உலகின் மிக 'அழகான கொசு' இதுதானா? இந்த படம் அதிகம் பாராட்டப்படுவது ஏன்?

    • எழுதியவர், ஜோனதன் அமோஸ்
    • பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர்

இது ஒரு பெண் கொசு. அதன் அழகைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. உரோமங்களைக் கொண்ட அவற்றின் கால்கள், அதன் பளபளப்பு ஆகியவற்றைக் கண்டால் திகைப்பூட்டும்.

இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் சபேதெஸ் இனத்தைச் சேர்ந்தது.

பார்ப்பதற்கு இவ்வளவு அழகு கொண்டிருக்கும் இந்தக் கொசுதான் வெப்பமண்டலப் பிராந்தியத்தின் மிகக் கொடூரமான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்பது அவமானகரமானது.

இந்தப் புகைப்படத்தை கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்த கில் விசன் எடுத்தார். இந்த ஆண்டின் வனவுயிர் புகைப்படக் கலைஞர் (Wildlife Photographer of the Year) போட்டியில் அவரது படைப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

இதே போல இன்னும் கண்ணைக் கவரும், வியக்க வைக்கும் பல படங்களைப் பார்ப்பதற்கு கீழே நகர்த்தவும்.

கில் பயிற்சி பெற்ற ஒரு பூச்சியியல் நிபுணர். எனவே எதைப் புகைப்படம் எடுக்கப் போகிறோம் என்பதை அவர் முழுமையாகப் புரிந்து கொள்கிறார். இந்த வகையான ஷாட் கிடைப்பதற்கு நிறையத் திட்டமிடலும் அதைவிட அதிகமாக பொறுமையும் அவசியும். சில நேரங்களில் வலியைக் கூடப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

சபேதெஸ் கொசுக்களை நன்றாகப் புகைப்படம் எடுப்பது மிகவும் கடினம் என்கிறார் கில். அதிலும் குறிப்பாக இந்தப் படம் எடுக்கப்பட்ட ஈகுவடாரில் உள்ள அமேசான் மழைக் காடுகளில் இதைப் படம்பிடிப்பது மிகவும் சவால் நிறைந்தது எனக் குறிப்பிடுகிறார்.

"மிகச்சிறிய அசைவுகளையும் ஒளியில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் கொசுவால் கண்டுபிடித்துவிட முடியும்" என்று அவர் என்னிடம் கூறினார்.

"நீங்கள் அதை புகைப்படம் எடுக்க முயற்சிக்கும்போது மிகவும் அமைதியாக இருக்க வேண்டும், மேலும் ஒரு ஃபிளாஷ் பயன்படுத்தினால் கொசு தப்பித்துவிடும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதில் நல்வாய்ப்பு என்னவென்றால், நீங்கள் ஒரேயொரு கொசுவை மட்டும் நம்பியிருக்க மாட்டீர்கள். அவை நூற்றுக்கணக்கில் உங்கள் தலைக்கு மேலே சுற்றிக் கொண்டிருக்கும்."

"இந்த கொசுக்கள் மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற பல முக்கிய நோய்களைப் பரப்பும் காரணிகளாகும். புகைப்படம் எடுக்கும்போது, இந்த கொசுவும் அதன் கூட்டாளிகளும் என்னைக் கடித்தன. இது எனக்குள் நோய் பரவும் ஆபத்தை அதிகரித்தது. ஆனாலும் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்."

பூச்சி படத்தை எடுக்க முயற்சித்த அனைவரும், கொசுவின் படத்தை மிகத் துல்லியமாகவும், அதன் உடலின் அத்தனை அங்கங்களையும் தெளிவாகவும் எடுப்பதற்கு கில் என்னவெல்லாம் சிரமப்பட்டிருக்க வேண்டும், எத்தனை முயற்சிகள் செய்திருக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பார்கள்.

கொசுவின் பின்புற கால்கள் எப்படி உயரமாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். உண்மையில் அது கில்லின் முழங்காலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. அவை உணர்ச்சி மிக்கவை. விரைவாக தப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பூச்சிகள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

புயல் நரி - ஜானி ஆம்ஸ்ட்ராங்

உலகில் 3,300 க்கும் மேற்பட்ட கொசு வகைகள் உள்ளன. ஆனால் அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை.

நம்மில் பெரும்பாலோர் கொசுக்களை சட்டென அடித்துத் தூக்கி வீசுவதற்கு முன்பாக அவற்றை கூர்ந்து கவனித்திருக்க மாட்டோம். அப்படிச் செய்திருந்தால், பல வண்ணமயமான செதில்கள் மற்றும் முடிகளைக் கண்டிருப்போம் என்று WPY போட்டியை நடத்தும் லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் மூத்த கண்காணிப்பாளரான எரிகா மேக்அலிஸ்டர் கூறுகிறார்.

எல்லாவற்றிற்கும் இயற்கையில் அவற்றுக்கென ஓர் இடம் உண்டு.

"பெண் சபேதெஸ் கொசுக்கள் முட்டைகளை உற்பத்தி செய்யும்போது மட்டுமே ரத்தத்தை உறிஞ்சுகிறது. மீதமுள்ள நேரங்கள் அவை தேனை உண்கின்றன. அதனால் மகரந்தச் சேர்க்கைக்கு காரணமாக இருக்கிறது." என்று எரிகா விளக்குகிறார்.

"ஆனால் டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் வைரஸ்களால்தான் இந்தக் கொசு அறியப்படுகிறது"

கிலின் படத்திற்கு "அழகான ரத்த உறிஞ்சி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் பாராட்டப்பட்ட வேறு சில படங்கள் கீழே உள்ளன.

நீந்தும் சிறுத்தைகள் - புத்திலினி டி சோய்ஸா

நச்சு வடிவம் - ஜார்ஜே போபா

அன்பான கிளிகள் - ககன மென்டிஸ் விக்ரமசிங்க

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :