You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதல் முஸ்லிம் சூப்பர்ஹீரோவை கொண்ட 'மிஸ் மார்வெல்' - சர்வதேச ஊடகங்கள் ஏன் பாராட்டுகின்றன?
டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளிவந்திருக்கும் முதல் முஸ்லிம் சூப்பர் ஹீரோ கதையான மிஸ் மார்வெல் (Ms Marvel) தொடரின் வெளியீட்டை, பாப் கலாச்சாரம் எனப்படும் இளம் வயதிரை கவரும் பொழுதுபோக்கு வரலாற்றின் மிகவும் மகிழ்ச்சிக்கரமான பகுதி என்று விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
இந்தத் தொடர் ' அவெஞ்சர்ஸ்' காமிக் புத்தகங்களை விரும்பும் டினேஜ் பெண்ணான கமலா கானை மையமாகக் கொண்டது. இதில் பாகிஸ்தானி-கனடாவைச் சேர்ந்த புது வரவான இமான் வெல்லானி நடித்துள்ளார்.
இந்தக் கதையில், அவர் இருக்கும் வட்டாரத்தில் தான் ஒத்துப் போவதற்குத் தடுமாறுகிறார். எதுவரையில்?
அவருக்கு சூப்பர் பவர் கிடைக்கும் வரையில்.
இந்த தொடர் குறித்து சர்வதேச ஊடகங்களின் விமர்சனம் என்ன?
கமலா கானாக நடித்திருக்கும் இமான் வெல்லானி, வேடிக்கையானவராகவும் வசீகரமாகவும் இருப்பதாக 'தி கார்டியன்' பத்திரிகை தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த பத்திரிகையின் தொலைக்காட்சி விமர்சகர் லூசி மங்கன், "பொதுவாக, புதிய நடிகர்கள் குறித்து நாம் பயப்படுவோம். ஆனால் வெல்லானி ஊதா நிறத்திற்காகவே (இந்த தொடரின் அவரது சக்திகளின் நிறம்) பிறந்திருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் அதில் வியந்து, மார்வெல் திரைப்பட உலகம்தான் அவருக்குச் சரியான இடம் என்று கூறலாம்," என்று எழுதியுள்ளார்.
இந்தத் தொடரில் ஆறு எபிசோடுகள் உள்ளன. அதில் தற்போது வெளியாகியுள்ள இரண்டு எபிசோடுகள் பற்றி மங்கன், வசீகரமாகவும் புத்திசாலித்தனமாகவும் உண்மையாகவும் இருப்பதாகக் கூறுகிறார்.
மார்வெல் சூப்பர் ஹீரோ கதைகள் காமிக் புத்தகங்களில் இருந்து, 1970களில் தொலைக்காட்சிகளில் தொடராகவும் வெள்ளித்திரையில் திரைப்படங்களாகவும் வெளியாகி வருகின்றன. ஆனால் சமீபகாலமாக அதன் கதாபாத்திரங்களை பன்முகத்தன்மையுடன் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த புதிய தொடரின் தொடக்கத்திலும், கமலா கான் தன்னைப் போன்ற சூப்பர் ஹீரோக்கள் இல்லை என்று கூறுகிறார்.
அதில், "ஜெர்சி நகரத்தைச் சேர்ந்த மாநிறப் பெண்கள் இந்த உலகைக் காப்பாற்றுவதில்லை," என்று பெருமூச்சு விடுகிறார். அவர் ஒரு கலைஞராக, வீடியோக்கள் பதிவிடுபவராக, (Vlogger) அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களின் ரசிகராக இருப்பதில் தனது கவனத்தைச் செலுத்துகிறார்.
ஆனால், அவருடைய கொள்ளுப்பாட்டிக்குச் சொந்தமான ஒரு பழைய வளையலை அணியும் போது, அவருடைய வாழ்வில் மாற்றங்கள் நிகழ்கின்றன.
"கமலாவின் பாகிஸ்தானிய பாரம்பரியத்தை, குறிப்பாக பிரிவினையின்போது ஏற்பட்ட தாக்கத்துடன், அவரது சக்திகளை அந்த வளையல் பிணைக்கிறது," என்கிறார் மங்கன்.
இந்தத் தொடர் குறித்து 'பைனான்சியல் டைம்ஸ்' பத்திரிகையில் , "தீமையுடன் போராடுவது பற்றிய ஒரு சாகசக் கதையில், அறிமுகமாகி இருக்கும் வெல்லானி வசீகரமாக இருக்கிறார்," என்று கூறியுள்ளது.
'கான்'களை ஒரு சாதாரண குடும்பமாகச் சித்தரிக்கும் இந்தத் தொடரை, "பாப் கலாசார வரலாற்றின் சிறிய பகுதி என்றாலும், குறிப்பிடத்தக்க பகுதி," என்று பத்திரிகையாளர் டான் ஐனாவ் விவரிக்கிறார்.
"கமலா ஒரு பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் என்பது தற்செயலான விஷயமல்ல," என்று அவர் கூறுகிறார்.
"சமீபத்திய பிக்சர் திரைப்படம் டர்னிங் ரெட் ('பெண்ட் இட் லைக் பெக்காம்' முதல் 'தி பிக் சிக்' வரை அனைத்தும்) போலவே, இந்தத் தொடர் நகைச்சுவையாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. மேலும், இது பாரம்பரியத்தில் வேரூன்றிய பெற்றோருக்கும் தங்களின் அடையாளம் குறித்த உணர்வுக்கும் அனைத்தையும் புரிந்து கொள்ள விரும்பும் சுழ்நிலைக்கும் இடையே சிக்கியிருக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள கலாச்சார இடைவெளியைப் பிரதிபலிக்கிறது."
இந்த கமலா கான் கதாபாத்திரம், முதன்முதலில் 2014இல் தனி காமிக் புத்தகத் தொடராக வெளிவந்தது. இந்த கதாபாத்திரம், "புத்தகங்களில் வரும் மார்வெல் சூப்பர் ஹீரோ தரவரிசையில் சிறந்த தொடராக இருக்கிறது," என்று ரோலிங் ஸ்டோன் பத்திரிகை விவரித்தது.
இதன் தழுவலாக வெளிவந்திருக்கும் 'மிஸ் மார்வெல்' தொடரின் முதல் இரண்டு எபிசோட்களில், அவர் இன்னும் ஒரு "கவர்ச்சிகரமான" கதாபாத்திரமாகத் திகழ்ந்தார். ஆனால், அவர் முன்மாதிரியான சூப்பர் ஹீரோவாக இருக்கிறாரா என்பது சந்தேகம் என்று அலன் செபின்வாலின் விமர்சனம் கேள்வி எழுப்புகிறது.
"மிஸ் மார்வெல் பற்றி நான் சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால், அது ஒரு மார்வெல் தொடர் என்பதை எளிதில் மறந்து விடக்கூடிய அளவுக்கு நீண்ட காட்சிகளைக் கொண்டுள்ளன," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்த தொடரின் முதல் இரண்டு எபிசோட்கள், கமலா, அவரது குடும்பத்தினர், அவரது நண்பர்கள் மற்றும் உள்ளூர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ரசிகர்களிடம் கொண்டு சேர்பதற்கான வேலையைச் செய்கின்றன. இதனால் ஒரு கட்டத்தில் மார்வெல் படங்களில் இணைப்புகள் கிட்டத்தட்ட மறைந்து விடுகின்றன." என்கிறார்.
"கமலா தன் குடும்பத்தின், சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் என்னவாக இருக்க முடியும் என்பதை விரிவுபடுத்த முயலும் ஓர் உருவகமே, அவர் புதிதாகக் கண்டறியும் சூப்பர் பவர்கள்," என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்த திரைப்படத்தில் நடிக்க தேர்வான நடிகை வெல்லானி, அவரது கூற்றை ஆமோதிக்கிறார். அவர் 'தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "எதிர்பார்ப்புகளைத் தகர்த்தி எல்லா அடையாளங்களையும் தூக்கி எறிந்து, தனி மனிதராக உருவாக்குவதே. எங்கள் தொடரின் முக்கிய கரு இதுதான் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.
இந்த தொடரில் நடிப்பதற்கு முன், தனது பாகிஸ்தானிய பாரம்பரியத்திலிருந்து எவ்வாறு அவர் விலகி இருந்தார் என்பதை வெல்லானி குறிப்பிட்டார்.
இந்த கதாபாத்திரத்தை உருவாக்குவதில் தயாரிப்பாளர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிடுகையில், 'தி இன்டிபென்டன்ட்' பத்திரிகை, மிஸ் மார்வெல்லை, சகித்துக்கொள்ளகூடிய தொடர் எனவும் , குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட தொடர் என்று மதிப்பிடுகிறது.
விமர்சகர் நிக் ஹில்டன் இவ்வாறு எழுதுகிறார்: "நல்ல நோக்கங்களை விமர்சனம் செய்ய நான் இங்கு இல்லை. உண்மையில், மார்வெல் ஒரு பரவலான வணிக நிறுவனமாகும். ஆனால் இது போன்ற படைப்பில், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த படைப்பாளிகளை காண்பது புத்துணர்ச்சி அளிக்கிறது".
"இந்தத் தொடரை பிரிட்டிஷ்-பாகிஸ்தானி நகைச்சுவை நடிகர் பிஷா கே அலி எழுதியதாகவும், பெல்ஜிய இரட்டையர்களான அடில் & பிலால் இயக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"இந்த தொடர் முழுவதும் தெற்காசிய கலாச்சாரத்தின் மீதான அன்பைக் காட்டுகிறது," என்று அவர் கூறினார். "ஆனால் இது ஒரு சூப்பர் ஹீரோ படைப்பாக இருக்கிறதா என்பதுதான் உண்மையான கேள்வியாக இருக்கிறது."
இந்தக் கேள்விக்கான பதில் ஆம் என்கிறது 'எம்பயர்' பத்திரிகை. இது குறித்து டெஸ்டினி ஜாக்சன் இவ்வாறு எழுதுகிறார்: "இதன் தொடக்க காட்சிகள் சற்றே இலகுவாக இருக்கிறது. ஆனால் இது பெரியவர்களையும், இளம் வயதினரையும் முக்கிய பார்வையாளராக கொண்டுள்ளது. இது நிச்சயம் மார்வெல் திரைப்படங்களில் தனித்துவமானப் படைப்பு."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்