'2.0 படத்தின் வசூல் 500 கோடி ரூபாயைத் தாண்டியது' - லைகா தகவல்

ரஜினிகாந்த் நடித்து ஷங்கர் இயக்கிய 2.0 படத்தின் வசூல் 500 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக அந்தப் படத்தைத் தயாரித்துள்ள லைகா புரொடக்ஷன்ஸ் தெரிவித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் இந்த வசூல் எட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த மொழியில் எவ்வளவு வசூல் என்பதையோ இந்தியாவில் மட்டும் எவ்வளவு வசூல் என்பதையோ தயாரிப்பு நிறுவனம் தெளிவாகச் சொல்லவில்லை.

ஆனால், ரஜினிகாந்த் நடித்து இந்தியில் வெளியான படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக வசூலை ஈட்டியிருக்கிறது. இந்தப் படத்தை இந்தியில் விநியோகம் செய்த கரண் ஜோகர், இந்தப் படம் உலகம் முழுவதும் 500 கோடி வசூலித்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சுமார் 550 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட 2.0 திரைப்படம், முதல் நான்கு நாட்களில் 400 கோடி ரூபாயை வசூலித்ததாக லைகா நிறுவனம் தெரிவித்தது.

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு திரையரங்கிலும் வசூலாகும் தொகை எவ்வளவு என்பதை துல்லியமாக கணக்கிட்டுச் சொல்ல எந்த அமைப்பும் இல்லை என்பதால், தயாரிப்புத் தரப்புத் தெரிவிக்கும் தொகையே அந்தப் படத்தின் வசூலாக குறிப்பிடப்படுகிறது.

இந்தப் படம் எந்த மொழியில், எந்தப் பகுதியில் எவ்வளவு வசூலைப் பெற்றது என்ற தகவலை லைகா நிறுவனத்திடம் கேட்டபோது, அவர்கள் தற்போது அந்தத் தகவல் இல்லையெனக் கூறினர்.

2019 மே மாதம் சீனாவில் இந்தப் படம் 10,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதனால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: