You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பதஞ்சலி கொரோனில் மருந்து: பாபா ராம்தேவின் 'அப்பட்டமான பொய்' பற்றி அமைச்சர் விளக்க வேண்டும் - ஐ.எம்.ஏ
இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
கொரோனில் குறித்து 'அப்பட்டமான பொய்'
சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மாத்திரை உலக சுகாதார நிறுவனத்தின் சான்றளிப்பு திட்டத்தின்படி சான்றிதழ் பெற்றது என்று கூறப்பட்டுள்ள ' அப்பட்டமான பொய்' குறித்து, அது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் திங்களன்று அறிக்கை வெளியிட்டுள்ளது என்கிறது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
பிப்ரவரி 19ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் கொரோனில் மாத்திரை கோவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படும் என்று இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகத்திடம் உலக சுகாதார நிறுவனத்தின் சான்றளிப்பு திட்டத்தின்கீழ் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது என்று கூறினார் ராம்தேவ். சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
அப்போது நவீன மருத்துவ முறையை "மருத்துவ பயங்கரவாதம்" என்றும் ராம்தேவ் குறிப்பிட்டார்.
ஆனால், எந்த பாரம்பரிய மருந்தின் செயல்திறன் குறித்தும் தாங்கள் ஆய்வு செய்யவோ சான்றிதழ் வழங்கவோ இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிரிவு அன்றைய தினமே ட்விட்டரில் விளக்கம் அளித்திருந்தது.
இதுதொடர்பாக அந்த நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கமளிக்க வேண்டும் என்றும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு இது தொடர்பாக கடிதம் எழுதப் போவதாகவும் இந்திய மருத்துவ கழகம் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த நாட்டின் முன்பும் இப்படி தவறான தகவலை கூறுவது எப்படி முறையானதாக இருக்கும் என்றும் ஹர்ஷ்வர்தனிடம் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் - தீபம் ஏற்றச் சொல்லும் அதிமுக
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பிப். 24-இல் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என அதிமுக கேட்டுக் கொண்டுள்ளது என்கிறது தினமணி செய்தி.
இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் திங்கள்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
எதிர்வரும் 24-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தில் ஒவ்வொருவரும் என் இல்லம் அம்மாவின் இல்லம் என உளமார நினைத்துக் கொண்டு வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றை ஏற்ற வேண்டும்.
'உயிர்மூச்சு உள்ளவரை ஜெயலலிதாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான அதிமுகவையும் காப்பேன். இது அவா் மீது ஆணை என உறுதியேற்போம்' என்று அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி கே.பழனிசாமியும் தெரிவித்துள்ளனர் என்கிறது அந்தச் செய்தி.
நரசிம்ம ராவ் மகளுக்கு சட்ட மேலவை வாய்ப்பு
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மகள் வாணி தேவி தெலங்கானாவில் இருந்து சட்ட மேலவைக்கு தேர்வாகிறார் என்கிறது தினத்தந்தி செய்தி.
நாட்டின் வளர்ச்சி பணிகளில் பங்கு கொண்ட நரசிம்ம ராவுக்கு மரியாதை அளிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக அவரது பிறந்த நாளை கட்சி கொண்டாடி வருகிறது என்று ஆளும் தெலங்கானா ராஷ்டீரிய சமிதியின் விலங்குகள் நலத்துறை அமைச்சர் தலசனி ஸ்ரீனிவாச யாதவ் கூறியுள்ளார்.
காங்கிரசின் மூத்த தலைவரான அவரது மறைவுக்கு பின்னர் எந்தவொரு கட்சியும் அவருக்கு மரியாதை அளிக்கவில்லை. ஆனால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவரை மறக்கவில்லை. அவரது மகளை எம்.எல்.சி. வேட்பாளராக கட்சி நிறுத்தியுள்ளது. அதற்கு தகுதியானவர் வாணி தேவி என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- "தமிழ் வாழ வேண்டுமென்றால், இந்துத்வா வெல்ல வேண்டும்" - தேஜஸ்வி சூர்யா
- எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை: தொடர் தோல்விகள் முதல் திடீர் திருப்பங்கள் வரை
- நிதி நெருக்கடியால் பன்றி வளர்ப்பின் பக்கம் திரும்பிய சீன செல்பேசி நிறுவனம்
- போயிங் 777: இயந்திர கோளாறு - அமெரிக்காவில் தரையிறக்கப்படும் 128 விமானங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: