You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அபுதாபியில் மிகப் பெரிய இந்து கோயில் - முக்கிய தகவல்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் மிகப் பெரிய இந்து சமய கோயில் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இந்த கோயில் பற்றிய சில முக்கியமான தகவல்களை காண்போம்.
- ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரும், அந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமுமான அபுதாபியையும் அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான துபாயுடன் இணைக்கும் சாலையருகே அபு முரேகா என்னுமிடத்தில் இந்த கோயில் கட்டப்படுகிறது.
- அபுதாபியிலிருந்து 30 நிமிடம் மற்றும் துபாயிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
- 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் இந்த கோயிலின் வாகன நிறுத்துமிடமும் அதே பரப்பளவில் இருக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த கோயிலை கட்டுவதற்கான இடத்தை அபுதாபியின் பட்டத்து இளவரசரான ஷேக் மொஹம்மத் சயீத் நன்கொடையாக அளித்துள்ளார்.
- இந்த கோயிலை கட்டுவதற்கு தேவையான இளஞ்சிவப்பு மணற்கற்களும், பளிங்கு கற்களும், மற்ற சில கட்டுமான பொருட்களும் சுமார் 2,000 கைவினைக் கலைஞர்களை கொண்டு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் செய்யப்பட்டு கொண்டுவரப்படும்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் சில நேரங்களில் அதிகபட்சமாக 50 டிகிரி வெயில் காணப்படும் என்பதால், அதை தாங்கும் வகையிலான சிறப்பு வாய்ந்த கற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற மாளிகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதை ஒத்த மணற்கற்கள் இங்கு பயன்படுத்தப்படவுள்ளன.
- இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்டவுடன், ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகப் பெரிய இந்து மத வழிபாட்டு தலமாக இது உருவெடுக்கும்.
- இந்த கோயிலில் மேற்கொள்ளப்பட்டவுள்ள ஒட்டுமொத்த சிற்ப வேலைபாடுகளும் நல்லிணக்கத்தையும், ஆன்மீகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.
- இந்த கோயில் குறித்து முதல் முறையாக அறிவிக்கப்பட்டபோது, இது 2020ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்த உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.
- இந்த கோயிலில் இந்து மத கடவுள்களின் சிலைகள் மட்டுமின்றி, பார்வையாளர் அறை, வழிபாட்டு கூடம், கண்காட்சிகள், கற்றல் வசதிகள், விளையாட்டு பகுதி, பூங்கா, சைவ உணவகங்கள் மற்றும் சில கடைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
- அதுமட்டுமின்றி, இந்து மதப்படி திருமணங்களை செய்வதற்குரிய வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்படவுள்ளது.
- 7 கோபுரங்களை கொண்ட இந்த கோயிலை போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா அமைப்பு கட்டுகிறது.
- உலகம் முழுவதும் சுமார் 1200 கோவில்கள் மற்றும் 4,000க்கும் அதிகமான ஆன்மிக வழிப்பாட்டு மன்றங்களை இந்த அமைப்பு நிறுவி, பராமரித்து வருகிறது.
- அமைதி, ஆன்மிகம், ஒற்றுமை போன்றவற்றை வலியுறுத்தும் புத்தகங்களை கொண்ட நூலகமும் இங்கு அமைக்கப்படவுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து மத ஆலயம் அமைக்கப்படுவது இது முதல் முறையல்ல. அங்கு பல்வேறு மசூதிகள் மட்டுமின்றி, கிறித்துவ தேவாலயங்களும், சீக்கிய குருத்வாராக்களும், இந்து மத கோயில்களும் ஏற்கனவே உள்ளன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்