இயக்குநர் ஷங்கர் பிறந்தநாள்: பிரமாண்டங்களின் 'காதலன்' பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

    • எழுதியவர், ச. ஆனந்தப்ரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பிரமாண்ட படைப்புகளின் 'காதலன்', தமிழ் சினிமாவின் 'ஜென்டில்மேன்' என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் 58-வது பிறந்தநாள் இன்று. திரையுலகில் நுழைந்து 28 வருடங்களை சமீபத்தில் நிறைவு செய்திருக்கிறார்.

முதன்முறையாக தெலுங்கில் ராம் சரணுடன் படம், இந்தியில் ரன்வீர் சிங்குடன் 'அந்நியன்' படத்தின் ரீமேக் என தனது சினிமா பயணத்தில் அடுத்தகட்ட நகர்வில் இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

இயக்குநர் ஷங்கர் பிறந்தநாளான இன்று அவர் குறித்தும், அவரது படங்கள் குறித்தான சுவாரஸ்யமான விஷயங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

• 'ஷங்கர்' என்ற இந்த பெயரை ஷங்கரின் தாயார் தேர்ந்தெடுத்ததற்கு பின்னால் இருந்த சுவாரஸ்யமான கதையை பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருகிறார் ஷங்கர். நடிகர் சிவாஜி நடித்திருந்த ஒரு படத்தை அப்போது அவரது தாயார் பார்த்து கொண்டிருந்திருக்கிறார். அதில் சிவாஜியின் கதாபாத்திரத்தின் பெயர் ஷங்கர். அப்போது அவருக்கு பிரசவ வலி வந்து ஆண் குழந்தை பிறக்க, ஷங்கர் என்றே பெயர் வைத்திருக்கிறார்.

• கல்லூரி காலங்களில் நண்பர்களுடன் சேர்ந்து துறுதுறு இளைஞனாக வலம் வந்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அவரது அந்த கலகலப்பான குணம்தான் 'டேக் இட் ஈஸி ஊர்வசி, சிக்குபுக்கு ரயிலே' பாடல்கள் உருவாக காரணம் என்பார்.

• நடிக்கும் ஆசையில்தான் சினிமாத்துறைக்குள் உள்ளே வந்தார். ஆனால், சினிமாத்துறைக்குள் நுழைந்ததோ உதவி இயக்குநராக. எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக முதலில் சினிமாவுக்குள் வந்தபோது, ஒரு படம் இயக்கிவிட்டு நடிப்பில் முழுகவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் அவரது திட்டமாக அப்போது இருந்தது.

• 'இந்தியன்' படத்தில் 'செல்ஃபோன் மணி போல்' பாடலில் பல விலங்குகள் உலவுவதை பார்த்திருக்கலாம். படத்திலும், கதைப்படி மனிஷா கொய்ராலா விலங்குகள் நலன் மீது ஆர்வம் கொண்டவராகவே வருவார். அதை பிரதிபலிக்கும் வகையிலேயே இந்த பாட்டில் விலங்குகள் உலவுவதை போல படமாக்கியிருக்கிறார்.

• ஷங்கர் நடிகர் ரஜினிக்காக எழுதி கமல் வசம் போன படம் 'இந்தியன்', அதேபோல, கமலுக்காக கதை எழுதி ரஜினிகாந்த் வசம் போன படம் 'எந்திரன்'. இந்த இரண்டு படங்களிலும் ரஜினி, கமல் உள்ளே வந்ததும் அதற்கேற்றாற்போல கதையில் பல விஷயங்கள் மாற்றங்களை செய்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

• 'இந்தியன்' படத்தில் கமலின் வயதான தோற்றத்திற்கான மேக்கப் செய்துவிட்டு, கமலும் ஷங்கரும் வெளியே பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள். அப்போது ஒருவராலும் கமல்ஹாசனை அந்த தோற்றத்தில் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லையாம். அதன் பிறகே கமலின் அந்த வயதான தோற்றத்தின் மீது இயக்குநர் ஷங்கருக்கு நம்பிக்கை வந்திருக்கிறது.

• இயக்குநர் ஷங்கரின் படங்களின் பெயர்களை கவனித்தால் ஒரு ஒற்றுமை இருப்பதை கவனித்து இருக்கலாம். 'ஜெண்டில்மேன்', 'இந்தியன்', 'முதல்வன்', 'அந்நியன்', 'எந்திரன்' என பெரும்பாலும் 'ன்' முடியும் பெயர்களாவே இருக்கும். இதற்கு பின்னால் எதும் காரணம் இருக்கிறதா என ஒரு பேட்டியில் கேட்டபோது, 'அப்படி திட்டமிட்டு எதுவும் வைக்கவில்லை, அது தானாக அமைந்தது' என்றார் சிரித்து கொண்டே.

• 'முதல்வன்' படம் முதன் முதலில் நடிகர் விஜயிடம் போய் பின்பு நடிகர் அர்ஜூனுக்கு சொல்லப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், ஷங்கருடன் முன்பு 'ஜென்டில்மேன்' படத்தில் வேலை செய்திருந்தாலும் 'முதல்வன்' படத்தின் ஒரு வரியை கேட்டே நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்து விட்டாராம் நடிகர் அர்ஜூன். 'முதலமைச்சர் என்ற அந்த ஒரு வரி எனக்கு பொருந்தாது, எதோ அரசியல் சார்ந்த கதை என்பதால் முதலில் மறுத்தேன். பின்பு முழு கதையையும் கேட்ட பின்பே ஒத்து கொண்டேன்' என்று ஒரு பேட்டியில் 'முதல்வன்' குறித்து பேசியிருக்கிறார் நடிகர் அர்ஜூன்.

• தனது படங்களில் சின்ன சின்ன விஷயங்களுக்காக கூட மெனக்கெடுவார் இயக்குநர் ஷங்கர். அந்த வகையில், 'அந்நியன்' படத்திற்காக முறையான கர்நாடக சங்கீதம் கற்று கொண்டிருக்கிறார்.

• சினிமா எடுப்பதிலேயே மிகவும் கஷ்டமான காட்சி எது என்று கேட்டால், ஆக்சன் காட்சிகளை குறிப்பிடுவார் ஷங்கர். தனது ஒவ்வொரு படங்களின் போதும் சண்டை காட்சிகள் படமாக்கும் போது யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்ற பதற்றத்தில் இருப்பார் ஷங்கர். சில நேரங்களில் படங்களில் ஆக்சன் காட்சிகள் இல்லாமல் கூட படம் எடுத்துவிடலாம் என்று நினைத்தது கூட உண்டாம்.

• ஷங்கரின் பல படங்களில் திரைக்கதையில் எழுத்தாளர் சுஜாதா பணியாற்றி இருக்கிறார். எழுத்தாளர் சுஜாதாவை தனது தந்தையின் இடத்தில் வைத்திருந்தார் இயக்குநர் ஷங்கர்.

• 'முதல்வன்', 'காதல்', 'வெயில்', 'ஈரம்' என இதுவரை பத்திற்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து இருக்கிறார் ஷங்கர்.

• இயக்குனராக அவரது முதல் படம் 'ஜென்டில்மேன்' என்பது தெரியும். ஆனால், நடிகராக அவரது முதல் படம் 'பூவும் புயலும்'. நடிகராக இதுவரை ஒன்பது படங்களில் நடித்திருக்கிறார் ஷங்கர்.

• 'எந்திரன்' படப்பிடிப்பு மூணாறில் நடந்து கொண்டிருந்த போது அங்கு நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு எடுக்க அனுமதி கிடைக்க தாமதம் ஆகியிருக்கிறது. அந்த வருத்தத்தில் இருந்தவர் அந்த சமயத்தில் அங்கிருந்த திரையரங்கில் '3 இடியட்ஸ்' படம் பார்த்திருக்கிறார். முதல் 15 நிமிடங்கள் படத்துடன் ஒன்றாமல் இருந்தவருக்கு படம் மெல்ல கதைக்குள் இழுத்து வருத்தத்தில் இருந்தவரை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து அனுப்பியிருக்கிறது. அந்த அனுபவம் ரசிகர்களுக்கும் வேண்டும் என்பதற்காகவே 'நண்பன்' படத்தை ரீமேக் செய்திருக்கிறார்.

• கடைசியாக இவரது இயக்கத்தில் 2018-ல் 'எந்திரன்' படம் வெளியானது. தற்போது தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படம், இந்தியில் 'அந்நியன்' ரீமேக் என படங்கள் அறிவித்து இருந்தாலும், தற்போதுள்ள 'இந்தியன்2' பிரச்சனை காரணமாக இரண்டு வருடங்களுக்கு பிறகு அவரது எந்த படம் முதலில் வெளி வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :