சிலம்பரசன்: 3 ஆண்டுகளுக்குப் பிறகு சமூக ஊடகத்தில் நுழைந்தவருக்கு வரவேற்பு கிடைத்ததா?

சமூக ஊடகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் விமர்சிக்கப்பட்ட திரை பிரபலங்களில் ஒருவராக விளங்கிய நடிகர் டி.ஆர். சிலம்பரசன், தற்போது மீண்டும் டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் கணக்குகளை திறந்துள்ளார். கூடுதலாக இம்முறை அவர் யூ ட்யூபிலும் தடம் பதித்திருக்கிறார்.

புதிய சிகை அலங்காரம், புதிய தோற்றம், உடற்பயிற்சி செய்து மெருகேற்றிய உடல்கட்டு என தனது சமீபத்திய அன்றாட நடவடிக்கைகளை ஒரு காணொளியாக பதிவு செய்து, ஆத்மன் சிலம்பரசன் டிஆர் என்ற பெயரில் ஒரு காணொளியை அவர் தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றியிருக்கிறார்.

"மாணவர் தயாராக இருந்தால், ஆசிரியர் வருவார்" என்ற வாசகத்துடன் ,அந்த 57 நொடிகள் ஓடக்கூடிய காணொளி காட்சி நிறைவு பெறுகிறது.

டிவிட்டரில் கணக்கு தொடங்கிய முதல் நாளில் அவரை வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் 58 ஆயிரம் பேர் பின்தொடருகிறார்கள். ஃபேஸ்புக்கில் 6.98 லட்சம் பேர் அவரது பக்கத்தை பின்தொடருகிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.76 லட்சம் பேர் பின்தொடருகிறார்கள்.

முந்தைய ஆண்டுகளைப் போலவே, இம்முறையும் சிலம்பரசன் பெயரில், இதுதான் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் என்று குறிப்பிட்டு சிலர் அவரது படங்களையும் கருத்துகளையும் பதிவிடத் தொடங்கியிருக்கிறார்கள்.

தற்போது இயக்குநர் சுசீந்திரனின் பெயர் வைக்கப்படாத கிராமப்புற கதையில் சிலம்பரசன் நடித்து வருகிறார். திண்டுக்கலின் கிராமப்பு சூழலில் அந்த கதை படமாக்கப்பட்டு வருகிறது.

இதேபோல வெங்கட் பிரபுவின் மாநாடு என்ற த்ரில்லர் படத்திலும் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியிருக்கிறார். சென்னையில் படத்துவக்க விழா முடிந்து ஹைதராபாதில் பெரும்பாலான ஷூட்டிங் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அதன் படப்பிடிப்பு நின்றுபோனது.

சமூக ஊடகங்களில் இருந்து விலகியது ஏன்?

தமிழ்த் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு பாணி, தனது தந்தையும் திரைப்படத்துறையில் பல கலை வித்தகராகவும் அறியப்படும் டி. ராஜேந்தரின் பாணியை அவ்வப்போது பிரதிபலிக்கும் வகையில், தனது நடிப்புத்திறமையை சிலம்பரசன் வெளிப்படுத்தி வருவார்.

ஒரு காலத்தில் சமூக ஊடகங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் விவாதத்துக்குரிய இடுகைகளை பதிவிடுவதில் தனித்துவம் காட்டிய சிலம்பரசன், அவ்வப்போது பிரபல நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.

நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா, ஓவியா என பலருடனும் அவர் நெருக்கம் காட்டியதாக சமூக ஊடகங்களில் அவரைப்பற்றி அவரது ரசிகர்கள் என கூறிக் கொள்ளும் பலரே அவரை விமர்சிக்கும் வழக்கம் இருந்தது.

ஆனால், 2017ஆம் ஆண்டில் மிகவும் உச்சமாக பிக் பாஸ் தொடரில் சக கலைஞருடன் முத்த காட்சிகளில் நடித்து சர்ச்சையை உருவாக்கிய நடிகை ஓவியாவுடன் சிம்பு மிக நெருக்கமாக இருப்பதாகவும் அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் சிலம்பரசனின் பெயரில் ஒரு போலி கணக்கில் இருந்து பதிவான இடுகை, மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்தகைய கணக்கு தன்னுடையதே இல்லை என்று கூறி விஷமிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகர் சிலம்பரசன், ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்று தனது குணத்துக்கு விரோதமான வகையில் எதிர்மறை தோற்றத்தை தனக்கு ஏற்படுத்தும் முயற்சிகள் சமூக ஊடகங்களில் நடப்பதாகக் கூறி தனது டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை மூடினார். அதன் பிறகு தேவை எழும்போது செய்தியாளர்களை அழைத்துப் பேசுவதும் ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதிலுமே நேரத்தை செலவிட்ட சிலம்பரசன், தற்போது மீண்டும் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூட்யூப் ஆகிய தளங்களில் கணக்கை திறந்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் நடிகர் சிலம்பரசன் மட்டுமின்றி பல பிரபலங்கள் முந்தைய காலங்களில் தங்களுடைய கணக்குகளை நீக்கி விட்டு மீண்டும் அதை தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷால், தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறினார். இதேபோல, விலங்குகள் கொடுமைக்கு எதிரான பீட்டா அமைப்பில் அங்கம் வகித்தபோது, சர்ச்சையில் சிக்கிய நடிகை த்ரிஷா சில காலம் தனது டிவிட்டர் பக்கத்தை நீக்கியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: