You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பழங்கால மனிதர்களின் கலைகள்: ஆஸ்திரேலியாவில்17,300 ஆண்டுகளுக்கு முந்தைய கங்காரு ஓவியம் கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் சுமார் 17,300 ஆண்டுகளுக்கு முந்தைய கங்காரு பாறை ஓவியம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த நாட்டில் இதுவரை கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையானது. இந்த கங்காரு ஓவியம்தான் பாறை குகை ஒன்றின் மேற்கூரையில் சுமார் 6.5 அடி நீளம் உள்ள இந்த ஓவியம் சிவப்பு நிறமியைக் கொண்டு பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது.
இந்த ஓவியம் மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதி தொல்கால ஆதிமனித ஓவியங்களுக்கு பெயர் பெற்றது.
இந்த ஓவியத்தின் அருகே கிடைக்கப்பெற்ற களிமண்ணால் ஆன பழங்கால குளவிக் கூடுகள் ரேடியோ கார்பன் டேட்டிங் செய்யப்பட்டு இதன் வயது கண்டறியப்பட்டது. (கார்பன் டேட்டிங் என்பது படிமங்கள், தொல்பொருட்கள் உள்ளிட்டவற்றின் வயதைக் கண்டறிவதற்கான தொழில்நுட்பம்.)
இந்த ஆய்வின் முடிவுகள் 'நேச்சர் ஹ்யூமன் பிஹேவியர்' எனும் அறிவியல் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஓவியத்தின் மேலேயும், அதற்கு அடியிலும் பழங்கால குளவிக் கூடுகளை கண்டறிவது மிக மிக அரிதானது என்று ரேடியோ கார்பன் டேட்டிங் தொழில்நுட்பத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஆய்வாளர் டேமியன் ஃபின்ச் கூறுகிறார்.
இந்த ஓவியத்தின் மேற்பரப்பில் கிடைத்த மற்றும் அடியில் கிடைத்த பழங்கால குளவிக் கூடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு இதன் வயதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
நிச்சயமாக இந்த ஓவியம் வரையப்பட்டு அதிகபட்சமாக 17,500 ஆண்டுகளும் குறைந்தபட்சமாக 17,100 ஆண்டுகளும் இருக்கும். இந்த ஓவியத்தின் வயது 17,300 ஆண்டுகளாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று மெல்பர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் டேமியன் ஃபின்ச் தெரிவிக்கிறார்.
பண்பாட்டுத் தொடர்புகள்
இந்த ஆய்வுக் கட்டுரை எழுதியவர்களில் ஒருவரான, மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ஸ்வன் ஓஸ்மேன், "தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம் மற்றும் பிற பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள பழங்கால ஓவியங்கள் ஆகியவற்றின் இடையே தொடர்பு இருக்கக்கூடும்," என்று கூறுகிறார்.
இந்த கங்காருவின் படம் தென்கிழக்கு ஆசிய தீவுகளில் கண்டறியப்பட்டுள்ள 40,000 ஆண்டுகளுக்கும் முந்தைய ஓவியங்களை ஒத்து உள்ளது. இரு பகுதிகளுக்கும் பண்பாட்டுத் தொடர்புகள் ஏதேனும் இருப்பதை இது குறிக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 45,000 ஆண்டுகளுக்கு முந்தைய உலகிலேயே மிகவும் பழமையான விலங்குகள் ஓவியத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
தென்னாப்பிரிக்காவில் 73,000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட ஹேஷ்டேக் வடிவிலான ஓவியம் ஒன்று இதுவரை உலகில் கண்டறியப்பட்டுள்ள பாறை ஓவியங்களில் மிகவும் பழமையான ஓவியம் என்று கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: