You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மருத்துவர் உடலை அடக்கம் செய்ய மறுப்பு: எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில் வாழ்கிறோம்? - ராஜ்கிரண் கண்டனம் #Rajkiran #corona
ஞாயிற்றுக்கிழமையன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க மறுத்து சிலர் மாநகராட்சி அதிகாரிகளை தாக்கியதும், அதை தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்தும் நடிகர் ராஜ்கிரண் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்ட நடிகர் ராஜ்கிரண், நடந்த சம்பவங்கள் தொடர்பாக வருந்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், ''எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில்நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது,மிகுந்த வேதனையும், மன உளைச்சலும் ஏற்படுகிறது...
தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர்,யாரைப்பற்றியும் கவலைப்படாமல், "தான் படித்தது மக்களை காப்பாற்றுவதற்கே" என்ற ஒரே லட்சியத்தோடு, சமூகப்பொறுப்புணர்வோடு, தம் உயிரையும் பணயம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இது தான், என்றால், இஸ்லாமியனாகப்பிறந்த ஒரே காரணத்தால், வெறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த ஒரு மாற்றுத்திறனாளிச் சிறுவனின் உடலை, புதைக்க விடமாட்டோம் என்று அடாவடி பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்தது தான், இந்த நாட்டில் சட்டம், என்றால், உலக நாடுகளின் பார்வையில், நம் நாடும், தேசமும் மிகக்கேவலப்பட்டு நிற்கும்.
இதைப்போன்ற கொடுமைகளுக்கு, கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்காத ஆட்சியாளார்கள், மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர்..'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எழுந்த எதிர்ப்பு மற்றும் மயானத்தில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் நேற்று முதல் பல எதிர்ப்பு பதிவுகள் பதிவான நிலையில், நடிகர் ராஜ்கிரணின் இந்த பதிவு சமூகவலைத்தளத்தில் டிரெண்டாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தாக்கி உயிரிழந்த மருத்துவரின் உடலைப் புதைப்பதற்கு அப்பகுதிவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தது குறித்து, இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் இது தொடர்பாக இருபது பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் இறந்த உடலிலிருந்து யாருக்கும் இந்நோய் பரவாது என்றும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: