நீட் தேர்வு: நடிகர் சூர்யாவுக்கு 6 முன்னாள் நீதிபதிகள் ஆதரவு, எதிர்க்கும் வழக்கறிஞர்கள் சங்கம்

நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்ற செயல்பாடு குறித்து வெளியிட்ட கருத்துக்காக நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்த நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக ஆறு முன்னாள் நீதிபதிகளும் எதிராக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ். பிரபாகரனும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

மருத்துவ படிப்பில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள "நீட்" நுழைவுத் தேர்வை, கொரோனா காலத்தில் மாணவர்கள் எழுதவேண்டிய காட்டாயம் தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர்,''கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வு எழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்‌' மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.

அவரது இந்த கருத்தை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி சுப்பிரமணியம், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகளான கே. சந்துரு, கே.எம். பாஷா, டி. சுதந்திரம், டி. ஹரிபரந்தாமன், கே. கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், "சூர்யாவின் கருத்து குறித்து நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்க அவசியம் இல்லை கருதுகிறோம். 4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவியுள்ளார். அவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிடலாம்.சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதால், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பது எங்கள் கடமை என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் உங்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறோம்" என்று முன்னாள் நீதிபதிகள் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கண்டிக்கும் வழக்கறிஞர்கள் சங்கம்

இந்த நிலையில், சூர்யாவின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் நீதித்துறை செயல்பாட்டை குறைத்து மதிப்பிடும் வகையிலும் உள்ளது என்று தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ். பிரபாகரன் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நீதிபதிகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலான செயல்பாடுகளை ஏற்கக் கூடாது என்றும் உரிய வகையில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்னெடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சட்ட நடைமுறைகளின்படி மேற்கொள்ள வேண்டும் என்றும் எஸ். பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாணவர்களுக்காக புதிய காணொளி

இதற்கிடையே, ஒன்றிணைவோம் மாணவர்களோடு துணை நிற்போம் என நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று புதிய காணொளியை வெளியிட்டுள்ளார்.

”ஒருத்தர் படித்தால் அந்த வீடு மாறும்; ஒவ்வொருத்தரும் படித்தால் இந்த நாடே மாறும்; கொரோனா நெருக்கடியில் மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியில் கைவிட்டு விடுகின்றனர். நாம் நினைத்தால் அதை மாற்றலாம்.” என அந்த காணொளியில் சூர்யா பின்குரல் வழங்கியிருக்கிறார்.

மேலும், அந்த காணொளி அவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் சார்பில் கொரோனா கால நிதி உதவிக்கான விண்ணப்பம் குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் நீட் தேர்வு தொடர்பாக விமர்சித்து சூர்யா கடுமையாக பேசியிருந்தார். ”நீட் போன்ற ’மனுநீதி’ தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது," என அவர் கூறியிருந்தார்.

மேலும், "கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.

தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள், அனல் பறக்க விவாதிப்பார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

சூர்யா தனது அறிக்கையில் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்தும் பேசியிருந்தார். எனவே அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், கொரோனா காலத்தில் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் கல்வியைக் கைவிட்ட மாணவர்களுக்காக புதிய காணொளியை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: