You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரியாவின் கிம் ஜோங் உன் திடீரென உடல் மெலிந்ததற்கு என்ன காரணம்?
- எழுதியவர், அலிஸ்டார் கோல்மன்
- பதவி, பிபிசி மானிட்டரிங்
அண்மையில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் காணொளி ஒன்று வடகொரிய அரசுத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அதில் அவர் உடல் மெலிந்து காணப்பட்டதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல் நிலை குறித்த விவரங்கள் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும். பொதுவெளியில் அதுபற்றி விவாதிக்கப்படுவது இல்லை.
தொலைக்காட்சியில் காட்டப்பட்ட காணொளியில் சமீபத்திய ஆண்டுகளில் இருந்ததைவிட கிம் ஜோங் உன் உடல் மெலிந்திருந்தார்.
கிம் ஜோங் உன் உடல்நிலை குறித்து கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வதந்திகள் உலா வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் வடகொரியாவின் அரசாங்க நடைமுறைகள் மிகவும் ரகசியமானவை. இதுவரை கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த எந்தத் தகவலையும் அரசு உறுதி செய்யவில்லை.
வடகொரியா மக்கள் கண்டது என்ன?
வடகொரியாவின் முக்கியத் தொலைக்காட்சியில் இரண்டு காணொளிகள் காட்டப்பட்டன. அந்தத் தொலைக்காட்சியின் பெயர் சென்ட்ரல் டெலிவிஷன். அந்தக் காணொளிகள்தான் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த கவலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
இசை நிகழ்ச்சிக்கு கிம் ஜோங் உன் வருவதைக் காட்டுகிறது ஒரு காணொளி. அதில் கிம் ஜோங் உன் மிகவும் எடை குறைந்து மெலிந்து காணப்படுகிறார்.
இரண்டாவது காணொளி வழக்கத்துக் மாறானது. அதில் தோன்றும் வடகொரியாவைச் சேர்ந்த ஒருவர், "அவரை (கிம் ஜோங் உன்) இப்படிக் கண்டதால் நாங்கள் அனைவரும் கவலையடைந்துள்ளோம்" என்கிறார்.
"அனைவரும் அழத் தொடங்கிவிட்டோம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
முன்னதாக நாட்டின் தொழிலாளர் கட்சி கூட்டத்தில் கிம் ஜாங் உன் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களிலேயே அவர் உடல் எடை குறைந்திருப்பது ஓரளவு தெரிந்தது.
இந்தக் காணொளிகள், புகைப்படங்கள் குறித்து தென்கொரியாவில் இருந்து இயங்கும் என்.கே.நியூஸ் இணைய இதழ் ஆய்வு செய்திருக்கிறது.
முன்னைவிட கிம் ஜோங் உன்னின் கைக்கடிகாரம் மிகவும் இறுக்கமாகக் கட்டப்பட்டிருப்பதால் அவர் எடை குறைந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது என அந்த இதழ் கூறுகிறது.
கிம் ஜாங் உன்னின் உடல் எடைகுறைந்த வீடியோ வெளியிடப்பட்டது தற்செயலானது என்றாலும், அது குறித்து கவலை தெரிவிக்கும் ஒருவரின் காணொளி வெளியிடப்பட்டது ஏன் என்பது தெரியவில்லை.
வடகொரிய விவகாரங்களை ஆய்வு செய்யும் ஒன் கொரியா சென்டர் என்ற அமைப்பின் தலைவரான க்வாக் கில் சோப், இதற்கு வேறு மாதிரியான விளக்கத்தைத் தருகிறார்.
வடகொரியா ஒருபோதும் கிம் ஜோங் உன்னுக்கு எதிர்மறையான செய்திகளை வெளியிடாது. இப்போது அவர் உடல் மெலிந்த காட்சிகளை வெளியிடுகிறது என்றால், அவராகவே உடல் எடையைக் குறைத்துள்ளார் என்று காட்டுவதற்காகத்தான் என்கிறார் சோப்.
மக்களுக்காகவே இரவு பகல் பாராது உழைத்து உடல் மெலிந்து போயிருக்கிறார் என்ற வகையிலான பரைப்புரைக்காகவே கிம் ஜோங் உன்னின் காணொளி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சோப் கூறுகிறார்.
இது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
வடகொரியாவைப் பொறுத்தவரை கிம் ஜோங் உன்னின் உடல் நிலை மிகவும் அதிக கவனத்தைப் பெறும் அம்சமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது.
2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தந்தை கிம் ஜோங் இல் இறந்த பிறகு அதிபர் பொறுப்பை கிம் ஜோங் உன் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு கிம் ஜோங் உன்னின் உடல் எடை படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது.
கிம் ஜோங் உன், கிம் அதிகாரப் பரம்பரையில் மூன்றாவது தலைமுறை. பீக்து சிகரத்தின் உன்னத மனிதர்கள் என்று இவர்கள் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். ஜப்பானுக்கு எதிராகக் கெரில்லா போரைத் தொடங்கிய மலைப்பகுதியின் பெயர் இது. .
கிம் ஜோங் உன்னுக்குப் பிறகு வடகொரியாவை யார் ஆட்சி செய்வார்கள் என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான விடை இல்லை. அவரது மரணமோ, நீண்ட கால உடல் முடக்கமோ நாட்டில் அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்திவிடும். அது கிழக்கு ஆசியாவில் மற்றொரு நிலையற்ற தன்மைக்குக் காரணமாக அமையக்கூடும்.
கிம் ஜோங் உன்னின் தங்கை கிம் யோ-ஜோங் அடிக்கடி ஊடகங்களில் தென்படுகிறார். ஆனால் ஒரு பெண்ணை வடகொரியா தலைவராக ஏற்குமா என்ன சந்தேகம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. ஒருவேளை கிம் யோ-ஜோங் பொருத்தமற்றவர் என்று கருதப்பட்டால், அதிகாரம் முதல் முறையாக கிம் குடும்பத்துக்கு வெளியே சென்றுவிடும்.
இதற்கு முன்னதாக உடல்நிலை மோசமாக இருந்திருக்கிறதா?
2014-ஆம் ஆண்டு ஊடக வெளியில் இருந்து 40 நாள்கள் காணாமல் போய்விட்டார் கிம் ஜோங் உன். அப்போது அவரது உடல்நலம் குன்றியிருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் என்று வதந்தி பரவியது. பின்னர் அவர் ஊன்றுகோலின் உதவியுடன் நடக்கும் காட்சி வெளியானபோது, அவருக்கு மூட்டில் அறுவைச் சிகிச்சை நடந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர்.
இதுபோன்று பலமுறை கிம் ஜோங் உன் காணாமல் போயிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அது மருத்துவக் காரணங்களுக்காகவே இருக்கும் என அண்டை நாடான தென்கொரியா முடிவு செய்திருக்கிறது.
2020-ஆம் ஆண்டு அப்படியொரு சம்பவம் நடந்தது. காணாமல் போயிருந்த கிம் ஜோங் உன், தனது மணிக்கட்டில் சில தழும்புகளோடு தோன்றினார். அது மருத்துவச் சிகிச்சைகளால் ஏற்பட்டது எனக் கருதப்பட்டது.
கிம் ஜோங் உன்னுக்கு 37 வயதாகிறது. அதிகமாகப் புகைப்பிடிக்கக் கூடியவர். மதுக் குடிப்பதிலும் அப்படியே.
அவரது உடல் எடை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் அவருக்கு நீரிழிவு அல்லது முடக்குவாதம் போன்ற நோய்கள் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்து எழுந்தது. ஆனால் அவரது உடல்நிலை பற்றி அரசு ஊடகத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதை உறுதி செய்யவும் முடியாது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்