You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிஸ்கோத்: சினிமா விமர்சனம் - சந்தானம், மொட்டை ராஜேந்திரன் , லொள்ளு சபா மனோகர் கூட்டணி எப்படி?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, ஆடுகளம் நரேன், ஆனந்த் ராஜ், சௌகார் ஜானகி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர்; இசை: ரதன்; ஒளிப்பதிவு: சண்முக சுந்தரம்; இயக்கம்: ஆர். கண்ணன்.
2008ல் ஆடம் ஷாங்க்மேன் இயக்கத்தில் ஆடம் சாண்ட்லர் நடித்து வெளிவந்த படம் 'பெட்டைம் ஸ்டோரீஸ்'. அந்தப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் 'பிஸ்கோத்'.
சிறிய பிஸ்கட் கம்பனி ஒன்றை நடத்திவருகிறான் தர்மராஜன். அவனுடைய நண்பன் நரசிம்மன். தர்மராஜனின் மகன் ராஜா. கம்பனி வளர்ந்து வரும் நேரத்தில் தர்மராஜன் இறந்துவிட, அந்தக் கம்பனியை அபகரிக்கிறான் நரசிம்மன்.
அதே கம்பனியில் ஒரு சாதாரண தொழிலாளியாக பணியாற்றுகிறான் ராஜா. ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் வசிக்கும் பாட்டி ஒருவர், ராஜாவுக்கு கதை ஒன்றை சொல்கிறார். அடுத்த நாள் அந்தக் கதையில் சொன்னது எல்லாமே ராஜாவின் வாழ்க்கையில் நடக்கிறது. இதனால், அடுத்தடுத்து பாட்டியை கதைசொல்லச் சொல்லி, அவை நடக்கிறதா என்று பார்க்கிறான் ராஜா. பிஸ்கட் கம்பனி அவனுக்குக் கிடைத்ததா என்பது மீதிக் கதை.
பெட்டைம் ஸ்டோரீஸில் பிஸ்கட் கம்பனிக்குப் பதிலாக ஹோட்டல் என்று இருக்கும். பாட்டிக்கு பதிலாக குழந்தைகள் கதைசொல்வார்கள். ஆனால், சுவாரஸ்யமான கதை என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, சொல்லப்படும் கதையில் வரும் பாத்திரங்களுக்கு நிகழ்கால கதையில் வரும் பாத்திரங்களே நடிப்பதால், அட்டகாசமாக இருக்கிறது.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இருந்தாலும் ரோமாபுரியில் நடக்கும் கதையாக இருந்தாலும் அதிலும் மொட்டை ராஜேந்திரனும் லொள்ளு சபா மனோகரும் வந்துவிடுவது, அந்தப் பகுதிகள் கலகலப்பாக நகர உதவுகிறது.
முதல் பாதி படம் ஓடுவதே தெரியவில்லை. விறுவிறுப்பாகவும் படுவேகமாகவும் நகர்கிறது படம். ஆனால், இரண்டாவது பாதியில் கோட்டை விட்டிருக்கிறார்கள். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பில் பாதிகூட இல்லை என்பதால், படம் முடியும்போது மிக சுமாரான படத்தையே பார்த்த எண்ணம் ஏற்படுகிறது.
சந்தானத்திற்கு இந்தப் படம் நல்ல தீனி. மூன்று, நான்கு வேடங்களில் கலக்கியிருக்கிறார். ஆனால், எல்லா காட்சிகளிலும் யாருக்காவது 'கவுன்டர்' கொடுத்துக்கொண்டே இருப்பது ஒரு கட்டத்தில் ஓவர் டோஸாகிவிடுகிறது. ஆனால், சந்தானம் - மொட்டை ராஜேந்திரன் - மனோகர் கூட்டணி படம் முழுவதையும் கலகலப்பாகவே நகர்த்திச் செல்கிறது.
படத்தின் நாயகி தாரா அலிஷா பெர்ரி. ஏ1 படத்தில் நாயகியாக வந்தவர். முதல் பாதியில் பெரிய அளவில் காட்சிகள் இல்லை. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் இருக்கின்றன. அதைத் தவிர இந்தப் படத்தில் அவருக்கு செய்வதற்கு ஏதும் இல்லை. பாட்டியாக நடித்திருக்கும் சௌகார் ஜானகிக்கு இது 400வது படம். உற்சாகமாகச் செய்திருக்கிறார்.
படத்தில் வரும் பல்வேறு காலகட்டத்திற்கு ஏற்படி பின்னணி இசையிலும் வித்தியாசப்படுத்தியிருக்கிறார் ரதன். ஆனால், இந்தப் படத்திற்கு பாடல்கள் அனாவசியம்.
மொத்தத்தில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் பார்த்தால், சிறிது நேரம் சிரித்துவிட்டு வரலாம்.
பிற செய்திகள்:
- 'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்க தடையா?' - கிளம்பும் எதிர்ப்பு
- பொதுவெளியில் புகை பிடிக்கும் கிம்: சமூக பிரச்னையை எப்படி எதிர்கொள்கிறது வட கொரியா?
- மத்திய அரசோடு போர் தொடுக்கும் எத்தியோப்பிய பிராந்தியம் - ராக்கெட் வீச்சு
- அமெரிக்கத் தேர்தல் 2020: கமலா ஹாரிஸின் வெற்றியும், அமெரிக்க-இந்தியர்களின் அதிகரிக்கும் அரசியல் செல்வாக்கும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :