You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பஞ்சாபில் ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்த விரக்தியில் மனைவியை கொன்ற கணவன்
- எழுதியவர், அரவிந்த் சப்ரா & நவ்தீப் கௌர்
- பதவி, பிபிசி
காவல்துறையினரையே திகைப்பில் ஆழ்த்திய கொடூரமான சம்பவம் ஒன்று பஞ்சாபில் நிகழ்ந்துள்ளது.
ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் விரக்தியடைந்த ஒருவர் தனது குழந்தைகளை ஓரறையில் அடைத்துவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர சம்பவம் பஞ்சாப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஓர் ஆண் குழந்தையை கூட பெற்று தரவில்லை என்ற காரணத்தினால் அவர் மனைவியை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது மனைவியை கொன்ற அந்த நபர் பிறகு தற்கொலை செய்துகொள்வதற்கு முயற்சி செய்துள்ளார். இவர்களது மூத்த மகளுக்கு 14 வயதும், இளைய மகளுக்கு நான்கு மாதமும், மற்ற குழந்தைகளுக்கு முறையே 12, 10 மற்றும் எட்டு வயதாகிறது.
இந்த சம்பவம் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகர் சண்டிகரிலிருந்து சுமார் 81 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அனந்த்பூர் சாஹிப் என்னுமிடத்தில் நிகழ்ந்துள்ளது.
"ஆண் குழந்தை பிறக்காததை மையமாக கொண்ட குடும்ப வன்முறைகள் நடப்பது பஞ்சாப்பில் அரிதான ஒன்றல்ல," என்று கூறுகிறார் இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி குர்ஜித் சிங். "இந்த சம்பவம் மிகவும் மோசமானது. தங்களது தாயை இழந்த அதிர்ச்சியில் இருக்கும் குழந்தைகள் எங்களை அப்பாவித்தனமாக பார்த்தன. அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.
பஞ்சாப்பை பொறுத்தவரை, கடந்த பல தசாப்தங்களாக பெண் குழந்தைகள் இருப்பதை கண்டறிந்தவுடன் அந்த கருவை கலைக்கும் போக்கு சாதாரணமான ஒன்றாக இருந்து வருகிறது.
இருந்தபோதிலும், கடந்த சில ஆண்டுகளில் இந்த போக்கிற்கு எதிரான நடவடிக்கையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியதன் காரணமாக கருக்கலைப்பு சம்பவங்கள் குறைந்து வருகின்றன. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பார்க்கும்போது, பஞ்சாபில் 1000 ஆண்களுக்கு 895 பெண்கள் என்ற அளவில் விகிதாச்சாரம் உள்ளது. இது தேசிய அளவிலான விகிதாசாரத்தைவிட 45 குறைவாகும்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 43 வயதாகும் ராகேஷ் குமார், தங்களுக்கு ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் ஏற்பட்ட வருத்தத்தின் காரணமாக தனது மனைவி அனிதா ராணியை (35) கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனது மனைவியை கொன்ற பிறகு, கழுத்தை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்த ராகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
"தொடர்ந்து ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் ஏற்பட்ட கடும் கோபத்தை தாங்க முடியாமல் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை கொன்று விட்டதாக அவர் எங்களிடம் கூறினார். ஐந்து பெண் குழந்தைகளையும் எப்படி வளர்த்து ஆளாக்குவேன் என்றும் தனக்கு ஏன் ஆண் குழந்தைகளே பிறக்கவில்லை என்பது குறித்து நினைத்தும் தான் விரக்தியடைந்ததாக அவர் தெரிவித்தார்" என்று காவல்துறை அதிகாரிகள் விவரித்தனர்.
"அனைத்து குழந்தைகளும் பெண்ணாக பிறந்ததற்கு அவர் என்னுடைய சகோதரியையே குறை கூறி வந்தார். ஆனால், இதுபோன்ற மோசமான முடிவை எடுப்பார் என்று நான் ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை" என்று கூறுகிறார் இறந்த அனிதாவின் சகோதரியும், ராகேஷின் சகோதரரை திருமணம் செய்துகொண்டவருமான சர்ப்ஜித் கௌர்.
அனந்த்பூர் சாஹிப் நகரத்தின் மையப்பகுதியிலிருந்து சுமார் மூன்று-நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஜஹிஞ்சரி என்னும் கிராமத்தில் முழுவதும் கட்டி முடிக்கப்படாத வீட்டில் இந்த தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.
இந்த தம்பதிகளின் வீட்டை பிபிசி பார்வையிட்டபோது, வீட்டில் இரண்டு மூத்த பெண் குழந்தைகள் இருந்தனர். மீதமுள்ள மூன்று குழந்தைகள் தற்காலிகமாக ராகேஷின் சகோதரர் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
"எங்களாலும் அந்த ஐந்து பெண் குழந்தைகளை வளர்த்தெடுக்க முடியாது. இறுதிச்சடங்குகள் நடைபெறும்வரை இந்த மூன்று குழந்தைகளை எனது வீட்டில் வைத்திருக்க முடிவெடுத்துள்ளேன். அதன் பிறகு செய்யவேண்டியது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை" என்று கூறும் ராகேஷின் சகோதரர் அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை.
கொல்லப்பட்ட தனது சகோதரியின் இரண்டு மூத்த மகள்களும் அச்சத்தில் உறைந்து போயிருப்பதாகவும், அவர்கள் சம்பவம் நடந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் சர்ப்ஜித் சிங் கூறுகிறார்.
குடும்பத்தின் வறிய நிலையின் காரணமாக சமீபத்தில் பஞ்சர் கடையொன்றை ஆரம்பித்த ராகேஷால் அதன் பிறகு கூட சூழ்நிலையை சரிசெய்ய முடியவில்லை.
கடந்த புதன்கிழமை அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. "ராகேஷ் கத்திக்கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்ததை பார்த்த சிலர், உள்ளே சென்று பார்த்தபோது இறந்த நிலையில் இருந்த அனிதாவை கண்டு அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் மருத்துவரை அழைத்த, ஒரு சில நிமிடங்களில் கையில் கூர்மையான பொருள் ஒன்றை வைத்திருந்த ராகேஷ், தான் தனது மனைவியை கொன்றுவிட்டதாகவும், தானும் கழுத்தை அறுத்துக்கொண்டதாகவும் கத்தினார்" என்று சர்ப்ஜித் கூறினார்.
ராகேஷிற்கு எதிராக கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணையின் முடிவில் அவருக்கு ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ கூட விதிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.
"என்னுடைய சகோதரியை கொலை செய்ததற்காக ராகேஷ் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்" என்று சர்ப்ஜித் மனமுடைந்து கூற, அதை அனிதாவின் இரண்டு குழந்தைகள் பாவமாக பார்த்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்