You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இயல்பு நிலைக்கு திரும்பியது பொன்னமராவதி" - மாவட்ட ஆட்சியர்
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதாக பரவலான குரல்பதிவால் பதற்றங்கள் உண்டான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சார்ந்த சமூகத்தைப் பற்றி இழிவாகப் பேசிய குரல்பதிவு சமூக ஊடகங்களில் பரவியதால் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பதற்றங்கள் உண்டானது.
எனவே, அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 140 டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டது.
இன்று காலை வரை ஆர்பாட்டங்கள் நடைபெற்றதால் 1,500 போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
1,000 கிராமவாசிகள் மீது வழக்கு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் 1,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் 'பொன்னமராவதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1,000 கிராமவாசிகள்' என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் யாரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
பொன்னமராவதி வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் வெள்ளியன்று பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கூடி, காவல் துறையினரைத் தாக்கி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறைக்கு சொந்தமான எட்டு வாகனங்களை சேதப்படுத்தியதாகவும், காயமடைந்த காவல் துறையினரை கொல்ல முயன்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களுடன் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாகப் பேசியவர்கள் கைது செய்யப்படுவர் என அவர் உறுதியளித்தார்.
இயல்பு நிலைக்கு திரும்பியது
இந்நிலையில், அங்கு "சட்ட ஒழுங்கு இயல்பாகவே உள்ளது. இன்று அங்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை" என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
"பொன்னமராவதி பேருந்து பணிமனைக்கு உட்பட்ட அனைத்து பேருந்துகளும் இயங்கி வருகின்றன. இயல்பு நிலை திரும்பி விட்டது."
"டாஸ்மாக் கடைகள் நாளையும் மூடப்பட்டிருக்கும். நாளை இரவு வரை 144 தடை உத்தரவு நீடிக்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்