You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மேதகு' திரைப்படம்: ''ஜகமே தந்திரம்', 'தி ஃபேமிலிமேன்' கதைகளுக்கான பதிலடி!'- இயக்குநர் கிட்டு
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த வாழ்க்கை வரலாறு, ஈழத்தமிழர்கள் போராட்டம் குறித்த பின்னணியை சித்தரிப்பதாக பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது 'மேதகு' திரைப்படம்.
பிரபாகரன் பிறப்பு, 1950-களின் பிற்பகுதியில் நடந்த இனக்கலவரம், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 1980 வரை நடந்த அரசியல் மாற்றங்கள், கல்வி போராட்டம், பிரபாகரனின் முதல் அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவானது வரை தற்போது வெளியாகியிருக்கும் முதல் பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான 'தி ஃபேமிலிமேன்' இணையத்தொடர், 'ஜகமே தந்திரம்' உள்ளிட்டவை ஈழத்தமிழர்கள் கதையை சித்தரித்ததில் பிழைகள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்ப, தற்போது வெளியாகியிருக்கும் 'மேதகு' பரவலான பாராட்டுகளை பெற்று வருகிறது. படத்தின் இயக்குநர் கிட்டுவை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம். அவரிடம் கலந்துரையாடியதில் இருந்து,
நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பிறகு 'மேதகு' படம் வெளியாகியிருக்கு. இந்த உணர்வு எப்படி இருக்கு?
படத்தை எப்படியும் வெளியிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால், அது திரையரங்குகளில் இருக்காது, ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என்பது தெரிந்திருந்தது. எதற்கும் தயாராகவே இருந்தோம். அந்த வகையில், தற்போது பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் 'மேதகு' வெளியாகியிருப்பதில் மகிழ்ச்சி.
பிரபாகரன், ஈழத்தமிழர் போராட்டம் பதிவு எனும் போது என்ன மாதிரியான எதிர்ப்புகள் வந்தன?
படம் பொருத்தவரையில் இரண்டு விஷயங்களில் எங்களுக்கு பிரச்சனைகள் இருந்தது. ஒரு விஷயம் படத்துக்கு தேவையான பட்ஜெட். மற்றொன்று வெளியில் இருந்து வந்த எதிர்ப்புகள். 'என்ன கதை செய்து கொண்டிருக்கிறீர்கள்? எங்கே இருக்கிறீர்கள்? என்பது போன்ற விசாரிப்புகள் வரும். இதனாலேயே உடனுக்குடன் நாங்கள் படப்பிடிப்பு தளத்தையும் மாற்ற வேண்டிய சூழலும் இருந்தது. ஆனால், படக்குழு நாங்கள் இளைஞர்கள் என்பதால், இந்த பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடிந்தது.
அதேபோல, ஈழத்தமிழர்கள் சிலர் படம் தொடங்கும்போது தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் இதுதான், 'இதுவரை வந்த பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கதையில் எங்களை சரியாக சித்தரிக்கவில்லை.
அவர்களுடைய பேச்சு வழக்கு, வலி இதுபோன்ற விஷயங்கள் எதுவும் உண்மையாக சித்தரிக்கமால், சினிமாவுக்காக சில விஷயங்கள் திரித்து காண்பிக்கப்படுகிறது. நாங்கள் நேசிக்கக்கூடிய தலைவரை இதுவரையிலும் சரியாக யாரும் காண்பிக்காதபோது, இளைஞர்கள் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? உங்களை நம்பலாமா?' என்பதுதான் அவர்களது வாதமாக இருந்தது.
ஆனால், டீசர், ட்ரைய்லர் வெளியானதும் அதில் இடம்பெற்ற காட்சிகள் பார்த்ததும் அவங்களுக்கு சரியாகதான் காட்டியிருப்போம் என்ற நம்பிக்கை வந்தது. படம் இப்போது வெளியானதும் மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் மாறியிருக்கிறது என்றே நினைக்கிறேன்".
பிரபாகரன் அவருடைய பயோபிக் எனும் எண்ணம் எப்படி வந்தது?
புத்தகங்கள் அதிகமாக படிக்கக்கூடிய நபர் நான். அதில் அதிகமாக தலைவர்கள் குறித்தான புத்தகங்கள் எனக்கு பிடிக்கும். அதில் நான் படித்த தலைவர்களில் அப்பழுக்கற்று, சமரசமற்ற ஒரு மாவீரராக என்னுடைய தேசிய தலைவரைதான் பார்க்கிறேன்.
குறிப்பாக, 2009-க்கு பிறகு இந்த வலிகள் அதிகமாகவே இருந்தது. என் இனத்தின் வலிகளை யாரும் சரியாக சொல்லவில்லை என்பதும் குறைதான். 2013-க்கு பிறகு தம்பி பாலச்சந்திரன் புகைப்படம் வெளிவந்தபோது, மாணவர் போராட்டத்தை தஞ்சாவூரில் முன்னெடுத்தோம். அப்போதிருந்தே, இந்த விஷயங்கள் எல்லாம் திரையில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
பின்பு துணிந்து ஒரு குறும்படம் எடுத்தோம். 'மேதகு' படத்தின் க்ளைமேக்ஸ்தான் அந்த குறும்படத்தின் முழுக்கதையும். அதாவது, துரையப்பா படுகொலை மட்டுமே முழுதாக அதில் எடுத்திருப்போம். அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. அதன்பிறகுதான், பிறப்பில் இருந்து துரையப்பா படுகொலை வரை கூத்து வாயிலாக ஒரு பாகம் சினிமாவாக எடுக்கலாம் என்று எண்ணினோம். ஆனால், பட்ஜெட் காரணமாக இது உங்களுக்கு டாக்குமெண்ட்ரி படமாக தோன்ற வைக்கலாம். இதை ஒரு இயக்குநராக ஒத்து கொள்கிறேன். அடுத்தடுத்த பாகங்களில் இந்த குறைகள் சரிசெய்யப்படும். இப்போது நாங்கள் கொடுத்திருப்பதை எங்களால் முடிந்த அளவு சரியாகவே செய்திருக்கிறோம் என நம்புகிறேன்.
படத்துக்கான நிதி பற்றாக்குறையாக இருந்தது என்கிறீர்கள். அதை எப்படி சமாளித்தீர்கள்?
நிறைய பேர் உதவி செய்தார்கள். ஆரம்பத்தில் அமெரிக்காவில் இருந்து ஜாய், வசந்த், ஜெயசீலன், அரவிந்த் என நான்கைந்து பேர் கொண்ட குழு எங்களுக்கு உதவி செய்ய முன் வந்தார்கள். அதேபோல், அமீரகத்தில் தீபக் சாலமன், ரவி இவர்களுடைய நண்பர்கள் என அங்கு ஒரு குழு, லண்டன், தமிழ்நாடு என நண்பர்கள் குழு அவர்களால் முடிந்த அளவிற்கு எங்களுக்கு நிதி திரட்டி கொடுத்தார்கள்.
படத்தின் பட்ஜெட்டாக 30-35 லட்சம் கணக்கிட்டோம். ஆனால், முடிக்கும் போது 62-65லட்சத்திற்குள் வந்தது. இதிலும் 15 லட்ச ரூபாய் வெளியே வாங்கியிருந்தோம். அதையும் ரமேஷ் என்பவர் எங்களுக்கு தந்து உதவி செய்தார். இந்த நம்பிக்கையை மனதில் வைத்து, பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல, கதையை மீண்டும் மாற்றி எடுத்தோம். இந்த சிக்கல் படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன். கதை சொல்லலிலும் இந்த பாகத்திலுள்ள குறைகளை சரி செய்துவிடுவேன்.
ஈழத்தமிழர்கள் கதையை சித்தரித்து சமீபத்தில் வெளியான 'தி ஃபேமிலிமேன்', 'ஜகமே தந்திரம்' படங்களுக்கு எதிர்ப்புகள் வந்ததே?
தவறான சித்தரிப்பை மீண்டும் மீண்டும் படமாக்குவதன் மூலம் மக்கள் அதை உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம் இந்த சித்தரிப்புகளில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, 'தி ஃபேமிலிமேன்' இணையத்தொடர் எங்களது போராட்டங்களை கொச்சைப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. எங்களது போராட்டம் உன்னதமானது. எத்தனை விதமான தவறான சித்தரிப்புகள் வந்தாலும், 'மேதகு' படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, 'திருப்பி அடிக்கவே' இந்த படம். சரியாக சொல்ல வேண்டும் என்றால் பதிலடி.
உண்மையான விஷயங்களை காட்டினால் அதை மக்கள் பார்ப்பார்களா என்ற பயம் பெரும்பாலான படைப்பாளிகளுக்கு உள்ளது. இந்த படம் அந்த பயத்தை முற்றிலுமாக நீக்கியிருக்கிறது என்றே சொல்வேன். இனிமேல், ஈழத்தமிழர்களுடைய போராட்ட வரலாற்றை சொல்லும் படங்கள் அதிகம் வரும் என்றே நினைக்கிறேன்".
படம் வெளியாகும் சமயத்தில் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்தித்தீர்கள்?
படத்தின் முன்னாட்டம் (Preview Show) காண்பித்த பிறகு உண்மை வரலாற்றைதான் காண்பித்திருக்கிறோம் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வந்தது. கடந்த மே 22-ல் படம் வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால், முன்பு படம் வெளியாக இருந்த ஓடிடி தளம் பின்வாங்கியது. மே 21 அன்று இரவு 'இந்த படம் வெளியானால் எங்களுக்கு சிக்கல்' என தொலைபேசியில் அழைத்து சொன்னார்கள். அதன் பிறகுதான் நாங்கள் பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தை அணுகினோம். 'எந்த பிரச்சனை என்றாலும் பார்த்துக்கொள்ளலாம். நல்ல கதை இது' என படத்தை வெளியிட அவர்கள் தைரியமாக முன்வந்தார்கள்.
தமிழர்களுடைய வரலாற்றையும், போராட்டத்தையும் கொண்டு போய் சேர்க்க டிஜிட்டல் தளம் உருவாக வேண்டும் என்ற ஆசையும் உண்டு
'மேதகு' கதை தெருக்கூத்து வழியாக சொல்லப்பட என்ன காரணம்?
என்னுடைய தாத்தா ஒரு கூத்தாடி. இதற்கு முன்பு கூத்து கலைகளை வீர வரலாற்றை சொல்வதற்கும், மதம், கடவுளுடைய வாழ்க்கை வரலாறு சொல்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போதுள்ள கூத்து முறைகளில் ஆபாசமாக பேசுவது என சில இடங்களில் கொச்சைப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த உடைகள் எல்லாம் போட்டுக்கொண்டு அவர்கள் கம்பீரமாக இருக்கும் போது, கம்பீரமான கதையைதான் சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. கூத்து கலைஞர்களை மக்கள் இனி திரும்பி பார்க்க வேண்டும், இந்த கலையை அழிய விடக்கூடாது, நிறைய பேர் இதில் வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த முறையை தேர்ந்தெடுத்தேன்".
படத்தின் பலம் நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, இசை. இது குறித்து?
இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரியாஸ், இசையமைப்பாளர் பிரவீன் குமார் இவர்கள் என்னுடைய முந்தைய குறும்படத்தில் வேலை பார்த்தவர்கள். தலைவர் மேல் இவர்களுக்கு ஈர்ப்பு இருந்தது. படத்திற்கு கிடைத்த இந்த தளத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார்கள். இவர்கள் மட்டுமல்ல, ஒப்பனைக்கலைஞர் அப்துல், கலை இயக்குநர் அனைவரும் அர்ப்பணிப்புடன் செய்தனர்.
நடிகர்கள் தேர்வுக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் எடுத்து கொண்டோம். கதாப்பாத்திரத்திற்கு நடிகர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்று தோன்றினால், அவர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தோம்".
பிரபாகரன் அவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தியிருக்க கூடிய படத்தில் மற்றவர்களுக்கான முக்கியத்துவம் குறைவாக உள்ளதே?
முதலிலேயே சொன்னது போல, இது ஒரு பட்ஜெட் படம். கதை யாரை நோக்கி நகர்கிறது என்பது தெளிவாக தெரிந்ததே. தேசிய தலைவருடைய எண்ண மாற்றங்கள், போராட்டங்கள் அதை மட்டுமே காண்பிக்க முடியும். உதாரணமாக சிவக்குமார் அவரை பற்றி முழுதாக காட்டவில்லை என்கிற விமர்சனம் உண்டு. அவருடைய தியாகம் குறித்து மட்டுமே இரண்டு மணி நேர கதையாக தனியாக எடுக்கலாம்.
ஆனால், இது தலைவருடைய வாழ்க்கை வரலாறு என்பதால் அவருடைய எண்ணங்களில் மாற்றம் வருவதற்கான காரணங்கள் அதற்கான சம்பவங்கள் நோக்கியே படத்தை நகர்த்த வேண்டும் என நினைத்தோம். இப்போது நிறைய இயக்குநர்கள் வருகிறார்கள். இந்த படத்திற்கு பின்பு எதெல்லாம் நாங்கள் சரியாக, விரிவாக காட்டவில்லை என்று நினைக்கிறார்களோ அதை விரிவான படமாக காட்டினால் மகிழ்ச்சிதான்
படம் வெளியான பிறகு திரைத்துறை பிரபலங்கள், ஈழத்தமிழர்கள் யாராவது உங்களிடம் பேசினார்களா?
நிறைய அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. சமூகவலைதளங்களிலும் படம் குறித்து பேசியிருக்கிறேன். இயக்குநர் வெற்றிமாறன் அவர் படம் பார்த்து விட்டு படம் குறித்தான விமர்சனத்தையும் அவருடைய கருத்தையும் பகிர்ந்தார். அவர் மட்டுமில்லை, இயக்குநர்கள் மாரிசெல்வராஜ், பொன்வண்ணன், அமீர், சேரன் இவர்கள் எல்லாரும் வாழ்த்து சொன்னார்கள்.
இவற்றை எல்லாம் விட முக்கியமாக படம் வெளிவந்த முதல் நாள் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசிய பையன், 'தலைவரை பார்த்துட்டேன்' என அழுது கொண்டே பேசினான். முன்னாள் போராளி ஒருவரும் அழைத்து, 'எங்கள் போராட்டத்தில் முக்கியமான பகுதி இது' என சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது.
முன்பு வெளியான படங்களில் ஈழத்தமிழர்கள் குறித்த சித்தரிப்புகள் தவறாக இருந்ததாக பல அரசியல் தலைவர்களும் எதிர்ப்புகள் தெரிவித்தார்கள். தற்போது, 'மேதகு' பார்த்துவிட்டு, அரசியல் தலைவர்கள் யாராவது பேசினார்களா? குறிப்பாக சீமான் அவர்கள் என்ன சொன்னார்?
சீமான் அண்ணன் சென்னையில் இல்லை. நேற்று இரவு அவர் படம் பார்த்துவிட்டதாக செய்தி கேள்விப்பட்டேன். கண்டிப்பாக படம் குறித்து பேசுவார். அதுபோல, நிறைய அரசியல் தலைவர்கள் இன்று, நாளைக்குள் படம் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார்கள்".
அடுத்தடுத்த பாகங்கள் எப்போது எதிர்ப்பார்க்கலாம்?
அடுத்தடுத்த பாகங்களுக்கான கதைகள் எல்லாம் தயார் செய்ய இருக்கிறோம். அடுத்து எப்போது படப்பிடிப்பு தொடங்கும் போன்ற விவரங்கள் எல்லாம் 'தமிழீழத் திரைக்களம்' சார்பாக முறையாக அறிவிக்கப்படும். கதையின் தேவையை பொறுத்து 3லிருந்து 5 பாகங்கள் வரை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
பிற செய்திகள்:
- உடல் மெலிந்த வடகொரியாவின் கிம் ஜோங் உன் - என்ன ஆனது?
- மீண்டும் செல்வாக்கை பெருக்கும் ட்ரம்ப்பின் புதிய உத்தி
- விஸ்மயா மரணம்: கேரளத்தை உலுக்கும் வரதட்சணை வழக்கில் என்ன நடந்தது?
- பேரரசர் நெப்போலியன் வாழ்வு, மரணம் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
- வேற்று கிரக வாசிகள் உலகம் இருக்கிறதா? அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்