You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வி1 மர்டர் கேஸ் - சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
குற்றம் கடிதல், மகளிர் மட்டும், வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்த பாவல் நவநீதன் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் இது. தமிழில் சமீப காலமாக திரில்லர் படங்களின் வருகை அதிகரித்திருக்கும் நிலையில், அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு படம்தான் 'வி1 மர்டர் கேஸ்'.
கதாநாயகனான அக்னி (ராம் அருண்) காவல்துறையின் தடயவியல் துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரி. இருட்டைப் பார்த்தால் அதீதமான பயம் ஏற்படும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர். இதனாலேயே தடயவியல் துறைக்குள்ளேயே முடங்கியவர். ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தைப் பற்றி விசாரிக்க, சக அதிகாரியும் தோழியுமான லூனா (விஷ்ணு ப்ரியா) அக்னியை அணுகுகிறார்.
முதலில் மறுக்கும் அக்னி, பிறகு அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இறந்துபோன காதலனின் மீது முதலில் சந்தேகம் ஏற்படுகிறது. பிறகு, அவனும் இறந்துவிடுகிறான். பிறகு வேறு மூன்று பேர் மீது சந்தேகம் வருகிறது. சில திருப்பங்களுக்குப் பிறகு கொலையாளி கண்டுபிடிக்கப்படுகிறார்.
சுற்றிவளைக்காமல், பாடல்கள் இல்லாமல், படம் ஆரம்பித்தவுடனேயே நேரடியாக கதைக்குள் நுழைகிறது படம். பிறகு ஒவ்வொரு முடிச்சாக விழுவதும், அதனை உச்சகட்டத்திற்குக் கொண்டுசெல்வதும் சரியாகவே இருக்கிறது.
ஆனால் இந்த அம்சங்களைத் தாண்டி, படம் பெரிதாகக் கவரவில்லை. முக்கியமான காரணம் படமாக்கலில் உள்ள அமெச்சூர் தன்மை. தவிர, படத்தில் காவல்துறை தொடர்பான காட்சிகள், அங்கு நடக்கும் விசாரணை குறித்த விவரணைகள் மிகவும் ஏமாற்றமளிக்கின்றன. ஒரு காட்சியில் கதாநாயகன் காலையில் ஒருவரைத் துரத்த ஆரம்பித்தால், திடீரென இரவாகிவிடுகிறது.
இந்தப் படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால், பின்னணி இசையும் அவ்வளவு சிறப்பாக இல்லை. பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது இசை. பல காட்சிகளில் முக்கியமான தகவல்களைச் சொல்லும்போது, அவை காதிலேயே விழாதவகையில் பின்னணி இசை ஒலிக்கிறது.
முடிவில் கொலைக்கான லாஜிக்கும் காரணமும் எதிர்பாராத விதமாக இருந்தாலும், ஏற்கும்வகையில் அவை இல்லை.
படத்தில் கதாநாயகன், நாயகி ஆகிய இரண்டு முக்கியமான பாத்திரங்கள்தான். இதில் கதாநாயகியாக வரும் விஷ்ணுபிரியாவின் நடிப்பு ஓகே. ஆனால், கதாநாயகனாக வரும் ராம் அருண், துவக்கத்தில் சில இடங்களில் காட்சிகளுக்குப் பொருந்தாத வகையில் தெரிகிறார்.
ஒரு நல்ல த்ரில்லர் கதையைத் தேர்வுசெய்த இயக்குனர், அதனைச் சிறப்பாக படமாக்குவதில் தவறவிட்டிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: