தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் - 2: காப்பியடிக்கப்பட்டதா படத்தின் போஸ்டர்?

நடிகர் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்று இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன்.

இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணி கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியிருந்த இந்த படம் அப்போது கலவையான விமர்சனங்களை பெற்றது.

வெகுஜன மக்களிடம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெறாதபோதிலும், சினிமா விரும்பிகளிடம் ஆயிரத்தில் ஒருவன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் நடித்த கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.

தயாரிப்பாளர் ரவீந்திரன் மீண்டும் நேற்று முன்தினம் (டிசம்பர் 31) தமிழகமெங்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை வெளியிட்டுள்ளார். சுமார் 70-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தைக் கொண்டாடும் காணொளிகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டன.

இந்தநிலையில், செல்வராகவன் ஆயிரத்தில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த செல்வராகவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இது வரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்" என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்வராகவனின் ட்விட்டைப் பகிர்ந்துள்ள தனுஷ், "முன் தயாரிப்புக்கான பணிக்கு மட்டும் ஒருவருடம் தேவைப்படும். ஆனால், இது செல்வராகவனின் கனவு படம். 2024-ல் இளவரசன் திரும்புகிறான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

‌படத்துக்கான போஸ்டரும் வெளியிட்டுள்ளனர். படத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. தயாரிப்பு, இசை மற்ற நடிகர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும், படம் 2024-ல் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காப்பியடிக்கப்பட்டதா படத்தின் போஸ்டர்?

செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு போஸ்டர் வெளியான நிலையில், அது மாத்தியூ லாஃப்ரே என்ற பிரான்ஸை சேர்ந்த கலைஞரின் ஓவியத்தை ஒத்ததாக உள்ளதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக அந்த கலைஞரின் இணையதளத்தை பார்வையிட்டபோது, ஆயிரத்தில் ஒருத்தன் படத்தின் போஸ்டரை ஒத்த ஓவியத்தை அவர் பகிர்ந்துள்ளதாக தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :