You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொலையுதிர் காலம்: சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
Hush என்ற ஆங்கிலப் படத்தின் ரீ - மேக். இந்தியில் தமன்னாவை வைத்து காமோஷி என்ற பெயரிலும் தமிழில் கொலையுதிர் காலம் என்ற பெயரிலும் இந்தப் படம் ரீ - மேக் செய்யப்பட்டது. இயக்குனர் சக்ரி டோலடி உன்னைப் போல் ஒருவன், பில்லா - 2 ஆகிய படங்களை இயக்கியவர். பல காரணங்களால், படம் வெளியாவது பல முறை தள்ளிப்போய் இப்போது வெளியாகியிருக்கிறது இந்தப் படம்.
பிரிட்டனின் சஸ்ஸக்ஸ் பகுதியைச் சேர்ந்த பணக்காரர் ஒருவரின் மனைவியான அபா லாஸன், இந்தியாவில் ஆதரவற்றோர் அமைப்பு ஒன்றிலிருந்து குழந்தையான ஸ்ருதியைத் தத்தெடுக்கிறார்.
தான் சாகும் தருவாயில் தன் எஸ்டேட், மாளிகை உள்ளிட்ட தன் சொத்துகள் அனைத்தையும் அந்தக் குழந்தைக்கே எழுதிவைக்கிறார். அந்தச் சொத்துகளை ஏற்றுப் பராமரிக்க இங்கிலாந்திற்கு வருகிறார் ஸ்ருதி (நயன்தாரா).
அபா லாஸனின் அண்ணன் மகன் அந்தத் தருணத்தில் குறுக்கிட்டு, ஸ்ருதி தான் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு, சொத்தைத் தன்னிடம் கொடுத்துவிட்டு வெளியேறிவிட வேண்டுமென்கிறான். ஆனால், மறுத்துவிடுகிறாள் ஸ்ருதி.
அன்று இரவு மாளிகைக்கு வரும் மர்ம மனிதன் ஒருவன் மாளிகையில் இருக்கும் அனைவரையும் கொன்றுவிடுகிறான். ஸ்ருதி அவனிடமிருந்து எப்படித் தப்புகிறாள், யார் அந்த மனிதனை அனுப்பியது என்பது மீதிக் கதை.
ஒரிஜினல் படமான Hush அவ்வளவு பிரமாதமான படமில்லை. இருந்தபோதும், அந்தப் படத்தின் பிரதான கதை படம் துவங்கி ஐந்து நிமிடத்தில் ஆரம்பித்துவிடும். பிறகு படம் முடியும்வரை துரத்தல்தான். தத்து, சொத்து, சென்டிமென்ட் போன்ற தொந்தரவுகள் கிடையாது. காரணமும் சற்று நம்பும்படி இருக்கும்.
இந்தப் படத்தில் ஒரு பணக்கார பெண்மணி, தான் தத்தெடுத்த பெண்ணுக்கு சொத்தை எழுதிவைக்கிறார் என்ற ஒற்றை வரியைச் சொல்ல முக்கால் மணி நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். அந்தக் காட்சிகளைவிட, படத்தின் துவக்கத்தில் போடப்படும் தமிழக அரசின் விளம்பரப் படத்தில் வரும் காட்சிகளே சுவாரஸ்யமாக இருக்கின்றன.
வில்லனின் நோக்கம், ஸ்ருதியிடமிருந்து சொத்தை அபகரிப்பது. அதற்காக ஹாலிவுட்டின் Slasher Thrillerகளில் வருவதைப் போல இத்தனை கொடூரக் கொலைகளைச் செய்ய முடியுமா? நான்கைந்து கொலைகளைச் செய்துவிட்டு, ஒரு மாபெரும் சொத்தை மிரட்டி எழுதிவாங்கிவிடலாம் என இங்கிலாந்தில் வசிக்கும் ஒருவர் திட்டமிட முடியுமா? அப்படியே இருந்தாலும், கொலைசெய்ய வருபவன் துவக்கத்திலேயே ஸ்ருதியை மிரட்டி கையெழுத்து வாங்காமல், ரசனையாக மிரட்டுகிறேன் என்ற பெயரில் அந்த மாளிகையைச் சுற்றிச்சுற்றி வருகிறார்.
Hush படத்தில் கொலைகாரன் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாத சைகோ. அதனால், குறுக்கே வரும் எல்லோரையும் கொலைசெய்கிறான். இந்தக் கதையில் இலக்கு ஸ்ருதி மட்டுமே எனும்போது 2 நாய்கள், ஒரு பிரதாப் போத்தன், ஒரு பாட்டி, 2 வேலைக்காரர்கள் என ஏகப்பட்ட தேவையில்லாத கொலைகள்.
பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை என்றவுடன் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் போலிருக்கிறது. பெரிதாக ஈர்க்கவில்லை. பூமிகா சாவ்லா, பிரதாப் போத்தன் போன்றவர்கள் இருந்தாலும் சில காட்சிகளில் மட்டுமே வந்துபோகிறார்கள்.
இசையில் மிரட்ட முயற்சிசெய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மட்டும் சிறப்பாக இருக்கிறது.
படம் முடியப்போகும்போது, அடுத்த பாகத்திற்கு துவக்கம்போல ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்து, நம்மைவிட நயன்தாராதான் அதிகம் பயந்திருப்பார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்