கீழடி: எலும்புக்கூடு மரபணு ஆராய்ச்சிக்கு நிதி வர தாமதம் என குற்றச்சாட்டு

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரியின் மரபணு (டி.என்.ஏ) ஆராய்ச்சிக்கு மத்திய,மாநில அரசுகளால் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.3 கோடி கிடைக்காததால், ஆராய்ச்சிப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி 5-ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு பெற்ற நிலையில் தற்போது 6ம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களில் 40 லட்ச ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி 19 முதல் நடந்து வருகிறது. இதனை தமிழக தொல்லியல் துறையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபணு பிரிவும் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றன.

கீழடியில் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரிகளில் உள்ள மரபணு (டி.என்.ஏ) குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள மதுரை காமராஜர் பல்கலைகழகத்திற்கு ரூ.3 கோடி மத்திய, மாநில அரசு ஒதுக்கியது. இந்த நிதி கொரோனா தாக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வருகையின்றி மரபணு ஆராய்ச்சி முற்றிலும் தடைப்பட்டுள்ளது. கல்லூரி திறப்பதற்கு முன்னதாகவே மத்திய, மாநில அரசு நிதி விடுவிக்கும்பட்சத்தில் மரபணு ஆராய்ச்சிக்கான ஆய்வகத்தை தயார் செய்யும் பணிகளை துவங்க வாய்ப்பாக அமையும் என்றார் மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் கிருஷ்ணன்.

மேலும், கொரோனா ஊரடங்கு முடிந்து கல்லூரி திறந்தவுடன் ஆராய்ச்சி மாணவர்களால் கீழடியில் கிடைத்த எலும்பு மாதிரிகளில் உள்ள மரபணு (டி.என்.ஏ) மூலம் அதன் காலம், அப்பகுதி மக்கள் யார், அவர்களின் நாகரிகம் என்ன என்பதை கண்டறிய ஆராய்ச்சி மாணவர்களால் ஆராய்ச்சி செய்து ஒரு வார காலத்தில் உலக பாரம்பரியமிக்க தமிழர்களின் வரலாற்றையும், வாழ்க்கை முறைகள் குறித்தும் அறிக்கை வெளியிட உள்ளோம்.

கீழடியில் கிடைத்த எலும்பு மாதிரிகள் உள்ளிட்ட பொருட்கள், தற்போது மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் உயிரியல் துறை ஆய்வகத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட பெட்டியில் ( FREEZER BOX ) பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: