இயக்குநர் ஜனநாதனுக்கு என்ன ஆனது? கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை

தமிழ் சினிமா இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, பூலோகம் ஆகிய படங்களை இயக்கியவர் ஜனநாதன். தற்போது அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்த லாபம் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

நேற்று மதியம் வரை லாபம் படத்தின் எடிட்டிங் பணிகளை அவர் மேற்கொண்டிருந்த நிலையில், மதிய உணவுக்குச் சென்றவர் மீண்டும் எடிட்டிங் பணிக்கு திரும்ப வரவில்லை. இதையடுத்து பிற்பகல் மூன்றரை மணிக்கு மேல் அவரது உதவியாளர்கள் ஜனநாதனின் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் சென்னை க்ரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையிலேயே இருந்து வருகிறது.

இதற்கிடையில் அவரது உடல்நிலை தொடர்பான வதந்திகள் பரவ ஆரம்பித்தன. "ஜனநாதன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் தொடர்பான உறுதி செய்யப்படாத தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்" என இயக்குநர் அமீர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இயக்குநர் ஜனநாதன் உடல்நிலை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :