You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசியா டு அம்னீஷியா: சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: வைபவ், கருணாகரன், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரியா சுமன், மயில்சாமி, சச்சு; இசை: பிரேம்ஜி; ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி; இயக்கம்: ராதா மோகன். வெளியீடு: ஜீ 5 ஓடிடி.
'காற்றின் மொழி' படத்திற்குப் பிறகு ராதா மோகன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் இது. ஏற்கனவே அவர் இயக்கிய 'பொம்மை' இன்னும் வெளியாகாத நிலையில், அதற்கடுத்த படமான 'மலேஷியா டு அம்னீஷியா'வை ஓடிடியில் வெளியிட்டிருக்கிறார்கள்.
அருண்குமார் கிருஷ்ணமூர்த்தியும் (வைபவ்) சுஜாதாவும் (வாணி போஜன்) கணவன் மனைவி. ஆனால், அருண் குமாருக்கு பெங்களூரில் ஒரு ரகசிய காதலி இருக்கிறாள். ஒரு நாள், பெங்களூரில் காதலியைப் பார்க்கச் செல்லும் அருண் குமார், தான் மலேசியாவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் செல்கிறான். ஆனால், அருண்குமார் செல்வதாகச் சொன்ன விமானம் கடலில் விழுந்து மாயகிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன.
பெங்களூரில் இருக்கும் அருண்குமார் எப்படி இந்த நிலையமையை சமாளிக்கிறான் என்பதே மீதிக் கதை. இதற்கு நடுவில் சுஜாதாவின் மாமா (எம்.எஸ். பாஸ்கர்) ஒருவர் இந்த விவகாரத்தை துப்பறிய ஆரம்பிக்கிறார்.
மொத்தமே ஆறு பாத்திரங்கள். இதை வைத்துக்கொண்டு ஒரு காமெடி திரைப்படத்தைத் தந்திருக்கிறார் ராதாமோகன். கதையின் ஒன்லைன் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. தவிர, துப்பறியும் மாமாவின் பாத்திரமும் கதைக்கு கலகலப்பை சேர்த்திருக்கிறது. ஆனால், எல்லாம் இருந்தும் ஒரு முழுமையான சினிமாவைப் பார்க்கும் அனுபவத்தைத் தரவில்லை. மாறாக, 80களில் தூர்தர்ஷனில் வெளியான ஓரங்க நாடங்களில் ஒன்றைப் பார்ப்பதுபோன்ற ஒரு உணர்வையே ஏற்படுத்துகிறது படம்.
சிக்கலான சூழலில் உருவாகும் அபத்தமான தருணங்களை நகைச்சுவையாக்க முயற்சித்திருக்கிறார் ராதாமோகன். அது பல தருணங்களில் ஒர்க் - அவுட் ஆகவில்லை. சிற்சில இடங்களில் மட்டும் புன்னகையை வரவழைக்கின்றன.
இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கும் எம்.எஸ். பாஸ்கரும் கருணாகரனும் வரும் காட்சிகள் சற்றுப் பரவாயில்லை. வாணி போஜனுக்கு, அவருடைய தொலைக்காட்சி தொடர்களின் நீட்சியைப் போலவே இந்தப் படம் அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவும் இசையும் குறை சொல்ல முடியாதபடி அமைந்திருக்கின்றன.
நிச்சயமாக ஒரு முறை பார்த்துவைக்கலாம்.
பிற செய்திகள்:
- சென்னையில் மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார், இடைநீக்கம்
- மாநிலங்கள் தடுப்பூசிகளை நிறுவனங்களிடமிருந்து நேரடியாக பெறுவதில் என்ன சிக்கல்?
- சீன ஆதிக்க சட்டம் இலங்கையில் நிறைவேறியது - சவால்கள் என்ன?
- வைரமுத்துவுக்கு விருது: மறு பரிசீலனை செய்யப்போவதாக ஓஎன்வி விருது குழு அறிவிப்பு
- செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை குத்தகைக்கு கோரியுள்ள தமிழக அரசு: என்ன பலன்?
- 'நான் ஒரு யூதனாக இருந்திருந்தால்...' காந்தி சொன்ன செய்தி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்