You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தி.மு.கவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - எந்தத் தொகுதியில் யார் போட்டி?
தி.மு.கவின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலினும் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும் போட்டியிடுகின்றனர்.
சென்னையில் உள்ள தி.மு.கவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மு.க. ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இந்தத் தேர்தலில் தி.மு.க. 173 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளில் சில கட்சிகளும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் ஒட்டுமொத்தமாக 187 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் தி.மு.கவும் கூட்டணியினரும் களமிறங்குவார்கள் என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.கவின் சார்பில் போட்டியிடும் முக்கியமான வேட்பாளர்கள்: நாகர்கோவில் தொகுதியின் என். சுரேஷ் ராஜன், ஆலங்குளம் தொகுதியில் பூங்கோதை ஆலடி அருணா, திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் கீதா ஜீவன், முதுகுளத்தூர் தொகுதியில் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், திருச்சுழி தொகுதியில் தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டை தொகுதியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், போடி நாயக்கனூரில் தங்க தமிழ்ச்செல்வன், மதுரை மத்தியத் தொகுதியில் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திருப்பத்தூர் தொகுதியில் கே.ஆர். பெரியகருப்பன், திருவாரூர் தொகுதியில் பூண்டி கலைவாணன், மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி. ராஜா, குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், குன்னம் தொகுதியில் எஸ்.எஸ். சிவசங்கர், திருவெறும்பூரில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மேற்கில் கே.என். நேரு, கரூர் தொகுதியில் வி. செந்தில் பாலாஜி, தொண்டாமுத்தூரில் கார்த்திகேய சிவசேனாபதி, மொடக்குறிச்சியில் சுப்புலட்சுமி ஜெகதீசன், எடப்பாடி தொகுதியில் த. சம்பத்குமார், திருக்கோவிலூரில் க. பொன்முடி, திருவண்ணாமலையில் எ.வ. வேலு, காட்பாடி தொகுதியில் துரைமுருகன், ஆலந்தூர் தா.மோ. அன்பரசன், சைதாப்பேட்டை மா. சுப்பிரமணியன், ஆயிரம் விளக்கு தொகுதியில் டாக்டர் நா. எழிலன், திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின், துறைமுக் தொகுதியில் சேகர் பாபு, கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலினும் போட்டியிடுகின்றனர்.
எடப்பாடி தொகுதியில் தொகுதியில் முதலமைச்சர் கே. பழனிசாமி போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து ந. சம்பத்குமார் நிறுத்தப்பட்டிருக்கிறார். அதேபோல, போடி நாயக்கனூரில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்த்து அ.ம.மு.கவிலிருந்து தி.மு.கவுக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டிருக்கிறார். கரூரில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி நிறுத்தப்பட்டிருக்கிறார். தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை எதிர்த்து கார்த்திகேய சிவசேனாதிபதி போட்டியிடுகிறார்.
உதயநிதி ஸ்டாலின் இந்தத் தேர்தலில் போட்டியிட மாட்டார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மு. கருணாநிதியின் மருத்துவராக இருந்த டாக்டர் நா. எழிலன் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். எதிர்பார்த்தபடியே கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் மு.க. ஸ்டாலின்.
இந்தத் தேர்தலில் 14 தொகுதிகளில் பா.ஜ.கவுக்கு எதிராக தி.மு.க. போட்டியிடுகிறது. உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து அ.தி.மு.க.கூட்டணியில் பா.ம.கவின் வேட்பாளர் கஸ்ஸாலி போட்டியிடுகிறார். மு.க. ஸ்டாலினை எதிர்த்து அ.தி.மு.கவின் ஆதிராஜாராம் போட்டியிடுகிறார். முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியனை எதிர்த்து அ.தி.மு.கவின் சார்பில் சைதை துரைசாமி போட்டியிடுகிறார்.
தி.மு.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த க. அன்பழகனின் பேரன் அ. வெற்றியழகனுக்கு வில்லிவாக்கம் தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் கே.பி. சங்கர் போட்டியிடுகிறார்.
மார்ச் 15ஆம் தேதியன்று வேட்பு மனுவைத் தாக்கல்செய்துவிட்டு பிரச்சாரத்தைத் துவங்கவிருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். சனிக்கிழமை மாலைக்குள் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்