You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொள்ளாச்சி பாலியல் தாக்குதலும், பெருமாள்முருகனின் கழிமுகம் நாவலும்
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
"கடவுள் குறித்து எழுத முடியாது. மனிதர்கள் குறித்து எழுத அச்சம். எனக்கு ஐந்து விலங்குகளை நன்கு தெரியும். அதில் பூனையும், நாயும் கவிதைகளுக்கானவை. மாடு, பன்றி ஆகியவற்றைப் பற்றி எழுதவே கூடாது. மிஞ்சியது ஆடு ஒன்றுதான். பிரச்சனை தராத அப்பிராணி ஆடு. அதனால்தான் அதனை தேர்ந்தெடுத்தேன்." - இது 'பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை' நாவல் குறித்து பெருமாள்முருகன் கூறியது.
அசுரர் உலகம்
இன்னும் மனிதர்களை அச்சத்துடனே பெருமாள்முருகன் அணுகுவதாக தெரிகிறது. ஆம், கழிமுகம் நாவலில் மனிதர்கள் குறித்து எழுதி இருக்கிறார். ஆனால், அவர்கள் அனைவரும் ஏதோ வேற்றுலகத்தில் அதாவது அசுரர் உலகத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
சித்தரிப்புகள்தானே வேறேயன்றி, அவ்வுலகத்திலும் மனனம் செய்ய நிர்பந்திக்கும் கோழி பண்ணைகள் போன்ற பள்ளிகள் உள்ளது, மனிதர்களை எந்திரமாக அணுகும் கல்லூரி உள்ளது, ஆயாசமான அரசு அமைப்பும், நிறுவனங்களும் உள்ளன. குறிப்பாக கைபேசி கேட்டு தந்தையை நச்சரிக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
எதை பற்றிய நாவல் இது?
உலகமயமாக்கலுக்கு பின் மாறிவரும் குடும்ப அமைப்புகளில், போன தலைமுறை தந்தைக்கும் இந்த தலைமுறை மகனுக்குமான உறவில் உள்ள சிக்கல், பதற்றம் குறித்து பேசுகிறது பெருமாள்முருகனின் கழிமுகம் நாவல்.
குமாரசுரர் அவரது மனைவி மங்காசுரி மற்றும் மகன் மேகாசுரர், இவர்களது நண்பர்கள் தேனாசுரர், கனகாசுரர் மற்றும் அதிகாசுரரை சுற்றி இந்த நாவல் செல்கிறது.
இந்த நூற்றாண்டின் மகனான மேகாஸை எதிர்கொள்வதில் குமாரசுரருக்கு ஏராளமான மனத்தடை இருக்கிறது. மேகாஸுடன் என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும் என்பதிலிருந்து இந்த சிக்கல் தொடங்குகிறது.
ஏன் மகன் தன்னுடன் சரியாக பேச மாட்டேன் என்கிறான்? அவனை எப்படி புரிந்து கொள்வது, எப்படி கையாள்வது என்று குமாரசுரர் தனக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் சூழலில் மகன் மேகாஸ் விலை உயர்ந்த கைபேசி கேட்கிறான்.
குமாரசுரருக்கு விலையுயர்ந்த கைபேசி மூலம் அரங்கேறும் சில விஷயங்கள் எதுவும் உவப்பானதாக இல்லை. கைபேசியை குளியலறையில் வைத்து படம் பிடித்த இளைஞர்கள் கைது, செல்ஃபோன் மூலம் பரவும் ஆபாச படங்கள், செல்ஃபி மரணங்கள் என நவீன செல்ஃபோன் குறித்து அவர் கேட்கும், நாளிதழ்களில் படிக்கும் விஷயங்கள் எதுவும் உவப்பானதாக இல்லை.
குறிப்பாக வேலையில்லா மூன்று இளைஞர்கள் பலர் வீட்டின் குளியலறையில் செல்பேசியை வைத்து படம் பிடித்து, அந்த காட்சிகளை அதற்காக இருக்கும் ஆட்களிடம் விற்பனை செய்கிறார்கள்.
இவை அனைத்தையும் தன் மகனுடம் பொருத்தி பார்த்து கொள்கிறார். செல்ஃபோனால் தன் மகனின் ஒழுக்கம் சிதையும் என எதை எதையோ கற்பனை செய்து கொண்டு அஞ்சுகிறார். செல்ஃபோன் வாங்கி தர மறுக்கிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும் அவருக்கு இயற்கை ஓர் உள்ளொளியை வழங்குகிறது. சமூகத்தில் நடக்கும் அனைத்தையும் தன்னுடன் பொருத்தி பார்க்கும் பழக்கத்தை ஒரு கட்டத்தில் நிறுத்தி முழு மனதுடம் மகனுக்கு செல்ஃபோன் வாங்கி தர முடிவு செய்யும் போது, மகனின் விருப்பம் வேறு இடத்திற்கு நகர்ந்திருக்கிறது.
வெறும் புனைவல்ல
சமகால சிக்கல்களை புனைவாக்கும் கலையில் கை தேர்ந்திருக்கிறார் பெருமாள்முருகன். தினம் தினம் நாம் கேட்கும், பார்க்கும், எதிர்கொள்ளும் விஷயங்களை புனவாக்கி மிக சுவாரஸ்யமாக இந்த கழிமுகத்தில் தந்திருக்கிறார் அவர்.
கைபேசி எனும் ஒரு கருவியை வைத்து இந்த சமூகம் ஏற்படுத்தி இருக்கும் மனபதற்றம், இந்த தலைமுறை இளைஞர்களின் தெளிவு, நகர்ந்து கொண்டே இருக்கும் காலநதியை புரிந்து கொள்வதில் சிலருக்கு இருக்கும் சிக்கல் என நேர்த்தியாக இந்த நாவலை நகர்த்தி செல்கிறார் பெருமாள்முருகன்.
வரிக்கு வரி இழையோடி இருக்கும் அங்கதம் வாசிப்பு அனுபவத்தை மேலும் இலகுவாக்குகிறது.
கைபேசி அதனை தவறாக பயன்படுத்தி பணம் செய்யும் இளைஞர்கள் என்பதை கடந்து கழிமுகம் நாவலுக்கும் பொள்ளாச்சி பாலியல் தாக்குதல் சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
முழுக்க முழுக்க தனி மனிதர்களின் மனசிக்கல் குறித்து பேசும் இந்நாவலை வெறும் புனைவாக மட்டும் கடந்து சென்றுவிட முடியாது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்