதை ஒரு கிளாசிக் சினிமாவாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன், செய்தேன். அப்படிச் செய்யவேண்டும் என்று எனக்குள் இருந்த பிடிவாதம்தான் அதைச் செய்ய வைத்தது. இன்னும் சொல்லப்போனால், ஒரே கதையாகச் செல்வதைவிட, இந்த விஷயத்தை 3 கதைகளில் சொல்லும்போது தாக்கம் அதிகமாக இருக்கும் என்று நம்பினேன். அதோடு, எனக்குப் பிடித்த மூன்று எழுத்தாளர்களின் கதைகளும் கூட.
அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய மூன்று பேரின் கதைகளைத் தழுவிய திரைக்கதைதான் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். இந்த மாதிரி சிறுகதைகள், இலக்கியங்கள மெயின் ஸ்ட்ரீம்க்காக ஒரு முழுநீள படமா காட்சிப்படுத்துறதுல என்னென்ன சவால்கள் இருப்பதாக நினைக்கிறீர்கள்?
முழு நீள படமான்னு கேட்டால் இல்லை… காட்சிப்படுத்துறதுனாலே சவால்தான். ஏனென்றால் அது வேறு ஒருவர் எழுதிய கதை. இன்னொருவரின் கதையை காட்சிப்படுத்துவது என்றாலே சவால்தானே. என்னைப் பொறுத்தவரை, என்னால் எழுதாமல் படமெடுக்க முடியாது. ஒரு ரைட்டர் டைரக்டர் ஆகத்தான் என்னை நான் பார்க்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் பிடித்த கதைகளை எடுக்கத் தோன்றியது. என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டு, ஒரு விஷயத்தை செய்யத்தூண்டுவது நானேதான். எனக்கு நானே வாத்தியார் என்கிற வகையில், எனக்குப் பிடித்த கதை படமாக வரவில்லை என்றால், என்னை நானே ஏன் என்று கேட்டுக்கொள்வதுண்டு, கோபப்படுவதும் கூட உண்டு. அந்தக் கேள்விக்கான விடையாகத்தான் படித்த பிடித்த கதைகளை எடுக்கிறேன். அதையும் பெர்பெக்டாக எடுக்க வேண்டும் என்று நானே என்னை வற்புறுத்துகிறேன். பெர்பெக்ஷன் என்பது என்னைப்பொறுத்தவரை பெர்சப்ஷன் தான். யாராவது ஒருவருக்கு அது புரியும். அந்த ஒருவருக்காக பெர்பெக்ஷன் அவசியப்படுகிறது.
உதாரணத்திற்கு கேளடி கண்மணி படத்தை கூறலாம். மொத்த கதையையும் இரண்டே ஷாட்டில் சொல்லியிருப்பேன். அதை நான் சொன்னால்தான் பலருக்குப் புரியும். அனாதை ஆசிரமத்திற்குச் சென்ற குழந்தைய அழைத்துவர எஸ்.பி.பி-யும், ராதிகாவும் ஒரு குடையில் செல்வார்கள். வரும்போது குழந்தையும், எஸ்.பி.பி-யும் மட்டும் குடைக்குள் இருப்பார்கள், ராதிகா தனியாக நிற்பார். யாராவது இருவர் மட்டுமே அந்தக் குடையில் இருக்க முடியும், இதுதான் அந்தப் படத்தின் மொத்தக் கதை. இதைச் செய்ய வேண்டும் என்று யாரும் என்னை கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. ஆனால், ஒரு மேடையில் இதைக் குறிப்பிட்டுப் பேசினார் பாரதிராஜா. அந்தத் தருணம்தான் எனக்குத் தேவைப்பட்டது.

ஓடிடி தளங்கள் அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து ஆந்தாலஜி வகை படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஒவ்வொருவருக்கும் ஒன்னொன்னு பிடிக்கும். அதில் ஆந்தாலஜி வகை என்பதும் ஒன்று, அவ்வளவுதான். இதை நல்ல விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன். நான் தனியாக மூன்று கதைகளை எடுத்திருக்கலாம். ஆனால், இந்த பார்மட்டில், நான்கைந்து பேர் சேர்ந்து ஆளுக்கொரு கதையாக படமெடுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. குறைந்த பொருட்செலவில் எடுக்க முடிகிறது. ஆனால், குறும்படத்திற்கும் ஆந்தாலஜிக்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுக்கொரு ஷார்ட்பில்ம் பண்ணா ஆந்தாலஜி என்று எண்ணிவிடக் கூடாது. அந்தக் குறுங்கதையை எந்தளவுக்கு எபக்டிவ்வா சொல்ல முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டு. அப்போதுதான் சினிமாவின் தரத்தைப் பராமரிக்க முடியும்.
மூன்று தசாப்தங்களை கண்ட இயக்குநர் நீங்கள்… இத்தனை ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் பார்வையில் வளர்ச்சி என்றால் என்ன?
நன்றாகவே வளர்ந்திருக்கிறது. வித்தியாசமான கதைகள் சொல்வதிலும், நம்ம ஊர் கதைகளைச் சொல்வதிலும் பலர் கவனம் செலுத்தி வருவது ஆரோக்கியமான விஷயம்தான். அதே சமயம், சினிமாத்துறை தொழில்நுட்ப ரீதியில் எந்தளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறதோ, அதற்கு ஈடுகொடுத்து, அதையெல்லாம் பயன்படுத்தி, அதன் மூலம் வித்தியாசமான கதைகளையும், நம்ம ஊர் கதைகளையும் சொல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













