வசந்தபாலன்: 'அங்காடி தெரு' படம் வெளிப்படுத்திய பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது - தமிழ் இயக்குநர் நெகிழ்ச்சி

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வணிக வளாகங்கள் மற்றும் ஜவுளிக்கடைகளில் ஊழியர்களுக்கு கட்டாயம் இருக்கை வழங்கப்படும் எனும் சட்டமுன் முடிவு தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பிலும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொழிலாளர்களின் இந்த பிரச்னை குறித்து தனது 'அங்காடித்தெரு' படத்தில் விளக்கியிருந்தார் தமிழ் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன்.

பல வருடங்களாக பேசப்படும் இந்த பிரச்னையை 2010இல் வெளிவந்த தனது 'அங்காடி தெரு' படத்தில் காட்டியிருந்தார் வசந்தபாலன். இது குறித்து உரையாட இயக்குநர் வசந்த பாலனை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டேன்.

கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள வசந்தபாலன், தற்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். தற்போது தமிழக அரசின் நடவடிக்கை, தனக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாகக் கூறுகிறார் அவர்.

"இந்த அறிவிப்பு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போன்று உண்மையில் சமூகத்தில் நடக்க வேண்டும் என சினிமாவில் கனவு காண்கிறோம். சில விஷயங்களை குறிப்பிடுகிறோம். அது மெல்ல மெல்ல அரசின் காதுகளை அடைந்திருக்கிறது என்பது மகிழ்ச்சிதான். இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த சட்டத்தை கேரளாவில் அமல்படுத்தினார்கள். பக்கத்து இலைக்கு பாயாசம் வந்தால் நமக்கும் அது வந்துவிடும் இல்லையா? அதுபோன்றுதான் இதுவும். நமக்கு இப்போது அந்த பாயசம் கிடைத்துவிட்டது."

"ஆனால், இதில் வருத்தமான ஒரு விஷயம் என்னவென்றால் 'ஸ்டூல்' போடுங்கள், தண்ணீர் கொடுங்கள், நிழல் கொடுங்கள் என ஒவ்வொன்றையும் அரசுதான் சொல்ல வேண்டுமா? ஒரு பக்கம் அரசின் நடவடிக்கை மகிழ்ச்சியாக பார்த்தாலும், கைக்கூப்பி வரவேற்றாலும் இன்னொரு பக்கம் இந்த சமூகம் குழந்தைகளை அடிக்கக்கூடாது, பாலியல் ரீதியாக துன்புறுத்தக் கூடாது, தொழிலாளர்களுக்கு அமர இருக்கை தர வேண்டும் என இதை எல்லாம் ஒரு அரசுதான் சொல்ல வேண்டுமா என்ன? சம்பந்தப்பட்டவர்களுக்கு அடிப்படையில் மனித மாண்பு இல்லையா? ஒரு தொழிலாளி கிட்டத்தட்ட 10 மணி நேரம் நின்று கொண்டு வேலை பார்க்கிறார்கள் எனில் அவரை அமர இருக்கை தர வேண்டும் என்ற அடிப்படை கூடவா நம்மிடம் இல்லாமல் போய்விட்டது? இதை கவனிக்க 10 அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டுமா?" என்ற கேள்விகளையும் முன் வைக்கிறார் வசந்தபாலன்.

மேலும், வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவது, இந்த இக்கட்டான கொரோனா காலக்கட்டத்தில் முகக்கவசம் அணிவது போன்றவை நம் அனைவரின் கட்டாய கடமை என்பதையும் வலியுறுத்திகிறார் வசந்தபாலன்.

சமீபத்தில் மகளிர் காவல்துறையினர் பணியின் போது வெளியிடங்களில் கழிப்பறை இல்லாததால் சந்திக்கும் பிரச்னைகளை பேசியிருந்த படம் 'மிக மிக அவசரம்'. அந்த படம் வெளிவந்த சில வாரங்களில் பெண் காவலர்களின் பிரச்னைக்கு தீர்வாக நடமாடும் கழிப்பறைகளை நிறுவ அரசு முன்னெடுத்த முயற்சிக்கு பரவலான பாராட்டு கிடைத்தது.

இதன் தொடர்ச்சியாக 'அங்காடித்தெரு' படத்தில் பேசப்பட்ட பிரச்னைகளும் தீர்வாக தற்போது ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது பற்றி வசந்தபாலனிடம் கேட்டேன்.

"இவை அடிப்படையில் மிக முக்கியமான விஷயங்கள். மக்களின் சின்னச் சின்ன பிரச்னைகளை கூட அரசு கவனத்தில் கொள்கிறது என்பது பாராட்டுக்குரியது. பதவியேற்ற 100 நாட்களுக்குள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தாண்டி, சொல்லாத பலவற்றையும் அரசு நிறைவேற்றுவது, இது மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்து வருவதாகவே கருதுகிறேன்" என்றார் வசந்தபாலன்.

'அங்காடித்தெரு' படத்திற்காக நிறைய முன் தயாரிப்பு வேலைகள் செய்திருப்பீர்கள். அதில் யாருடைய அனுபவம் உங்களை பாதித்தது? இந்த விஷயத்தை படத்தில் காட்ட எது உங்களை தூண்டியது? என அவரிடம் கேட்டேன்.

தொழிலாளர்கள் கஷ்டப்படுகிறார்கள், அவர்களது துயரத்தை படமாக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்ட அதே சமயம், இப்படி பல மணி நேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பதால் பலரும் 'வெரிகோஸ்' எனும் நோயால் பாதிக்கப்படுவதை படத்திலும் இந்த பேட்டியிலும் அழுத்தமாகச் சொன்னார் வசந்தபாலன்.

'வெரிகோஸ்' நோய் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் மூலமாகவே நான் அறிய நேரிட்டது என கூறிய அவர் அந்த நோயின் தீவிரத்தை உணர்ந்தே நிச்சயம் படத்தில் அதை சொல்ல வேண்டும் என்ற முடிவையும் எடுத்ததாக தெரிவித்தார்.

அடுத்தடுத்து தொடர் அழைப்புகளால் அனைவரும் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என நெகிழும் அவர் தொழிலாளர்கள் நலன் குறித்தும் பேசினார்.

"உலகில் எங்கெல்லாம் தொழிலாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் மீது அன்பும் கருணையும் காட்ட வேண்டும். இதை வெறுமனே ஜவுளிக்கடைகளிலும், வணிக வளாகங்களிலும் நடக்கும் விஷயமாக படத்தில் காட்டியிருப்பதாக யாரும் நினைத்து விடக்கூடாது. ஊடகத்தில் இருப்பவர்கள், திரைப்படத்தில் பணியாற்றும் உதவி இயக்குநர்கள் என எந்த இடத்திலும் தொழிலாளர்கள் மரியாதை குறைவாகவோ, கண்ணிய குறைவாகவோ நடத்தப்பட கூடாது. எங்கெல்லாம் அவர்களது குரல் நசுக்கப்படுகிறதோ அங்கு அவர்களுக்காக குரல் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கான முன்னெடுப்புதான் அரசின் இந்த முடிவு. இதை வெறும் 'ஸ்டூல்' என்று சுருக்கி விடாமல் தொழிலாளர்கள் மீதான அன்பு என எடுத்து கொள்ள வேண்டும். அப்படித்தான் இதை பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். தொழிலாளர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் கஷ்டங்கள் இருக்கும் என்பதை எல்லாம் உணர வேண்டும் என்பதற்கான முன்னெடுப்புதான் இது" என்கிறார் வசந்தபாலன்.

தொடர்ந்து உங்கள் படங்களில் எளிய மனிதர்களின் வாழ்வியலையும் வலியையும் பதிவு செய்து வருகிறீர்கள். அடுத்து 'ஜெயில்', அர்ஜுன் தாஸ் படங்களில் என்ன மாதிரி எதிர்பார்க்கலாம்? என கேட்டேன்.

"கண்டிப்பாக. 'அங்காடித்தெரு'வை போன்று ஒரு முக்கியமான படம் 'ஜெயில்'. படம் வெளிவரும்போது நிச்சயம் அதை உணர்வீர்கள். அர்ஜுன்தாஸுடன் இணைந்திருக்கும் படமும் வலியை பேசுகின்ற முக்கியமான படமாக அமையும்," என்றார் வசந்தபாலன்.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு என்ற கருத்து பரவலாக இருக்கும் போது இது போன்ற முக்கிய மாற்றங்கள் படங்கள் மூலமாக நிகழும்போது சமூகத்தில் சினிமாவுக்கான முக்கியத்துவம் எப்படி உள்ளதாக பார்க்கறீர்கள்? என கேட்டபோது, "பொழுதுபோக்கு என்பதுதான் சினிமாவின் பொதுவான நோக்கம். அதில் தேன் தடவி மருந்து தருவது போல பொழுதுபோக்கோடு சேர்த்து இந்த பிரச்சனைகளையும் மக்களை கவனிக்க வைக்க வேண்டும். இல்லையென்றால் இரண்டு மணி நேரம் செலவழித்து அவர்கள் பார்க்க மாட்டார்கள். அதனால் மக்களை எந்த விதத்திலும் இதில் குறை சொல்ல மாட்டேன். அவர்களை கதைக்குள் எடுத்து வந்து ஒரு விஷயத்தை சொல்வதுதான் நல்ல படைப்பாளியின் கடமை. இயக்குநராக அதை சரியாக செய்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி," என்றார் நிறைவாக.

வெரிகோஸ் நோய் என்றால் என்ன?

அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்வதால் 'வெரிகோஸ்' எனப்படும் 'விரி சுருள் சிரை நோய்'யால் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்று இயக்குநர் வசந்தபாலன் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து, சென்னையை சேர்ந்த அரசு மகப்பேறு மருத்துவரான சாந்தியை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசினோம்.

அதிக நேரம் நின்று கொண்டிருப்பதால் மட்டுமல்ல, உட்கார்ந்து கொண்டிருப்பதாலும் உடல் ரீதியான பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தவர் 'வெரிகோஸ்' குறித்து பேச ஆரம்பித்தார்.

"பொதுவாகவே தொழில் சார்ந்த பிரச்னைகள் எல்லோருக்கும் உண்டு. அதில் நின்று கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு வரும் பல பிரச்னைகளில் 'வெரிகோஸ்'ஸூம் ஒன்று. நம் உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும், இதயத்திற்கு எடுத்து செல்லும் இரத்த குழாய்கள் வெளிப்புற சிரைகள், உட்புற சிரைகள் என இரண்டு வகைகள் உண்டு.

அதில் வெளிப்புற சிரையில் இருந்து ரத்தத்தை உட்புற சிரை வழியாக இதயத்துக்கு எடுத்து செல்ல உதவுவதே இந்த நாளத்தின் முக்கிய பணி. இது தனது பணியை சீராக செய்ய இயலாத போது அந்த இரத்தம் இதயத்திற்கு செல்ல முடியாமல் அங்கு கால்களில் வீக்கம், அரிப்பு, நரம்பு சுருளுதல், அரிப்பால் வரும் புண்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

ஜவுளி, வணிக வளாகங்களில் வேலை செய்பவர்கள், ஆசிரியர் பணி, ட்ராஃபிக் போலீஸ் என அதிக நேரம் நின்று கொண்டு இருப்பவர்களும், உட்கார்ந்து கொண்டு இருப்பவர்களுக்கும் இந்த பாதிப்பு இருக்கும். குறிப்பாக, ஜவுளி கடைகளில் அதிகம் வேலை பார்ப்பது பெண்கள்தான். அவர்களுக்கு மாதவிடாய், இடுப்பு வலி போன்ற பிரச்னைகள் ஏராளம் உண்டு. அதனால் வேலை இல்லாத நேரத்தில் ஓய்வெடுப்பது என்பது அடுத்த வேலையை செய்வதற்கு அவர்களை மன ரீதியாக உற்சாகப்படுத்தும். இது அவர்களது உரிமையும் கூட. அதை விடுத்து, உட்கார்ந்தால் திட்டுவது, கண்காணிப்பு கேமரா வைத்து பார்ப்பது என்பதெல்லாம் மனித அறமற்ற செயல்கள் என்றே சொல்லலாம். அதற்கெல்லாம் இப்பொழுது தீர்வு கிடைத்ததில் மகிழ்ச்சி. மருத்துவர்கள் ஆலோசனையை அலட்சியப்படுத்தாமல் இருப்பது இதில் முக்கியம்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :