You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரை சித்திரைத் திருவிழா: ஆய்வாளர்கள் சொல்லும் வியக்கவைக்கும் வரலாற்று தகவல்கள்
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் பொதுவாகக் கோயிலுக்கும் சமூகத்திற்குமான உறவைக் காத்து வளர்த்து வருவன. சில திருவிழாக்களுக்கே தொலைவில் உள்ள மக்களையும் ஈர்த்து சமூகத்திற்கும் கோயிலுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் ஆற்றல் அமைந்திருக்கிறது என்கிறார் தொ.பரமசிவன். அப்படி அவர் குறிப்பிடும் கோயில்தான் மதுரை கள்ளழகர் கோயில்.
மதுரை என்றதும் மீனாட்சியும் கள்ளழகரும் நினைவிற்கு வரும். மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில் ஆகிய இரு கோயில்களின் ஒருங்கிணைந்த விழாக்கள்தான் சித்திரைத் திருவிழாவாக நடைபெறுகிறது.
திருவிழாக்களின் திருவிழா
மாசி மாதத்தில் நடைபெற்ற திருவிழா சித்திரை மாதத்திற்கு மாறியது எதற்காக? பெருமாள் கள்ளழகர் ஆகியது எப்படி? பல்வேறு சமூகத்தினரும் பெருந்திரளாக பங்கேற்பது ஏன்? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கான சுவராஸ்ய பதில்களைத்தான் இங்கே தொகுத்துள்ளோம்.
சித்திரைத் திருவிழாவை "திருவிழாக்களின் திருவிழா" என்றும் சொல்கிறார்கள். கடந்த 1961ம் ஆண்டு கணக்கெடுப்பின்படியே சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக பதிவாகியுள்ளது. கடந்த 1976- 79 ஆண்டுகளில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிஞர் தொ.பரமசிவன் செய்த ஆய்வினை 'அழகர் கோயில்' என்று புத்தமாக வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வு நூலில், அழகர் கோயில், சித்திரைத் திருவிழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு, திருவிழாக்களில் கிராமப்புற மக்களின் ஆர்வமும் பங்களிப்பும், வரலாற்று, பண்பாட்டு நிகழ்வுகள், பல்வேறு சமூக மக்களின் தொடர்பு உள்ளிட்டவை குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, மீனாட்சி பட்டாபிஷேகம் குறித்து பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன் குறிப்பிடுகையில்,"மதுரையை தவிர வேறு எந்த ஊரிலும் பெண் தெய்வம் முடிசூடி, திக்விஜயம் செய்யும் வழக்கம் கிடையாது. பாண்டியர்களின் குலதெய்வம் என மீனாட்சியை சொல்லும் வகையில் பட்டம் சூடும் அன்று பாண்டியர்களின் குலச்சின்னமான வேப்பம் பூ மாலையை சூடுகிறாள்" என்கிறார்.
திருமலை நாயக்கர் காலத்தில்
மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண திருவிழாவை, அறுவடை முடியாத நிலையில் வேளாண்மை பெருமக்களால் காணமுடியாமல் இருந்ததால் அந்த விழா சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா தேரோட்டம் மாசி வீதியில் நடப்பது இதற்கான சான்று என்கிறது தொ.பரமசிவனின் ஆய்வு நூல்.
சோழவந்தான் அருகேயுள்ள தேனூர் எனும் இடத்திற்கு சென்று வந்து கொண்டிருந்த அழகர் ஊர்வலம், திருக்கல்யாணம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து மதுரைக்கு வரும்படி மாற்றப்பட்டுள்ளது.
வண்டியூர் அருகே மண்டூக முனிவருக்கு சாப விமோஷனம் கொடுக்க அழகர் செல்லும் மண்டபத்தின் பெயர் 'தேனூர் மண்டபம்'. தேனூரை சேர்ந்தவர்களே இங்கு கோயில் மரியாதை பெறுகின்றனர் என்பதும் அதற்கான சான்றாக அமைந்துள்ளது. இந்த இரண்டு விழாக்களையும் திருமலை நாயக்கர் அவரது ஆட்சிக்காலத்தில் (கி.பி.1623 - 1659) தான் இணைத்துள்ளார்.
திருவிழாவை மாற்றியது ஏன்?
''மீனாட்சி அம்மன் கோவில் தேர் இழுக்க ஆட்களை சேர்க்கவும், கால்நடை சந்தைகளை நடத்தவும், மக்கள் தம்முள் கலந்துறவாடவும், மிகப்பெரிய திருவிழாவாக சித்திரை திருவிழாவை மாற்றும் நோக்கத்திலும் திருமலை நாயக்கர் இதை செய்துள்ளார். திருவிழாக்களை மாற்றக்கூட தனக்கு அதிகாரம் இருப்பதாக காட்டவும் அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அழகர் ஊர்வலத்தில் உடைகள், நகைகள், பிற அணிகலன்களை எடுத்து வரும் வண்டிகளும், உண்டியல்களை ஏந்திய வண்டிகளும் வரும். அதனையே தங்கை மீனாட்சிக்கு அண்ணன் அழகர் திருமண சீர் கொண்டு வருவதாகவும் நம்பி மக்கள் தங்கள் கதைக்குள் சேர்த்துள்ளனர். மற்றபடி அழகர் ஊர்வலத்திற்கும் மீனாட்சி கல்யாணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.'' என்று கூறியுள்ளார் தொ.ப.
மனிதன் பயன்படுத்திய முதல் கருவி
அழகர் கோயிலில் இருந்து மதுரை நோக்கி கிளம்பும் பெருமாள், ஒரு கையில் வளரித்தடி, மற்றொரு கையில் சாட்டைக்கம்பு, ஆண்கள் இடும் ஒரு வகையான கொண்டை, தலையில் உருமால், கல்வைத்த கடுக்கன், காங்கு எனப்படும் ஒரு கருப்பு புடவை கணுக்கால் தொடங்கி இடுப்பு வரை அரையாடையாகவும் இடுப்புக்கு மேல் மேலாடையாகவும் சுற்றப்பட்டிருக்கும். இதையே கள்ளர் திருக்கோலத் தோற்றம் என்கிறார்கள்.
கையில் வளரி
வளத்தடி எனப்படும் வளரியை ஆங்கிலேயர் Vellari Thandi, Boomarang என்கிறார்கள். கதை, பூமராங் முதலியவற்றை அடிக்கும் கருவிகள், கோடாரி, வாள், கத்தி உள்ளிட்டவற்றை பிளக்கும் கருவிகள், ஈட்டி, அம்பு முதலியவற்றை குத்தும் கருவிகள் என மனிதன் முதன்முதலாக பயன்படுத்திய கருவிகள் என்று மானிடவியலாளர்கள் காலவாரியாக வகைப்படுத்துகின்றனர்.
இதில், பூமராங் எனப்படும் வளரி மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய கருவி வகையைச் சார்ந்ததாகும். இலக்கை தாக்கி விட்டு திரும்பவும் எய்தவரிடத்திலேயே வரும் கருவி. போர் வீரன் தோற்றம், வளரி கருவி என கள்ளழகர் செல்வது குறித்தும் சிந்திக்க வேண்டியதாகிறது. இதற்கான கதையும் அதற்கான காரணமும் இருத்தல் வேண்டும் என்கிறார் தொ.பரமசிவம்.
கள்ளர் திருக்கோலம் ஏன் ?
அவரது ஆய்வு நூலில். ''திருமலை நாயக்கர் காலத்திற்கு பின்னர் மதுரையை ஆண்ட விஜயரங்கசொக்கநாதன் ஆட்சிக்காலத்தில் (கி.பி.1706 - 1717) ஊர்வலத்தை ஒருமுறை கள்ளர்கள் மறித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்த சமூகத்தினருக்கு 'இறைவனின் கள்ளர் திருக்கோல மரியாதை' தருவதற்கு கோவில் உடன்பட்டிருக்கிறது.
மேலும், கோவில் சொத்துடைமை நிறுவனமாக இருந்ததால் அதனை காத்துக் கொள்வதற்கும், கள்ளர்களோடு உறவு கொண்டு அதற்கு ஆன்மீக வண்ணமும் தரப்பட்டுள்ளது.இதன் காரணமாகவே அழகர் கோவிலில் இருந்து மதுரை நோக்கி கிளம்பும் அழகர், ஒரு கையில் வளரித்தடி, மற்றொரு கையில் சாட்டைக்கம்பு, ஆண்கள் இடுகின்ற ஒரு வகையான கொண்டை, உருமால், காதுகளில் கடுக்கன், 'காங்கு' எனப்படும் கருப்பு புடவை ஆகியவை அணிந்து கள்ளர் தோற்றத்தில் வருகிறார்.'' என்கிறார்.
மேலும், ''அழகர் ஊர்வலம் மதுரையை சேர்ந்த உயர்சாதியினரால் (சைவர்களால்) தல்லாகுளத்தில் மறிக்கப்பட்டிருக்கலாம். பிராமண பூசைபெறும் பெருந்தெய்வமான அழகர், கள்ளர்களை போல வேடமணிந்து வந்தது, இதற்கு வலுவான காரணமாகயிருக்கலாம். மோதலுக்கு பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டில் அழகர் மதுரை நகருக்குள் வருவது தடுக்கப்பட்டு, வைகையாற்று பகுதியிலும், வண்டியூரிலும் கள்ளர் வேடம் தடை செய்யப்பட்டிருக்கலாம்.'' என்றும் தொ.பரமசிவன் ஆய்வு நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொல்லப்பட்டு வரும் கதைகள்
"அழகரின் ஊர்வலம் தல்லாகுளம் பகுதிக்கு வரும்போது ஒருமுறை பாண்டிமுனி அதனை மறித்துக் கொண்டார், உடனே அழகர் அவரது காவலாளியான பதினெட்டாம்படி கருப்பனை நினைத்ததும், கருப்பன் வந்து பாண்டிமுனியை விரட்டிவிட்டு அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டார்" என தல்லாகுளத்தில் கருப்பசாமி கோவில் ஏற்பட்டதற்கு ஒரு கதையும் வழக்கில் இருக்கிறது.
"தன் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்காக சீர்வரிசைகளுடன் மதுரை வருகிறார் கள்ளழகர். அவர் வருவதற்கு முன்னரே மீனாட்சியின் கல்யாணம் முடிந்து விட்டதால், கோபம் கொண்டு, வைகையாற்றில் இறங்கி குளித்து விட்டு வண்டியூர் சென்று விடுகிறார். அன்றிரவு அங்கு தன் காதலி துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கி விட்டு மீண்டும் அழகர் மலைக்கு திரும்பி விடுகிறார்" என்கிறது ஒரு கதை. ஆனால், இந்த கதையும் ஒரு விளக்கம் தருகிறது என்கிறது ஆய்வு நூல்.
வண்டியூரில் துலுக்கநாச்சியார் கோயில் இல்லை, அங்குள்ள பெருமாள் கோவிலில் தான் அழகர் தங்குகிறார். அதையே துலுக்கநாச்சியார் கோவில் எனவும், அங்கு பல்லாண்டுகளுக்கு முன்னர் அழகர் தங்கும் இரவில் இஸ்லாமியர்களும் கலந்துகொண்டு வாணவேடிக்கைகள் நடத்தியதாகவும் தகவல்கள் உண்டு.
இஸ்லாமியர்கள் படையெடுப்பின் போது திருவரங்கம் கோவிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களுக்கு பின்னர் திருமால் ஆணையால் 'சாந்து நாச்சியார்' எனும் துலுக்க நாச்சியார் அமைக்கப்பட்டுள்ளதாக.'' அழகர் கோயில் என்கிறது ஆய்வு நூல்.
சங்க இலக்கியங்களில் பெயர் சுட்டப்படும் ஒரே வைணவத் தலமாக அழகர் கோயில் இருக்கிறது. பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார் மாலிருங்குன்றம் என்று குறிப்பிடுகிறார்
சமூக, சமய நல்லிணக்க விழா
தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் சொ.சாந்தலிங்கம் கூறுகையில், ''சங்க காலத்தில் இருந்து அழகர் கோயில் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன. சிலப்பதிகாரம், ஆழ்வார் பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டுகளில் ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டுகள் முதன்மையானது. பாண்டியர்கள் காலத்து கல்வெட்டுக்களையும் காணலாம்.
ஆரம்பத்தில் தேனூர் மண்டபத்தில்தான் நடைபெற்றன. இந்து மதத்தின் இருபெரும் பிரிவுகளான சைவம் வைணவத்திற்கான ஒற்றுமைக்கு விழாக்கள் ஒருங்கிணைப்பட்டுள்ளது.
இருசமய ஒற்றுமை மட்டுமின்றி, மத நல்லிணக்கத்திற்காக, இஸ்லாமிய மக்களையும் இணைத்து வண்டியூர் இஸ்லாமிய பெண் வீட்டில் தங்கிச் செல்வதாகவும் ஒரு தொன்மக் கதையை உருவாக்கி, அவர்களின் வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டு செல்வது போல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் மக்கள் சாதி, சமய, மத வேறுபாடின்றி சமூக, சமய நல்லிணக்க விழாவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொடர்ந்து மக்கள் பெருமகிழ்வோடு கொண்டாடி, பங்கேற்று வருகின்றனர்.''என்கிறார்.
மக்களில் ஒருவராக தெய்வம்
மதுரை பண்பாட்டு, பக்தி, வரலாற்று நகரமாக இருந்தாலும் திருமலை மன்னர் காலத்திற்கு பிறகுதான், திருவிழா நகரமாகிறது என்கிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.
ஒரு விழா தொடங்கியதை எடுத்துச் சொல்லும் வகையில்தான், வெகுதூரத்தில் உள்ளவர்களும் தெரிந்து கொள்ள கொடியேற்றி, முரசறைந்து மக்களுக்கு தெரிவிப்பார்கள். இது ஒரு தகவல் தொடர்பு நிகழ்வு. இதன்படிதான் இப்போதும் கொடியேற்றம் நடைபெற்றுள்ளது.
நிலாக்காலம் முழுவதும் விழாக்காலம்
அனைத்து மக்களும் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலையில், முதியோர்கள், நோயாளிகள் என வீட்டில் இருப்போரும் காணும் வகையில், மக்கள் இருக்கும் இடத்திற்கு மக்களை நோக்கி தெய்வம், மக்களில் ஒருவராக தெய்வம் என்பதையும் இந்த விழாவில் காண முடியும். பெருந்தெய்வம் சுந்தர்ராஜ பெருமாள், எளிய குதிரைக்காரராக வேடமிட்டு, வைகை ஆற்றில் இறங்குவதும் இப்படித்தான்.
வைகை ஆற்றின் தென் கரை முழுவது சைவம், வைகை ஆற்றின் வட கரையில் வைணவ நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் வட கரையில்தான் நடைபெறும்.
தமிழ்நாட்டில் நிலாக்காலம் முழுவதும் விழாக்காலம். இதன்படி, வளர்பிறை காலத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா 12 நாட்கள் நடைபெறுகிறது. பெளர்ணமி நாளில் அழகர் ஆற்றில் இறங்குகிறார்.
இதில், புராணம், வரலாறு, சமய ஒற்றுமை, திருவிழா பெருமை, கோடை என்பதால் நீர்ப்பீச்சுதல், அழகர் வேடமணிந்து வருதல், நேர்த்திக் கடன் செலுத்துவது உள்ளிட்டவைகள் என எல்லாம் கலந்து இருக்கும்.'' என்கிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்