"ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான் - ஜாமியா மிலியா விவகாரத்தில் வாய் திறக்காதது ஏன்?"

இந்திய அளவில் புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் ஷாருக் கான், ஜாமியா மிலியா மாணவர்கள் போரட்டம் மற்றும் அது தொடர்பான சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வருவதால் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அது ஏன்?

ஏனெனில் ஷாருக் கான் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பல்கலைக்கழக நிர்வாகிகளின் அனுமதி பெறாமல், காவல்துறை உள்ளே நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக ஷாருக் கான் எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. இணையதள பயன்பாட்டாளர்கள் பலரும் ஷாருக் கானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஷாருக் கான் மட்டுமல்ல, பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், ஆமிர் கான் என்று யாரும் எந்த கருத்தையும் இது தொடர்பாக தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் பல பாலிவுட் பிரபலங்கள் ஆயுஷ்மான் குரானா, அனுராக் கஷ்யம், மனோஜ் பாஜ்பேயி, விக்கி கௌஷல் உள்ளிட்ட பலரும் இந்த விவகாரம் தொடர்பாக ட்வீட் செய்துள்ளனர்.

"ஜாமியா மிலியா மாணவர்களுக்கு நடந்ததை அறிந்து நான் மிகவும் வருந்துகிறேன். இதை வன்மையாக கண்டிக்கிறேன். போராட்டம் நடத்த, அவரவர் உணர்வுகளை வெளிப்படுத்த அனைவருக்கும் இங்கு உரிமை உள்ளது. எனினும், போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது. இது காந்தியின் நிலம். ஜனநாயகத்தில் நம்பிக்கை வையுங்கள்" என்று நடிகர் ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.

கேங்க்ஸ் ஆஃப் வசேபூர் பிரபலம் மனோஜ் பாஜ்பேயி இதுகுறித்து கூறுகையில், "அநீதியை தடுப்பதற்கான அதிகாரம் நம்மிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அநீதியை எதிர்த்து போராட்டம் நடத்தாமல் இருக்கக் கூடாது. மாணவர்களுக்கும் அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கும் எனது ஆதரவு. அவர்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்தி திரைப்படத்துறையின் முக்கிய நடிகரும், இயக்குநருமான ஃபரான் அக்தர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மும்பையில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் போராடினால் மட்டும் போதாது என்று குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் தான் நடத்தும் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

தமிழ் பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாகவோ, அல்லது ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் செய்த விவகாரம் தொடர்பாகவோ நடிகர் ரஜினிகாந்த் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை

நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் ஹாசன், இந்த சட்டம் குறித்தும் பாஜக அரசு குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

டிசம்பர் 23ஆம் தேதியன்று தி.மு.க. நடத்தவிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் மக்கள் நீதி மய்யம் நிச்சயம் பங்கேற்கும் என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதியின் அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்ததற்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் நடிகர் சித்தார்த்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: