You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வைரமுத்து விருது சர்ச்சை: மறு பரிசீலனை செய்யப்போவதாக ஓஎன்வி விருது குழு அறிவிப்பு
கேரளாவின் மரியாதைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஓஎன்வி குறுப் இலக்கிய விருது பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், அதனை மறுபரிசீலனை செய்யப்போவதாக விருது ஓஎன்வி கல்சுரல் அகாதெமி தெரிவித்திருக்கிறது.
ஓஎன்வி குறுப் விருது என்பது ஞானபீட விருது பெற்ற ஓஎன்வி குறுப் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் இலக்கிய விருதாகும். இந்த ஆண்டிற்கான விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்டது.
வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிலர் பாலியல் சீண்டல் புகார்கள் அளித்திருந்த நிலையில், பெருமைக்குரிய இந்த விருதை அவருக்கு அளித்தது குறித்து தமிழிலும் மலையாளத்திலும் பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பினர்.
மலையாளத் திரையுலகைச் சேர்ந்த உமன் இன் சினிமா கலெக்டிவ், பல்வேறு புகார்களை எதிர்கொள்ளும் வைரமுத்துவுக்கு இந்த விருது எப்படி அளிக்கப்பட்டது என்பது குறித்து கேள்வியெழுப்பியது. இந்த விருது வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்டது குறித்து நடிகை பார்வதி உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களை எழுப்பினர்.
வைரமுத்துவின் எழுத்துகளுக்காகவே இந்த விருது அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவருடைய நடத்தை ஆராய்வது தங்கள் நோக்கமல்ல என்று ஓஎன்வி குறுப் கல்சுரல் அகாடமியின் தலைவரும் இயக்குனருமான அடூர் கோபலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் எதிர்ப்புகள் தொடர்ந்த நிலையில், மே 28ஆம் தேதி ஓஎன்வி கல்சுரல் அகாதெமியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விருது குறித்து மறு பரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது. "தேர்வுக் குழுவின் ஆலோசனையின் பேரில் இந்த ஆண்டு அளிக்கப்பட்ட விருது மறுபரிசீலனை செய்யப்படுகிறது" என அந்த அறிக்கை கூறுகிறது.
கேரள முதலவர் பினராயி விஜயன் இந்த அமைப்பின் தலைமைப் புரவலராக இருக்கிறார். மேலும் எம்.டி. வாசுதேவன் நாயர், பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் ஆகியோரும் இந்த அமைப்பின் புரவலர்களாக உள்ளனர்.
ஓஎன்வி குறுப் இலக்கிய விருது என்பது மலையாளத்திலும் வேறு இந்திய மொழிகளிலும் எழுதும் கவிஞர்களுக்கு அளிக்கப்படும் விருதாகும். இந்த விருதில் ஒரு கேடயமும் 3 லட்ச ரூபாய் பணமும் தரப்படும்.
இந்த முறை பரிசு பெறுபவரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் கமிட்டியில் கவிஞர் பிரபா வர்மா, மலையாள பல்கலைக்கழக துணை வேந்தர் அனில் வல்லத்தோள், எழுத்தாளர் ஆலங்கொடே லீலா கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த அமைப்பின் தலைவராக இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் செயல்பட்டுவருகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்